கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.—1115; தேதி-. 18th June 2014.
(((((((சங்கத் தமிழ் இலக்கியம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் மலர் மேயும் வண்டுகளாம். அழகான ‘மலர்களை’—அது தான்—மலர் விழிகளை— அதுதான் மலர் இதழ்களை— விட மாட்டீர்களாம்!!! மலர் மலராக உட்கார்ந்து செல்லும் தேனீயும் நீங்களும் ஒன்றுதானாம்!))))))
இன்று, வீட்டிற்கு கணவன் தாமதமாகவோ அல்லது ஒரு இரவு வராமல் மறு நாளோ வந்தால் பெண்கள் என்ன என்ன எல்லாம் சந்தேகப் படுகிறார்கள்! 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே கதைதான்! கணவன் தும்மல் போட்டாலே சந்தேகப்படும் பெண்ணை திருவள்ளுவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது 1500 ஆண்டுகளுக்கு முன்.
“ நான் தும்மினேன். தீர்க்க ஆயுஸ்! Bless You ! (நீண்ட ஆயுள் உமக்கு) என்று வாழ்த்தினாள். திடீரென அழுதாள்! உண்மையைச் சொல், எந்தக் காதலியை நினைத்தவுடன் தும்மல் வந்தது? என்றாள்” ( குறள் 1317)

“ இன்னொரு தும்மல் வந்தது .அடக் கடவுளே. இவளுக்கு முன் தும்மினால் இன்னும் பிணங்குவாளே என்று அடக்கினேன். அதையும் பார்த்துவிட்டாள் அந்தக் கள்ளீ !! உன்னை நேசிக்கும் மற்ற பெண்கள் உன்னை நினைப்பதை மறைக்கத்தானே தும்மலை அடக்கினாய்? என்று என்னைப் பிடித்துக் கொண்டாள் (குறள் 1318)
அதற்கும் முன் சங்க இலக்கியத்தில்:-
நற்றிணப் பாடலில் ஆண்களை மலர் மேயும் வண்டு என்று தோழி சாடுகிறாள். பாடல் 290 மருதன் இளநாகனார் பாடியது:
“நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென்னாரே”
பொருள்: தோழி கூறுவது: நெடிய நீரை உடைய பொய்கையிலே நடுயாமத்தில் தண்ணிதாய் நறுமணங்கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டெனச் சொல்லுவாரல்லாமல் நல்ல ஆண்மகனென யாரும் கூறார் ( நள்ளிரவிலே சென்று புதிய பரத்தையை விரும்பித் துய்ப்பவன் என்பாள் நடுயாமத்து விரியும் பூவை உண்ணுகின்ற வண்டெனக் கூறினாள் (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் உரை)
காளிதாசனும் சாடுகிறான் ஆண்களை!!
தமிழ்ப் புலவர்களுக்கு சளைத்தவனா காளிதாசன்? அவனும் ஆண்களை வசை பாடுகிறான். சாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற வடமொழி நாடகத்தில் நாடக மேடைக்குப் பின்னால் இருந்து வரும் பாட்டு மூலம் பழைய காதலி சகுந்தலையை மறந்து போன மன்னன் துஷ்யந்தனை இடித்துரைக்கிறான் கவிஞன். அவன் கொடுக்கும் இடி, துஷ்யந்தானுக்கு மட்டுமல்ல. அததனை ஆண்களுக்கும்தான்.
“முன்னர் மாமரப் பூவில் தேன் உண்டாய். இப்போது தாமரைக்குப் போய்விட்டு அதை நுகர்கிறாயே. எப்போதும் புது பூவை நாடுகிறாயே” – என்பது பாட்டின் பொருள்.
Kalidasa in Shakuntalam Drama (Act 5- verse 8)
O you honey pilfering bee!
Greedy as ever for fresh honey
Once you lovingly kissed
The mango’s fresh spray of flowers
Is she then forgotten so soon?
You are content now merely to stay
Within the full blown lotus
பழைய கால கருப்பு/வெள்ளை திரைப் படத்தில் ஒரு இனிய பாடல் வருகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் இடித்துரைக்கும் சுவைமிகு பாடல்:–

பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்,
வெடுக்கின்னு முறைப்பாங்க
ஆண் : ஹா! ஹா!
பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் – இந்த (பெண்)
மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க – திரு
மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க

பெண் : ஓஹோ ஹோ ஹோ!
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்
பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வருவாங்க
ஆண் : ஓஹோ!
பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க (ஆண்)
ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க
பெண் : ஆமா!
ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்)
பெண் : மானே தேனே என்பதெல்லாம் – ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே
ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் – ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே
பெண் : ஹா…ஹா…ஹா…

ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)
ஆண் : இந்தப்
பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்
[நான் வளர்த்த தங்கை,1958] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 – 1959

(அனைவரும் கேட்க வேண்டிய அருமையான பழைய படப்பாட்டு. கூகுள் செய்து கேட்கலாம். நானும் அப்படித்தான் கேட்பேன்).
ஆண்களே ! நீங்கள் கேள்விக் குறியா? அல்லது ஆச்சரியக் குறியா?
Pictures are used from various sites; thanks.
—சுபம்—


You must be logged in to post a comment.