By London Swaminathan; post No. 753 dated 21st December 2013.
அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:
“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”
பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!
இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)
இந்த அவ்வையாருக்கு முன் வாழ்ந்த, பாரதத்தின் மிகப் பெரிய தத்துவ ஞானி ஆதி சங்கரர், அவருடைய ‘பஜ கோவிந்தம்’ என்னும் பாடல் நூலில் கூறுகிறார்:
சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)
பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.
மேற்கூறிய நிலைக்கு எடுத்துக்காட்டாக, நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைக் கூறலாம்.
பகவான் ரமணர் எழுதிய ‘உள்ளது நாற்பது’ நூலின் அனுபந்தத்தில் ஆதி சங்கரரின் மேற்கூறிய ஸ்லோகத்தைத் தமிழில் தந்துள்ளார்.
கண்ண பிரானும், பகவத் கீதையில், சொல்லுவார்:
பார்த்தா! எப்பொழுது மனத்தில் உள்ள ஆசைகள் அனைத்தையும் தூரத் தள்ளுகிறானோ, ஆத்மாவிடத்தில் ஆத்மாவினாலேயே அடைந்த மகிழ்ச்சி நிறைந்த அவன் அப்போது ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் (கீதை 2—55)
ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நிலையை இன்னும் அழகாக விளக்குவார்: “நுனியில் பிளவு உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போல ஆசைகள் அற்பம் இருந்தாலும் ஒருவன் ஈசுவர சந்நிதானத்தை அடையமாட்டான்”.
வள்ளுவர் அறிவுரை:
தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:
“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)
ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !
அறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (குறள் 441)
உற்ற துன்பத்தை முதலில் நீக்கி, மீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (442)
கதாசரித் சாகரம் என்ற உலகிலேயே மிகப் பெரிய கதை நூலிலும் அழகான மேற்கோள்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பெயர் தெரியாத ஒரு புலவர் எழுதிய விவேக சிந்தாமணி நூலில் அதற்கு இணையான மேறோள்கள் இருப்பதால் அந்தப் பாடல்களைத் தருகிறேன். எளிய தமிழ் என்பதால் பொழிப்புரையே தேவை இல்லை:
இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)
மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!
அறிவுள்ளோர் தமக்கு நாளும்
அரசரும் தொழுது தாழ்வார்
நிறையொடு புவியில் உள்ளோர்
நேசமாய் வணக்கம் செய்வார்
அறிவுள்ளோர் தமக்கும் யாதோர்
அசடது வருமே யாகில்
வெறியர் என்று இகழார் என்றும்
மேதினி உள்ளோர் தாமே!
அறிவுள்ளோருக்கு அரசரும் பணிவர் என்பது சொல்லாமலே விளங்கும் !
அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.
சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!
நாமும் ஞானிகளின் சந்நிதியில் நலம் பெறுவோம்!
சத் சங்க பஜனைகளில் பங்கு கொள்ளுவோம்!!
contact swami_48@yahoo.com



Right Off Center
/ December 22, 2013Thank you. Very pleasant and righteous article.