புத்த கயாவில் இருக்கும் போதி மரம் (அரச மரம், அஸ்வத்தம்)
கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:1326; தேதி:– 4 அக்டோபர் 2014.
மகா வம்சம் பற்றிய எனது கட்டுரை வரிசையில் இது 13—ஆவது கட்டுரை.
மஹாவம்சத்தில் மரங்கள் பற்றி பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. சில திடுக்கிடும் தகவல்களும் இருக்கின்றன. மௌரியப் பேரரசின் மாமன்னன் அசோகனுடைய முதல் மனைவி அசந்திமித்ரா இறந்தவுடன் தீசரட்சையை ராணியாக்கினான். தன் அழகில் கர்வம் கொண்ட அப்பெண், என்னை விட்டுவிட்டு இந்த அரசன் போதி மரத்திடம் அன்பு செலுத்து கிறானே என்று பொறாமைப் பட்டு மந்து என்னும் விஷ முள்ளைக் குத்தி மஹா போதி மரம் பட்டுப் போகும்படி செய்தாள். இது நடந்த நாலாவது வருடத்தில் அசோகனும் மரணமடைந்தான். மரமும் பட்டது அசோகனும் பட்டான் (ஆதாரம்—அத்தியாயம் 20).
இதே போல இன்னொரு விஷ மர சம்பவமும் வருகிறது. சங்கமித்திரன் என்ற அரசன், ஜாலியாக அரண்மனைப் பெண்களோடு பாசீனதீபகத்துக்குப் (கிழக்குத் தீவு) போய் நாவல் கனி உண்பது வழக்கம். இது அந்த தீவுவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாவல் மரத்துக்கு விஷமூட்டினர். அடுத்த முறை மன்னன் வந்து நாவல் பழம் சாப்பிட்டவுடன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். (ஆதாரம்: அத்தியயம்—36)
ஜாதகக் கதை ஒன்றிலும் ஒரு மாமரம் முளைக்காமல் இருக்க மந்து முள் பயன்படுத்தப்பட்ட விஷயம் வருகிறது.
மகாவம்சத்தின் 18, 19 ஆவது அத்தியாயம் முழுதும் போதிமரப் புகழ்ச்சி (அரச மரம், அஸ்வத்த மரம்) இருக்கிறது. அசோகன், போதி மரத்தை கடவுள் போல வழிபட்டதையும் மூன்று முறை தனது அரசுரிமையையே போதி மரத்துக்கு அளித்து பட்டம் சூட்டியதையும் மகாவம்சம் எடுத்து இயம்புகிறது.
போதி மரம் என்பதன் புகழ் உபநிஷதம், கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் சிந்து சமவெளி நாகரீகம் ஆகிய எல்லாவற்றிலும் காணப்படுகிறது.
இந்த மரத்துக்கு அரச மரம் என்று தமிழன் பெயர் சூட்டியதில் இருந்து அவனுக்கும் இதன் மகிமை தெரிந்திருக்கிறது என்று அறீயலாம். கண்ணன், ‘’மரங்களில் நான் அரச மரம்” என்று கீதையில் கூறியதைப் படிப்பவர் களுக்கு மேலும் நன்றாகப் பொருள் விளங்கும் (நான் எழுதிய ‘’சிந்து சமவெளியில் அரச மரம்’’ — என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க).
ஆலமர தேவதை
இன்னொரு இடத்தில் ஆலமரம் பற்றிய சுவையான கதை உண்டு. அசோகன் தனது அண்ணன் சுமணனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான. அப்போது சுமணன் மனிவி நிறைமாத கர்ப்பிணி. பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டாள். ஆல மரத்தின் தேவதை அவளை அழைத்து, ஒரு குடிசை போட்டுக் கொடுத்தது. குழந்தை பிறந்தவுடன் அவளும் நன்றி செலுத்த தன் மகனுக்கு ஆலமரம் ( ந்யக்ரோத ) என்று பெயர் வைத்தாள். இப்படி மரத்தின் பெயர் சூட்டும் வழக்கம், புத்தருக்கு முந்திய உபநிடத காலத்திலேயே உண்டு. பிப்பலாடன் (திரு. அரசமரம்) என்ற பெயர் இருக்கிறது.
மா மரம்
மந்திர மாங்கனி பற்றிய அற்புதத்தை ஏற்கனவே மகாவம்சத்தில் உள்ள அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். தோட்டக்காரன் கொடுத்த பெரிய மாம்பழத்தை அரசன் புத்த குருவிடம் (தேரர்) கொடுக்க அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டையை மன்னனிடம் கொடுத்து நடச்சொன்னார். கொட்டையை மன்னன் நட்ட இடத்தில் தேரர் கையைக் கழுவினார். அதௌ உடனே பெரிய மரமாக வளர்ந்து கனிகளை ஈன்றது. மந்திரத்தில் மாங்கனி!! (ஆதாரம் அத்தியாயம் 15)
வம்சங்களும் மரங்களும்
ஒரு நாட்டு மக்கள், மரங்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பு தருகிறார்கள், எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதெல்லாம் நாகரீக முதிர்ச்சியைக் காட்டும். சங்கத்தமிழ் இலக்கியத்திலும் காளிதாசன் காவியங்களிலும் மரங்களை அண்ணன் தம்பிகளாகவும், அக்காள் தங்கைகளாகவும் சித்தரிக்கின்றனர். இந்தியாவில் கடம்ப வம்சம், இக்ஷ்வாகு வம்சம், சுங்க வம்சம், பல்லவ வம்சம் முதலிய பல வம்சங்கள் தாவரங்களின் பெயர் கொண்ட வம்சங்களாகும் இந்தியாவின் பெயரே நாவலந்தீவு. நாவல் மரத்தின் பெயர் இது. பூமியையே ஜம்பூ, இலா, சால்மலி முதலிய மரங்களின் பெயரில் பிரித்தனர் இந்துக்கள் —- இதைப் பார்த்து தமிழ் இந்துக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம் என தாவரங்களின் பெயரிலேயே நிலப் பாகுபாடு செய்தனர்.
இந்தியாவின் புகழ்மிகு பட்டணம் பாடலிபுத்ரமும் மரத்தின் பெயரில் அமைந்த நகரமே.
நாவல் மரம் (நாவலந்தீவு = பாரத தேசம் = இந்தியா)
பறங்கிப் பழ மன்னன்
அத்தியாயம் 35: மகாவம்சத்தில் வேறொரு சுவையான செய்தியும் உண்டு. ஒரு மன்னன் புத்த பிட்சுக்கள் எல்லோருக்கும் கும்பந்தக பழம் கொடுத்தான். பறங்கிப்பழம் போன்ற இப்பழத்தின் மற்றொரு பெயர் ஆமந்த என்பதால் மன்னனின் பெயரே ஆமந்தகாமன் என்று மாறிவிட்டது!! அவன் எல்லா இடங்களிலும் திராட்சைக் கொடிகளையும் பயிரிட்டான்.
மாமரம் பற்றியும் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. மாமரத்தை வைத்து ஒரு தேரர், மன்னனுக்கு உபதேசமும் செய்கிறார்.
கடம்ப மரம், மதுரை மாநகரின் ஸ்தல விருட்சம்
கடம்ப மரம், முசில மரம், இம்பார மரம், பாரிஜாதம், பாக்குமரம், சப்தவர்ண மரம், கபித்த எனப்படும் விளாம்பழ மரம், கந்தம்ப மரம், பாக்குமரம், சால மரம், நாகக் கொடி என்று பல மரங்களின் குறிப்புகளும் படித்துச் சுவைக்க வேண்டிய விஷயம் ஆகும். பாரிஜாதம், மல்லிகை, தாமரை சண்பகம், முதலிய பூக்களும் வருகின்றன.
ஒரு முறை மன்னன் புத்த விஹாரங்களுக்கு அளித்த தானத்தை ‘கேடக பத்திர’த்திலேயே (தாழை வகைத் தாவரம்) எழுதி அளித்தான். சங்கத் தமிழ், மகாவம்சம் ஆகிய இரண்டிலும் காணப்படும் பனைமரத்தில் இருக்கும் பூத வழிபாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.
சில மரங்களின் தாவரவியல் பெயர்கள் உரைகளில் காணப்படவில்லை. ஆக தாவரவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
மகாபோதிமரத்தை அசோகனின் இரண்டாம் மனைவி “கொன்றுவிட்டதால்” இப்போது புத்த கயாவிலுள்ள மஹாபோதி மரம் பழைய மரம் அல்ல—அதன் கிளையே என்றும் கருத இடம் உண்டு. இலங்கைக்கும் சில கிளைகளை அனுப்பி இருந்ததால் பிற்காலத்தில் ஒட்டு மரங்கள் உருவாகி இருக்கலாம்.
சுமார் முப்பது மரம், செடி, கொடிகளின் பெயர்களை மஹாவம்சம் கூறுவதால் இது உண்மையான விஷயங்களை அதன்போகில் எடுத்துரைக்கிறது என்று நம்ப இடமுண்டு. எல்லா மதப் புத்தகங்களிலும் காணப்படும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை விலக்கிவிட்டுப் பார்க்கும் கண்களும் பரி பக்குவமும் நமக்கு வேண்டும்.
வாழ்க மகா வம்சம் !! வளர்க மரங்கள் !!!
You must be logged in to post a comment.