சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

saraswathimahal1

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

By ச.நாகராஜன்; Post No 1106; dated 14th June 2014.

அற்புதமான தமிழ் ஏடுகளையும் அரிய புத்தகங்களின் கை பிரதிகளையும் நூல்களையும் சேர்த்து வைத்துள்ள சரஸ்வதி மஹால் நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அறிவுக் கோவில். சரஸ்வதி மஹால் பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் சரஸ்வதி மஹாலின் தமிழ்ப் பணிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் என்றுமே இருந்ததில்லை. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்!

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் நம்மை வியக்க வைக்கும் ஒரு நூல்.
சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் இந்த நூலை, பல தமிழறிஞர்களும் மேற்கோள் காட்டுவது வழக்கம்!

இந்த நூல் நானுறு வருடங்களுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது. 30 அத்தியாயங்கள் கொண்டது. 49 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியை ஆராய்ந்து மூலத்தையும் தமிழாக்கத்தையும் (டி.ஆர்.தாமோதரன், எஸ்.ராஜலெக்ஷிமி, என்.சீனிவாசன் ஆகியோர் தமிழாக்கத்தைச் செய்துள்ளனர்) 1985ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள சில அரிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சில வரிகளில் காண்போம்.

1)கர்வட என்ற கிராமத்தில் குலோத்துங்கன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான்.சிறந்த சிவ பக்தனான அவனை சிவ பெருமான் சோதிக்க வந்தார். அவனும் அவன் துணைவியும் தக்க முறையில் சிவனடியாரை வரவேற்று உபசரித்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனை சோழ வம்சத்தின் அரசனாக்கினார். மது, மயன், விஸ்வகர்மா, தாதா விதாதா ஆகிய தேவ சிற்பிகள் மூலம் காவிரிக் கரையில் சோழ தேசம் அமைக்கப்பட்டது. ஐயாரப்பர் ஆலயத்தையும் திருப்பழனம் ஆலயத்தையும் குலோத்துங்கன் கட்டுவித்தான்.

2) தஞ்சாசுரனை சிவபெருமான் சூலத்தால் வீழ்த்தும் போது அவன் உயிர் பிரியும் தருணம் “என் பெயரால் இந்த நகரம் விளங்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள அந்த நகருக்கு தஞ்சாவூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

3) தேவ சோழனின் மகன் சசிசேகர சோழன் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட 60 ஆலயங்களை எடுப்பித்தான். ஒரு சமயம் காவிரியில் பெரு வெள்ளம் வர நாடே அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. 48 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வேண்ட, ‘இறைவன் காவிரியின் குறுக்கே அணை கட்டுக’ என்று அருள் பாலித்தான். அதன் படியே மன்னனும் அணை கட்டினான்.

sarasvatimahal2

4) சசிசேகர சோழனின் மகன் சிவலிங்க சோழன் திருவாரூரை ஆண்டு வந்த போது பசுங்கன்று ஒன்று தேர்ச்சக்கரத்தில் வந்து சிக்கிக் கொண்டு இறந்தது. தாய்ப் பசு அரண்மனை வாயிலை அடைந்து கதறியது. இதைக் கண்ட மன்னன் தன் மைந்தன் மீது தேர்ச்

சக்கரத்தை ஏற்றி நீதி பரிபாலித்தான். இறைவன் அருளால் இருவரும் மீண்டு எழுந்தனர்.சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான்.

5)சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

6)வீர சோழனுடைய மகன் கரிகாலன். இவன் ஹரதத்த சிவாச்சாரியாரைத் தன் குருவாகப் பெற்றான். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். துர்கேஸ்வரம் மங்களேசம் ஆம்ரவனம் ஆகிய இடங்களிலும் ஆலயங்களை அமைத்தான். ஆனால் விதி வசமாக கருங்குஷ்டம் இவனைப் பிடித்தது.

ஹரதத்தர் ஒரு மண்டல காலம் ஆலயத்திலேயே வாசம் செய்து நூற்றெட்டு மறைவல்லோரை அழைத்து ‘ஏகாதசருத்ர’ ஜபம் செய்தார். சிவபெருமான் ஹரதத்தரின் கனவில் தோன்றி ‘தஞ்சாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தென் மேற்கில் உள்ல சிவகங்கா பொய்கையில் மன்னரை நீராடச் சொல். சக்தி கூபம் கிணற்றுக்கு அருகில் உள்ள கந்தனின் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யச் சொல். அதற்கு முன் துந்தில விக்னேசர் (தொந்தி விநாயகர்) ஆலயத்தை நிர்மாணம் செய்யச் சொல்” என்று இப்படி வரிசையாகக் கட்டளைகளை இட மன்னனும் அனைத்தையும் செய்து கருங்குஷ்டம் நீங்கப் பெற்றான்.
thanjavur-big-temple

7)கரிகாலனின் மகன் பீம சோழன் கேரள ராஜகுமாரி வித்யுல்லதா (மின்னற்கொடி)வை மணந்தான்.திருவண்ணாமலையில் கோபுரங்களை அமைத்தான்.77 ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்தான்.

மிக நீண்ட வரலாற்றைக் கூறும் மாஹாத்மியத்தின் இதர பகுதிகளையும் இதைப் பற்றி ஆங்கிலேய அறிஞர்களின் கருத்தையும் பிரபல சரித்திர ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தையும் அடுத்ததாகப் பார்ப்போம்!

8)பீம சோழனின் மகன் ராஜேந்திர சோழன். சேர பாண்டியரை வென்று சிறப்பாக அரசாட்சி நடத்தினான்.திருமுல்லைவாயில், திருப்பூந்துருத்தி, திருவெண்ணியூர், திருநெல்லிக்கா, சிற்றேமம் ருஷிகானனம் ஆகிய ஊர்களில் சிவாலயங்களை எடுத்தான். இதைப் போன்று 80 ஆலயங்களைக் கட்டி முடித்தான்.

9) இவனது மகன் வீரமார்த்தாண்டன்.இவன் காலத்தில் வேத பாடசாலைகளும், சாஸ்திர பாடசாலைகளும் தோன்றின. அக்னிஹோத்திர வேள்விச் சாலையிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் ‘’படி’’ போலத் தோன்றியது. இவன் சுமார் 60 ஆலயங்களைக் கட்டினான்.

10) இவனது மகன் புகழ்ச் சோழன். இவன் முருக பக்தன். தனக்கு ஒரு மகன் இல்லையே என்று வருந்த முருகப்பெருமான் கனவில் தோன்றி குக பர்வதத்தை புனருத்தாரணம் செய்யச் சொல்ல அவன் அப்படியே
செய்தான். முருகனின் அருளால் ஜய சோழனை பெற்றெடுத்தான்.

thanjavur temple
11)ஜயசோழன் ஜயசோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைப் போல முக்கால் பங்கு இருக்குமாறு ஒரு ஆலயத்தைக் கட்டினான்.இவன் மகன் கனக சோழன். இவன் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து ஏரண்ட முனிவரால் காவிரியை மீட்டான். ஏரண்ட முனிவர் காவிரையை மீட்க தன் உயிரை அர்ப்பணிக்க அவர் வழிபட்ட கொட்டையூர் ஆலயத்திற்குத் திருப்பணி செய்தான்.

12) கனக சோழனின் மகன் சுந்தர சோழன். மறையோன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இடை மருதூர் சென்று வழிபட்டுத் தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இவன் மகன் கால கால சோழன். இவன் திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தினான். இவன் மகன் கல்யாண சோழன். இவன் சிதம்பரத்தில் உள்ள கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினான்.இவன் மகன் பத்ர சோழன். இவனும் தன் முன்னோர்களைப் போல பல ஆலயங்களைக் கட்டினான்.

13) நூலின் கடைசி ‘பாரா’ சிவ பெருமான் பார்வதி தேவி கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தெரிவிக்கிறது. இதன் படி பார்வதி தேவி ஸ்தலங்களைப் பற்றிக் கேட்க சிவபிரான், காவிரிக்கும் சேதுவிற்கும் இடையே சிவ க்ஷேத்ரம் – 23000, விஷ்ணு க்ஷேத்ரம் – 1000 முருகன் க்ஷேத்ரம் – 6000 விநாயகர் க்ஷேத்ரம் – 5000 காளி க்ஷேத்ரம் – 1000 நடராஜர் க்ஷேத்ரம் – 100 துர்க்கை க்ஷேத்ரம் – 3000, சாஸ்தா க்ஷேத்ரம் – 11000 இருப்பதாக அருளுகிறார்!.
enterance-gopuram-new1

பல நீண்ட சுவையான கதைகளை உள்ளடக்கிய இந்த மாஹாத்மியம் பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆராயப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு சோளா லெஜண்ட்ஸ் (Cola Legends) என்று ‘ஜர்னல் ஆஃப் ஓரியண்டல் ரிஸர்ச்’ இதழில் அவர் இது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இந்த நூல் வரலாற்று நூல் என்பதை விட்டு விட்டு க்ஷேத்திரங்களை விவரிக்கும் நூலாகவும் அங்கு பாவங்களுக்கான பரிகாரங்கள் மற்றும் பிராயச்சித்தங்களைத் தெரிவிக்கும் நூலாகவும் உள்ளது. அந்த அளவில் இது மதிப்பு வாய்ந்தது. குலோத்துங்கன் வீரன், கரிகாலன் ,ராஜேந்திரன், சுந்தர சோழன் ஆகியோரைத் தவிர ஏனைய மன்னர்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரிகாலனுக்கு கருங்குஷ்டம் இருந்தது என்பதை இந்த ஒரு நூலில் மட்டுமே காண முடிகிறது. மனு நீதிச் சோழன் வரலாற்றை அப்படியே சிவலிங்க சோழன் வரலாற்றில் காண முடிகிறது. இருந்தாலும் காவிரித் தலங்களின் மகிமை பற்றியும் அதன் புராதன பழமையையும் பற்றி இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலை மேற்கோளாகப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் காட்டுவது வழக்கம்.

மக்கென்ஸி என்பவரிடம் இருந்த இந்த நூலின் ஒரு கைப்பிரதி அதிர்ஷ்டவசமாக டெய்லர் என்னும் அறிஞரால் மீட்டெடுக்கப்பட்ட
தால்தான் இந்த நூல் பற்றி அறிய முடிந்தது. இந்த நூலின் இதர பிரதிகள் இங்கிலாந்து சென்றிருக்கக் கூடும். அவைகள் கிடைக்க வில்லை. தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா இதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதன் மூலமாகத் தான் சம்ஸ்கிருதத்தில் இருந்த க்ஷேத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அறிய முடிந்தது.

த்ருதிஸ்தலம் என்பது திருப்பண்டுருத்தி என்றும் கடேசம் என்பது திருக்கடையூர் என்றும், த்ரிகோடிகா என்பது திருக்கோடிக்காவல் என்பதும் வால்மீகநகரா என்பது திருவாரூர் என்பதும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாலேயே அறிய முடிந்தது.

Thanjavur_Brihadeeswar

மொத்தத்தில் சுவையான ஒரு சோழ புராணத்தைப் படித்த மகிழ்ச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம், பண்பாடு, கோவில்கள் மன்னர்கள் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளி வரும் நாள் எந்த நாளோ! அந்த நாளும் வந்திடாதோ .. வெகு விரைவில்!

******************* !

Leave a comment

Leave a comment