மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 3

dahamsonda paitings

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1297 தேதி: 19 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஏழாவது கட்டுரை.

(( இலங்கையில் தமிழ் செல்வாக்கைக் காட்டும் 20 விஷயங்களை முதல் இரண்டு பகுதிகளில் காண்க. ))

21.சோழ பிக்கு போர்க்கொடி
அத்தியாயம் 36-லும் 37-லும் சோழநாட்டு பிக்கு சங்கமித்ரன் இலங்கைக்கு வந்து பெரும் குழப்படி செய்ததைப் படிக்கிறோம். இலங்கையில் புத்தபிட்சுக்கள், அரசாங்கப் பணிகளில் குறுக்கிடுவது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் அங்குள்ள பௌத்தர்களிடையே பெரும்பிளவை ஏற்படுத்தி பழம்பெரும் கட்டிடங்களான மஹாவிஹாரை, லோகபஸாதா ஆகியவற்றை இடிக்கச் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராணி, ஒரு ஆளை அனுப்பி அவரையும் அவருக்கு உதவி செய்த மந்திரியையும் கொன்றுவிடுகிறாள். மகாசேனன் (கி.பி..275—301) காலத்தில் இது நடந்தது. 37ஆம் அத்தியாயத்துடன் மஹாவம்சமும் முடிவடைகிறது.
இதனால் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் மலயப் பகுதியும் சோழ நாட்டுக் கடற்கரைகளும் இலங்கை அரசியலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது

22.தமிழ் மன்னர்கள்: ஏலாரா/எல்லாளன் (கி.மு.205 –161)
அத்தியாயம் 21 முதல் 33 வரை சோழநாட்டில் இருந்து வந்த ஏலாரா என்ற உயர்குலத் தமிழன் பற்றியும் அவனை வெற்றி கொண்ட துட்டகாமினி என்பவனின் வரலாறு பற்றியும் இருக்கிறது. 44 ஆண்டுக்காலம் இலங்கையை நீதி நேர்மையுடன் ஆண்ட தமிழ்ப் பெருந்தகை ஏலாராவைப் பற்றி மஹாவம்சம் புகழ்கிறது. அவன் இறந்த பின்னரும் இலங்கை மன்னர்கள் அவ்விடத்தில் மரியாதை செலுத்தி வந்ததையும், துட்டகாமினி பிறப்பில் இருந்தே தமிழ் விரோதியாக இருந்ததையும் மஹாவம்சம் ஒளிவு மறைவு இன்றி உரைக்கிறது.
ஏலாரா ஆட்சி நமக்குத் தெரிவிக்கும் விஷயம் — 2200 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் “ஞாலம் நடுங்கவரும் கப்பற்படை” வைத்திருந்தனர் என்பதாகும்.

“தமிழர்களுடன் சமாதானமாக வாழ்” — என்று சொன்ன தந்தைக்கு பெண்கள் அணியும் நகைகளை அனுப்பி, நீ ஒரு ஆண்மகன் அல்ல என்று தந்தையையே துட்டககாமினி இழிவு படுத்தியதையும் காணமுடிகிறது. துட்ட காமினி 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டதாக மஹாவம்சம் கூறுகிறது. சந்தன், தித்தம்பன் என்ற சில பெயர்களையே மஹாவம்சம் நமக்கு அளிக்கிறது. இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் புத்தொளி பரப்பும்.

துட்டகாமினியின் புகழ்பாட ஏறத்தாழ மஹாவம்சத்தின் மூன்றில் ஒருபகுதியை ஒதுக்கியிருப்பதையும் காணமுடிகிறது. மஹாவம்சம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதைவிட இலங்கையில் புத்தமதத்தின் வளர்ச்சியை வருணிக்கும் நூல் என்பதே பொருத்தமாக இருக்கும்!!

painting5

23. ஏழு தமிழ் மன்னர்கள் (கி.மு 104-ஐ ஒட்டிய காலம்)
அத்தியாயம் 33 (பத்து அரசர்கள்): வட்டகாமனி ஆட்சி செய்த காலத்தில் ரோஹணாவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்கிய ஏழுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். “ஆட்சியை ஒப்படைத்துவிடு” — என்று செய்தியும் அனுப்பினர். ஆனால் கூரிய மதிபடைத்த வட்டகாமனி, தனியாக தீசனுக்குச் செய்தி அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான். அந்தப் பிராமணனும் உடனே தமிழர்களை எதிர்த்தான், ஆனால் தோற்றுப் போனான். ஏழு தமிழர்களில் ஒருவன் ராணி சோமதேவியைக் கல்யாணம் செய்துகொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான். மற்றொருவன் புத்தரின் பிட்சா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் சென்றான்.

(பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரம் பிக்ஷா பாத்திரம். பிச்சை என்பது ‘பிக்ஷா’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த சொல். ஆதிகாலத்தில் வேதம் கற்கும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று “பவதி பிக்ஷாம் தேஹி” என்று வேண்டுவர். மதுரையில் வேத பாடசாலை மாணவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து இப்படிக் குரல் கொடுத்தது இன்றும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. உடனே எனது தாயார் அன்னத்தை அவர்கள் பாத்திரத்தில் போடுவார். அதை அவர்கள் குருநாதருடன் பகிர்ந்துகொள்வார்கள். வள்ளுவனும் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” — என்ற குறளில் விருந்தினர் பற்றிப் பேசுகிறார்).

ஏழு தமிழரில் ஐவர் மட்டும் தங்கி இலங்கையை ஆண்டனர். புலஹதன், பாஹியா, பணயமாரன், பிழையாமாறன், தாதிகன் என்ற ஐவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டு அடுத்தடுத்து ஆண்டனர். மொத்தம் ஆண்ட வருடங்கள் 14 ஆண்டு 7 மாதம்.

இந்தப் பெயர்களில் சில தமிழ்ப் பெயர்கள் போலத் தோன்றவில்லை. மாறன் என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டி நாட்டுக்காரர்கள். தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் பணய மாறன் என்ற பெயர் உண்டு. இவைகளைப் பற்றித் தமிழ் வரலாற்றில் ஒன்றையும் காணோம். இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

((“தமில் வாள்க்க” (தமிழ் வாழ்க) என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். தமிழர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்வதோடு நிற்காமல் உண்மை நிலையையும் கண்டு உரைக்க வேண்டும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலன் என்ற ஒரிஸ்ஸா மாநில (கலிங்க) சமண மன்னனிடம் தோற்றுப்போன பாண்டியன் யார்? ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார்? என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்!))

painting4

சந்தமுக சிவன் – தமிழா தேவி
சந்தமுக சிவன் என்ற அரசனின் மனைவி பெயர் தமிழாதேவி. சந்தமுகசிவனின் தந்தை பெயர் இளநாகன். சங்க இலக்கியத்தில் அதிகம் தமிழ்ப் பாடல்களை இயற்றியவரில் ஒருவர் பெயரும் இளநாகன். ஆகவே இந்தத் தமிழதேவி தமிழ்நாட்டுத் தொடர்புடைய பெண்ணே.

சிங்களவரும் தமிழரும் ரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது.

24.மிளகு
துட்டகாமினி ஒரு முறை புத்த பிக்குகளை நினைக்காமல் மிளகு சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக மாரீசவதை விஹாரத்தையும் சேதியத்தையும் அமைத்தார். மிளகு என்றவுடன் கேரள மிளகு ஏற்றுமதி நினைவுக்கு வரும். அக்காலத்தில் அது சேர நாடு என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்தது. மிளகு சாப்பிடும் வழக்கம் உண்டு என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது

Kandy-Painting

25.சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடித்ததைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான். இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

SriLanka-3

26. வனதேவதை/உடும்பு
அதிகாரம் 28-இல் வரும் உடும்பு அதிசயம் பற்றி ஏற்கனவே மஹாவம்சத்தில் அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.
உலகப் புகழ்பெற்ற கம்போடியாவின் அங்கோர்வட் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு பட்டுப்பூச்சிதான் காரணம். உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைக் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு ஆடு தான் காரணம். சிருங்கேரியில் முதல் மடத்தைச் சங்கராச்சார்யார் ஸ்தாபிக்க தவளைக்குக் குடைபிடித்த பாம்புதான் காரணம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை கட்ட முயலும் வேட்டை நாயும் தான் காரணம் என்பதை எல்லாம் விளக்கி நாங்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன் — Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri (3-10-2011). இதே போல வனதேவதை உடும்பு வடிவில் வந்து இந்திரனும் விசுவகர்மாவும் அனுப்பிவைத்த செங்கற்களைக் காட்டியதாகவும் துட்டகாமினி அதைப் பயன்படுதியதாகவும் படிக்கிறோம். இதுபோல தமிழ் நாட்டுக் கோவில்களிலும் உடும்பு தொடர்புடைய கோவில்கள் உண்டு

27.கோவலன் யானை அடக்கியது/ நந்திமித்ரன் யானை அடக்கியது

புத்தர் பிரான், யானையை வசப்படுத்தியது யோக சக்தியால்;
உதயணன் யானையை அடக்கியது மந்திர சக்தியால்;
கோவலன் யானையை அடக்கியது புஜபலத்தால்:

இதே போல கந்துலன் என்னும் யானை கதை மஹாவம்சத்தில் வருகிறது அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

painting3

Pictures are taken from different websites;thanks.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: