நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!

War formation in MBh

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1231; தேதி 13 ஆகஸ்ட் 2014.

ஆறு பருவங்கள் — நவ ரசம் — நால் வேதம் — எண்வகைத் திருமணம் — நால் ஜாதி — சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் — தென்புல வாழ்நர் (இறந்தோர்)—வேத கால இந்திரன், வருணன் — அறம் பொருள் இன்பம் — முதலிய பல்வேறு இந்து மதக் கொள்கைகளைத் தொல்காப்பியரும் சங்க கலப் புலவர்களும் விதந்து ஓதி இருப்பது குறித்து 1000 கட்டுரைகளில் கண்டோம். இதோ இன்னும் ஒரு கட்டுரை.

இதில் மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால் வகைப் படைகளைக் காளிதாசனும், அர்த்தசாஸ்திரம் எழுதிய பிராமணன் சாணக்கியனும், வியாசரும், கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச்சும் எப்படி எழுதினரோ அதே போல சங்க காலக் கவிஞர் பெருமக்களும் போற்றிப் பாடி இருப்பதைக் காணலாம்.

இந்தியர்களை 1)ஆரியர்கள், 2)திராவிடர்கள், 3)முண்டா இன மக்கள், 4)சுருட்டை முடி—கரியவிழி—போண்டா மூக்கு ஆதித் திராவிட மலை ஜாதியினர் எனப் பிரித்து இனவெறிக் கொள்கை புகுத்தி, விஷ விதைகளைத் தூவியவர்களைப் புற நானூற்றுப் புலவர்கள் புரட்டிப் புரட்டி அடிப்பதைக் காணலாம். மஹாபாரதத்தில் உள்ள தேர், யானை, குதிரை, காலாட் படைகளை காளிதாசன் பாராட்டிய மாதிரியில் அப்படியே சங்க காலப் புலவர்களும் போற்றுவதில் இருந்து தெரிவது என்ன?

Back to Godhead - Volume 12, Number 05 - 1977

இது ஏக பாரதம்; இங்கு வடக்கு தெற்கு என்னும் வேறு பாடு கிடையா; அங்கு என்ன இருந்ததோ அதேதான் இங்கும் பின்பற்றப்படும்; தமிழ் கலாசாரம், வடக்கத்திய பண்பாடு என்று வேறு பாடு எதுவும் இல்லை; சிறிய வேறு பாடுகள் உண்டு. மணப்பாறையில் முறுக்கு நன்றாக இருந்தால், திருநெல்வேலியில் பெட்டி வெல்லம் நன்றாக இருக்கும்; பம்பாயில் ஹல்வா ருசியாகக் கிடைத்தால் கல்கத்தாவில் ரஸகுல்லாவும் டில்லியில் பூசனிக்காய் அல்வாவும் ருசியாகக் கிடைக்கும். இவ்வளவுதான்! இதெல்லாம் மேம்போக்கான சிறிய வேறு பாடுகள்! ஏனெனில் எல்லாம் சர்க்கரை-வெல்லம்-மாவின் கலப்புதான்!

அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த இந்தியப் படை: புளுடார்ச் சொன்னது
அலெக்ஸாண்டரை எதிர்த்து தோல்வி அடைந்த இந்திய மன்னன் புருஷோத்தமன் (போரஸ்) ஒரு சின்ன அரசன். அவனை வெல்வதற்கே அலெக்ஸாண்டர் படாத பாடு பட்டார். மகத சம்ராJயத்தின் மாபெரும் படை பலம் உலகியே நடுநடுங்க வைக்கும் அளவு கடலினும் பெரிது. இதைக் கேட்டவுடன் அலெக்ஸாண்டரின் படைத் தளபதிகள் முனுமுனுக்கத் துவங்கினர். மேலும் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு வந்தது நாடு பிடிப்பதற்கு இல்லை. இந்து மத சாமியார்களைச் சந்தித்துப் பேசி அவர்களை கிரேக்க நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவன் லட்சியம் ( காண்க எனது பழைய கட்டுரை:– நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் ).

மகத சாம்ராஜ்யப் படைகள் எண்ணிக்கை பற்றி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச் தரும் தகவல்:

(ரத) தேர் — 7000
(கஜ) யானை — 8000
(துரக) குதிரை – 80,000
(பதாதி) காலாட்படை வீரர்கள்—2,00,000

அந்தக் காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன. இதில் 16 நாடுகள் மஹா சாம்ராஜ்யங்கள். இதில் இரண்டு மூன்று நாடுகள் சேர்ந்தால் போதும். அலெக்ஸாண்டரைக் கதறக் கதற அடித்திருக்கலாம்! கிரேக்கர், சகரர் படைகளை விக்ரமாதித்தனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அடித்து விரட்டியதை நாம் அறிவோம்.

Battle_at_Lanka,_Ramayana,_Udaipur,_1649-53

சம பல தர்ம யுத்தம் : காளிதாசன் சொன்னது

பத்தி பதாதிதம் ரதினம் ரதேசஸ் துரங்கசாதீதகாசிரூடம்
யந்தா கஜஸ்யாப்யபத கஜஸ்தம் துல்ய ப்ரதித்வந்த்வீ பபூவ யுத்தம்
—ரகுவம்சம் 7—37

காலாட்படை வீரன், மற்றொரு காலாட்படை வீரனையே எதிர்த்தான். தேர்வீரன் தேர்வீரனையும், குதிரை வீரன் இன்னொரு குதிரை வீரனையுமே எதிர்த்தான். யானையை அடக்குபவன் யானை வீரனையே எதிர்த்தான். இவ்வாறு யுத்தம் சமமான பகைவனை உடையதாக இருந்தது (ரகு 7—37). அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடத்தினார்கள். பொதுமக்களைத் தாக்க மாட்டார்கள். புறமுதுகு காட்டி ஓடுவனைக் கொல்ல மாட்டார்கள். சம பலம் உடையவர்கள் சண்டையில் மோதுவார்கள். காளிதாசனும் பல இடங்களில் நால்வகைப் படைகளைப் பகர்வான்

good picture

சங்கப் புலவர்கள் சொன்னது

சங்க இலக்கியத்தில் மஹா பாரத கால நால்வகைப் படை முறையே பின்பற்றப்பட்டது. இது சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. மஹாபாரதத்தில் வரும் ‘’ஆநிறை கவர்தல்’’ தமிழிலும் உண்டு. இதோ நால்வகைப் படை பற்றி வரும் குறிப்புகள்:–

கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும்
—-மதுரை மருதன் இளநாகன், புறம் 55

நெடுநல் யானையும், தேரும், மாவும்
படை அமை மறவரும், உடைய யாம் என்று
—நெடுஞ்செழியன், புற நானூற்றுப் பாடல் 72

வளிநடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனா அ
கடல் கண்டன்ன ஒண்படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
–மாடலன் மதுரைக் குமரனார், புற நானூற்றுப் பாடல் 197

பாடல் 239 பேரெயின் முறுவலார், 345 அடைநெடுங் கல்வியார், 351 மதுரைப் படைமங்க மன்னியார், 368 கழாத்தலையார், 377 உலோச்சனார் ஆகியோரும் நால்வகைப் படைகளைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் மிகப் பழைய பகுதி என்பதால் புறநானூற்றில் இருந்து மட்டும் எடுத்துக் காட்டினேன். தமிழ் இலக்கியம் முழுதும் உள்ள நால்வகைப் படைகளைக் குறிக்க வேண்டுமானால் தனி நூலே எழுத வேண்டியிருக்கும். மாபாரத கால வழக்கத்தை தமிழர்கள் — அதற்கு 3000 ஆண்டுகளுக்குப் பின் —அப்படியே பயன்படுத்தினர்.

( களிறு=யானை; மா, இவுளி, பரி= குதிரை, மறவர்= காலாட்படை)

Krishna_Narakasura

வியாசன் சொன்னது

மாபாரத யுத்தத்தில் பாண்டவர் தரப்பில் ஏழு அக்க்ஷௌகினி (பட்டாளம்) சேனையும் கௌரவர் தரப்பில் 11 அக்க்ஷௌகினி (பட்டாளம்) சேனையும் மோதின. ஒரு அக்க்ஷௌகினி (பட்டாளம்) என்பதில்

தேர் (ரத) – 21,870
யானை (கஜ) – 21,870
குதிரை (துரக) – 65,610
காலாட்படை (பதாதி) வீரர்கள் – 109,350

இருப்பார்கள். இதை பதினெட்டு என்னும் எண்ணால் பெருக்கினால் வரும் தொகையே மாபாரத யுத்தத்தில் போரிட்டோர் எண்ணிக்கை ஆகும்!!! இவ்வளவு பெரிய எண்ணிக்கை நம்பாதவர்களும் நால் வகைப் படைகள் இருந்ததை மறுப்பதற்கில்லை. இதை மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட நந்த வம்சம் பற்றி ப்லூடார்ச் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையே என்று தோன்றும். ஏனெனில் பாரத நாடு முழுதும் உள்ள சேனைகள் போரில் பொருதின.

elephant attack

சாணக்கியன் சொன்னது

சாணக்கியன் என்னும் பிராமண அறிஞன் உலகின் முதலாவது பொருளாதார நூலை எழுதிய மாபெரும் அறிஞன். அவன் எழுதாத ராஜாங்க விஷயமே இல்லை. இன்று பல நாடுகள் பின்பற்றும் தூதர், உளவு பார்க்கும் முறை, நட்புறவு, சாம–தான–பேத–தண்டம் என்னும் சதுர்வித உபாயங்கள் முதலிய அத்தனை பற்றியும் அர்த்த சாஸ்திரம் என்னும் நூலில் அற்புதமாக — மிக அற்புதமாக – எழுதிவிட்டான். நால் வகைப் படை அமைப்பு பற்றி எழுதிய அவன் ஒவ்வொரு பதவியில் உள்ளவர்களுக்கும் என்ன சம்பளம் என்றும் எழுதி இருக்கிறான்!!!

சதுரங்கம் என்னும் விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. இதற்கு இந்த நால்வகைப் படைகளே காரணம். மேலும் நான்கு என்ற எண் இந்துக்களுக்கு மிகவும் பிடித்த எண். —- ‘’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’’ —- என்பது தமிழ் பழமொழி ( நாலு=வெண்பா, இரண்டு=குறட்பா ). நாலு என்பது உறுதியைக் குறிப்பதால், யுகம், ஜாதி, வேதம், பிரம்மாவின் மானச புத்ரர்,, நால்வர் (சைவப் பெரியார்), படைகள், உபாயங்கள் என்று நூற்றுக் கணக்கான விஷயங்களை இந்துக்கள் நான்காகப் பிரித்தனர் (காண்க: எனது பழைய கேள்வி-பதில் ‘’நீங்கள் நாலும் தெரிந்தவரா?’’)

வாழ்க தமிழ்; வளர்க ஒருமைப் பாடு!!

Leave a comment

Leave a comment