Samadhi at Nerur near Karur
Compiled by London Swaminathan
Post No. 883 Dated 3rd March 2014.
சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் ஒரு அவதூத (நிர்வாண) சுவாமிகள். சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவருடைய தாய் பெயர் பார்வதி, தந்தை பெயர் மோக்ஷ சோமசுந்தர அவதானி. அவர்கள் தெலுங்கர்கள். அவருடைய இயற் பெயர் சிவராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. கும்பகோணத்தில் வசித்தார். புகழ்பெற்ற யோகிகளான ஸ்ரீஈதர அய்யாவாள், போதேந்திர சரஸ்வதி ஆகியவர்களுடன் படித்தவர். அவருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன. இது பற்றி பரமஹம்ச யோகானந்தா அவருடைய “ஒரு யோகியின் சுயசரிதை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இப்போது விஞ்ஞான கற்பனைக் கதைகளில் படிக்கும் ‘டெலி ட்ரான்ஸ்போர்டேஷன்’ முதலியவற்றை நடத்திக் காட்டி இருக்கிறார். அதாவது ஒரு இடத்தில் இருந்துகொண்டு பல இடங்களில் தோன்றுதல், மற்றவர்களையும் அப்படி அழைத்துச் செல்லல், காலப் பயணம் செய்தல் முதலியன. கோபியர்களுடன் விளையாடிய கிருஷ்ண பரமாத்மா ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் இருந்ததாக நமது புராணாங்கள் கூறுவதைப் போல.
பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் வாழ்ந்த இவர் சமாதி கூட, மூன்று இடங்களில் இருக்கிறது. அதாவது மூன்று இடங்களில் இறந்தார்!. வீரனுக்கு ஒரே சாவு, கோழைகளுக்கு ஆயிரம் முறை சாவு என்ற பழமொழி கூட இவரது அற்பதங்களில் தப்பாகிப் போய்விட்டது. புலன் ஐந்தையும் வென்ற இம்மாவீரரின் சமாதி பாகிஸ்தானில் கராச்சி, இந்தியாவில் மதுரை அருகில் மானா மதுரை, கரூர் அருகில் நெரூர் ஆகிய மூன்று இடங்களில் இருக்கின்றன( காண்க ‘விக்கிபீடியா’).
இனி அபிதான சிந்தாமணி என்ற பழைய தமிழ் என்சைக்ளோபீடியாவில் உள்ள விஷயத்தைத் தருகிறேன்:
இவர் கரூர் பட்டினத்தில் சற்றேரக்குறைய (150) வருஷங்களுக்கு முன் வசித்தவர். பிறப்பால் வேதியர். காவிரி தீர்த்தத்தின் கண்ணுள்ள திருவிசைநல்லூரில் கல்வி பயின்றவர். இவருடன் கல்விபயின்ற சகபாடிகளினும் இவர் நுண்ணறிவினராய் விளங்கினர். இவருடன் கல்வி பயின்றோர் மகாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியார் முதலாயினோர்.
அவர் கல்வி பயின்று வருகையில் தமது பார்யை பருவமடந்தனள். இதனால் இவரது தாயார் அந்நாளை மங்கல நாளாக விசேடங்கொண்டாடப் பலவித உணவுகளைச் சமைத்தனள். அன்று யோகீந்திரர் வழக்கம்போல உணவுகொள்ளச் சென்று நடப்பதுணர்ந்து காலந்தவறி உணவு கிட்டுமென எண்ணி, இச் சம்சார துக்கத் தொடக்கத்திலேயே உணவுகிட்டாத் துக்கம் தொடங்குமாயின் இதனை மேற்கொள்ளின் வெகு துக்கமாமெனவெண்ணி அது முளைக்கும்போதே கெடுக்கவெண்ணிப் பரிபாகமுடையோராய்ப் பரமசிவேந்திர சரஸ்வதியென்னு மாசாரியரை யடைந்து ஞானோபதேசம் பெற்றனர்.
இவர் தம் குருவிடம் ஞானோபதேசத்திற்கு வருபவரை பற்பல வினாக்கள் வினவி அவமதித்து வருவதையுணர்ந்த ஆசாரியர் உன் வாயெப்போது அடங்குமென, அன்று முதல் மவுனம் சாதித்து சிஷ்டை கூடிப் பித்தர்போல் சர்வசங்கப் பரித்தியாகஞ் செய்து சமபுத்தியுடையராய் வீதிகளில் கிடக்கும் எச்சிலுண்டு திரிவாராயினர். இவரைக் கண்டோர் யாவரும் பித்தரென்று பரிகசிப்ப உலாவி வந்தனர். இவர் தம்மூர்விட்டுப் பரதேச சஞ்சாரியாய் ஆண்டுள்ள காடுகளில் ஒருவருக்கும் புலப்படாது நிஷ்டையிலிருப்பர்.
ஒருமுறை காவிரி நதியில் மணல்திடரில் நிட்டை புரிகையில் காவிரி வெள்ளங்கொண்டு இவரை மூழ்த்த இவர் மணலில் புதைந்திருந்தனர். கரையினின்றோர் யோகியார் மூழ்கினதைக் கண்டு வருந்திச் சென்றனர். மூன்று மாதங்கள் கழிந்த பின் அரசன் ஆணையால் மணலையகற்ற வேலையாட்கள் புகுந்து நதியில் வெட்டுகையில் ஒருவன் வெட்டிய மண்வெட்டி தடைப்பட்டதுணர்ந்து மண்வெட்டியைப் பார்க்க அதில் ரத்தக் கறை இருந்தது கண்டு மெல்ல அவ்விடமிருந்த மணலையொதுக்க யோகியர் நிஷ்டை கூடியிருக்கக் கண்டு வெளிப்படுத்தினர்.
Sringeri Jagadguru Sri Shanaracharya doing abishek at the Samadhi
இவர் கரூரையடுத்துள்ள கிராம வழி நள்ளிருளில் செல்லுகையில் நெற்போர் படுப்பர் காவலிருந்த இடம் வழியறியாது சென்று, இடறி விழுந்தனர். காவற்காரர் இவரைக் கள்ளர் என தடிகொண்டெறியக் கைதூக்க, அக்கைகள் விழுந்து அவர்களின் தலைவன் வருமளவும் தம்பிக்க வேலையாட்களஞ்சிப் பணிய தம்பித்தல் நீக்கிச் சென்றனர்.
ஒருக்கால் ராஜ அதிகாரிகளுக்கு விறகிற்காக ஆட்கள் போதாமையால் இவரையும் அதிகாரிகள் ஒரு ஆளாகக் கொண்டு சுமைதூக்கிச் செல்ல யோகீந்திரரும் அவ்வாறு தூக்கிச் சென்று அந்த ஆட்களிட்ட விறகுச் சுமைகளின் மேல் இவர் சுமகளை இட அக்கட்டைகள் முழுதும் தீப்பற்றி எரிந்தன.
ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி
இவரைக் கண்ட பிள்ளைகள் இவரைப் பித்தரென்று பரிகசிக்க இவர் தமக்குக் கிடைத்த பொருள்களை அவர்க்கு பகுத்தளித்து வருவர். இவரை அப்பிள்ளைகள் மிக்க தூரமாகிய மதுரையில் நடக்கும் ரிஷப வாஹன உற்சவங் காண அழைக்க இவர் அப்பிள்ளைகளைத் தமது முதுகின்மேல் ஏற்றிக் கொண்டு ஒரு கணம் கண்ணை மூடிக்கொள்ள கட்டளையிட்டு மறுகணத்தில் திருவிழா தரிசனஞ் செய்வித்து அச்சிறுவர்க்கு வேண்டிய சிற்றுண்டிகளும் வாங்கித் தந்து விடியுமுன் வீட்டில் சேர்த்தனர். பிள்ளையர் தந்தையோர் முதலியோர்க்கு அற்புதச் செய்கை அறிவித்துச் சிற்றுண்டிகளையும் காட்டினர்.
இவர் சிவராத்ரி முதலிய புண்ய காலங்களில் காசி முதலிய பல தேசங்களில் தரிசனம் செய்யக் கண்ட பலரிவரை யொரே காலத்தில் வெவ்வேறு தலங்களிலும் கண்டதாகக் கூறுவர். தம்மைப் பின் தொடர்ந்த பிரம்மச்சாரிக்கும் ஒருகணத்தில் கண்ணை மூடிக்கொள்ளக் கட்டளையிட்டு ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசனஞ் செய்வித்து மறைந்தனர். பிரம்மச்சாரி யோகியாரைக் காணாது நீருக்குவந்து நிஷ்டை கூடியிருக்கக் கண்டனர். யோகீந்திரர் இவரிடத்துக் கருணை கொண்டு வித்யா பலமுண்டாக அருள் புரிந்தனர்.
Picture of Bilva Tree at the Samadhi
முஸ்லீம் பக்தர்
மற்றொருகால் இவர் நிர்வாணியாகச் சஞ்சரிக்கையில் தேவியருடன் வந்திருந்த மகமதிய தலைவனவரிருந்த வழிசெல்ல, மகமதியன் இவரைச் சினந்து ஒரு கையை வெட்டினன். இவர் அதனையறியாது செல்ல மகமதியனிவனைப் பெரியறெண்ணிப் பின்றொடர நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.
இவர் சிவதர்சனம் செய்யப் புகுந்து மந்திரார்ச்சனை செய்கையில் அந்தரத்தில் இருந்து ஓர் ஓர் மலர் வீழ்வதுண்டு. இவர் 1738ஆம் வருஷத்தில் புதுக்கோட்டைத் திருவரங்குளத்தைச் சார்ந்த காட்டில் திரிந்து கொண்டிருக்கையில் புதுக்கோட்டைத் தொண்டைமான் அதிக விரக்தியுள்ளவராகையில் இவரை (8) வருடம் பின் தொடர இவர் அவர்க்கு மணலில் சில உபதேச மொழிகளையெழுதி மற்றவைகளைத் தமது சகபாடியாகிய கோபாலகிருஷ்ண சாஸ்திரியாரிடம் அறியக் கட்டளையிட்டனர்.
இவர் மிதுன ரவி ஜேஷ்ட சுத்த தசமியில் பரிபூரணமடைவதாகவும் அன்று காசியிலிருந்து ஒரு வேதியன் பாணலிங்கம் கொண்டுவர அவனை இவர் தாமேயிறங்கிய சமாதிக் குழிக்கருகில் பிரதிஷ்டை செய்தனர் எனவும் கூறுப. இவர் ஒரே காலத்தில் மூன்று இடங்களில் சமாதி ஆயினர் என்பர். ஆயினும் நீருரிலுள்ள சமாதி பிரசித்திபெற்றது. இவர் குருபூசை புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசர்களால் செய்யப்பட்டுவருகிறது.
இவர் செய்த நூல்கள், பிரம்மசூத்ரவிருத்தி, த்வாதசோப நிஷத்தீபிகை, சித்தாந்த கல்பாவளி, அத்வைதரஸமஞ்சரி முதலிய.
—-அபிதான சிந்தாமணி, பக்கம் 557/ 558
பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம்.
(அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது: “Do not do what you want, and then you may do what you like”).
பிரபல கீர்த்தனைகள்
‘விக்கிபீடியா’ ஆங்கிலப் பகுதி, இவர் எழுதிய நீண்ட புத்தகப் பட்டியலைக் கொடுத்துள்ளது. மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுவதாகவும் தெரிவிக்கிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.
சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும்.
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.