Krishna and Chanura fighting.
கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:– 1329; தேதி:– 5 அக்டோபர் 2014.
மல்யுத்தம், மற்போர், குஸ்தி (WRESTLING) என்று அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டு குறைந்தது 4000 ஆண்டுகளாக விளையாடப்படுகிறது. இதற்கான பழைய சான்றுகள் எகிப்தில் பேனி ஹாசன் என்னும் இடத்தில் சுவரில் எழுதப்பட்ட பழைய சான்றுகளில் உள்ளது. அதற்குப் பின்னர் கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள், செய்த பானைகள், சிலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2500 ஆண்டு பழமை உடையவை. அப்படியானால் மல்யுத்தம் தோன்றியது எகிப்தில் என்று சொல்லி விடலாமா? முடியாது .இந்தியா என்றே நான் சொல்லுவேன்.
இப்படிச் சொன்னால் உடனே அதாரம் கேட்பார்கள். தொல்பொருத் துறை சான்றுகள் இல்லாவிடினும் இலக்கியச் சான்றுகள் ரிக் வேதம், அதர்வ வேதம், சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களில் உள்ளன. இதிலும் இரண்டு வகை உண்டு. ஆதி மனிதன் பிறந்த நாள் முதலே, குகைகளில் சண்டை போட்டிருப்பான். அது எல்லாம் மல்யுத்தம் ஆகிவிடாது. பின்னர் எது மல்யுத்தம்?
முறையாக அறிவித்து, பின்னர் சமநிலையில் இருக்கும் இருவரை விதிகளின்படி சண்டை போட வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே மல்யுத்தம். இந்திய இலக்கியத்தில் இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால் ஏன் தொல்பொருத் துறைச் சான்றுகள் கிடைத்தில?
Krishna and Balarama are wrestling with Kamsa’s men
இதற்கு 5 காரணங்கள் உண்டு:
1.இந்தியர்கள் எதையுமே மறுபடியும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடயோர். இப்போதுதான் மேலை நாடுகள் இந்த RECYCLING ‘’ரீ சைக்ளிங்’’ பற்றிப் பேசுகின்றன. நம் வீட்டுப் பெண்மணிகளோவெனில் ஆண்டுதோறும் பழைய நகைகளை அழித்துப் புதுபுது ‘’டிசைன்’’ (Design) செய்து பழகியவர்கள்; ஆகையால் கிடைத்த அத்தனை தங்கம், வெள்ளி கலைப் (antiques) பொருட்களையும், நாணயங்களையும் உருக்கி அழித்துவிட்டனர்.
2.மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள் — என்று கீதையில் (3-21) கிருஷ்ணனும், புறநானூற்றில் (187) ஒரு புலவரும் செப்புவர். ஆக அவர்கள்தான் முதல் முதலில் மாற்றான் அரண்மனையில் கிடைத்த கிரீடங்களையும், மணி மகுடங்களையும், கங்கணங்களையும், சிம்மாசனங்களையும், வீர வாட்களையும் உருக்கி தன் காலடியில் பாதம் வைக்கும் பீடங்களாகப் (foot stool) பயன்படுத்தினர். இது காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் பாடல்களிலும் பல இடங்களில் உள்ளது. மேலை நாட்டிலோ அதைப் பாதுகாத்து வைத்தனர்.
3. இந்தியர்கள் எழுதியது அனைத்தும் (Bark) மரவுரி, பனை ஓலை (Palm leaves) போன்று அழியும் பொருட்கள்! கல் மேல் பொறிப்பது என்பது அசோகன் காலத்தில் தோன்றியது. நல்லவேளையாக சிந்து சமவெளிமக்கள் அந்த முத்திரைகளை கற்களில், சுடுமண்ணில் செய்ததால நமக்குக் கொஞ்சம் பழைய தடயங்கள் கிடைத்தன.
4. இந்தியப் (Monsoon) பருவநிலை – வரலாற்றின் மாபெரும் எதிரி. எகிப்து போன்று மணல் பாலைவனமும் (desert) இல்லை. ஐரோப்பா போல பனிப் பாலைவனமும் அல்ல. எப்போது பார்த்தாலு திசை மாறிச் செல்லும் கங்கை, சிந்து போன்ற மாபெரும் நதிகள். கடும் – சுடும் – வெய்யிலும், கனமழையும் மாறி மாறி வந்து அத்தனையையும் அழித்துவிட்டன.
5. மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுக தாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!
இன்னபல காரணங்களால் நம்மிடையே புறச் சான்றுகள் குறைவெனினும் இலக்கியச் சான்றுகளுக்குக் குறைவில. ஆயினும் இதைக் கண்ட வெள்ளைக்காரன் பயந்து போய், இவை அனைத்தையும் கட்டுக்கதை, பொய்யுரை என்று பரப்பி, ஆரிய-திராவிட வாதத்தைப் புகுத்தி, நமக்கு வரலாறே இல்லை அததனையும் கடன் வாங்கியவை என்று ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிவிட்டான். உடனே நம்மூர் அரை வேக்காடுகள் அதைப் பரப்பத் துவங்கிவிட்டன.
Beni Hasan Murals in Egypt; at least 400 year old!
தமிழ் மற்போர் சான்றுகள்
சங்கத் தமில் நூலகளில் நிறைய மற்போர் சான்று ள் உள. புற நானூற்றின் பாடல் 80-ல் ஆமூர் மல்லனுக்கும் கிள்ளிக்கும் நடந்த மற்போரை சாத்தந்தையார் வருணிக்கிறார். பரணர் என்னும் பெரும்புலவர் மிக மிக விரிவாக நமக்கு மற்போர் செய்திகளைப் பல பாடல்கள் வழியே தருகிறார்.
ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் காண்போம். அகநானூறு 386-ல் பாணனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் நடந்த சண்டை பற்றிப் பாடுகிறார். பாணன், கட்டி என்ற இரண்டு வடக்கத்திய மல்லர்கள் கணையனின் நண்பனான மற்றொரு வடக்கத்திய மல்லன் ஆரியப் பொருநனுடன் பொருதுகின்றான். ஆரியப் பொருநன் உடல் இரண்டு துண்டாகி விழுகிறது! இவர்கள் அனைவரும் வடநாட்டு மல்லர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களை வேலைக்கு வைத்தது தமிழ் மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் எனதும் குறிப்பிடற்பாலது.
பாணனும், கட்டியும் தமிழ் நாடு முழுதும் சென்று யார் யார் சண்டைக்கு வரத் துணிவர் என்று சவால் விட்டனர். தித்தன் வெளியன் வாழும் உறையூருக்கும் சென்றனர். ஊருக்கு வெளியே வானத்தைப் பிளக்கும் முரசொலி கேட்டு, என்ன நடக்கிறது ? என்று வினவினர். அதுவா? தித்தன் வெளியனின் வெற்றிகளை ஊரே கொண்டாடுகிறது என்று மக்கள் சொல்லவே இரண்டு மல்லர்களும் பயந்து ஓடிவிட்டனர்!!
ஒரு புலவர் அழகாக வருணிக்கிறார்: யானையானது மூங்கில் கழிகளைப் பிடுங்கி காலில் வைத்து முறிப்பது போல மல்லனின் கால்களை கிள்ளி ஒடித்தான் என்கிறார்.
பரிபாடல் 12-72, சிலப்பதிகாரம் (16-198, 16-73), பெருங்கதை (52—3115) ஆகிய இடங்களில் முறையான — பறை அறிவித்து நிகழ்த்தப்பட்ட — மல்யுத்தப் போட்டிகளை விரிவாகக் காணலாம். இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு மல்யுத்தச் சான்றுகள்.
Greek Silver coin; at least 2300 year old!
கண்ணன், பலராமன் செய்த மற்போர்
கலியுகம் துவங்கும் முன் (கிமு.3100) வாழ்ந்த கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பல மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்ததை புராண இதிஹாசங்களில் படிக்கிறோம் கம்ச சானூர மர்த்தனம் என்று கம்சனையும் சானூரனையும் அவர்கள் கொன்றதை இன்று வரை மேடைகளில் கர்நாடக சங்கீத பாகவதர்களும் பஜனைப் பாடகர்களும், சின்னக் குழந்தைகள் சொல்லும் ஸ்லோகங்களிலும் கேட்கிறோம்; பாடுகிறோம். ஆயினும் இவைகள் எல்லாம் வரலாறு அல்ல, வெறும் புனைக்கதைகள் என்ற விஷ விதையை வெள்ளைக்காரர்கள் பரப்பிவிட்டனர். யாதவ குல வீரர்கள் இருவரும் பல மல்லர்களை வென்றனர்; கொன்றனர்.
வாலி-சுக்ரீவன்
கண்ணனுக்கு முன் வாழ்ந்த ராமபிரான் காலத்தில் குரங்குப் படைகளும் கூட “த்வந்த்வ யுத்தம்: (ஒருவனுக்கு ஒருவன்) செய்ததை அறிவோம். வாலி- சுக்ரீவன் சண்டைகளை அறிவோம். அவைகளையும் வரலாறு அல்ல, கட்டுக்கதை என்று பரப்பிவிட்டனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வெளியான கோ கருநந்தடக்கன் கல்வெட்டு கூட, கலியுகத்தை வியப்புறும் விதத்தில் நாட்கணக்கில் சொல்கிறது அதாவது தமிழனுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்த நம்பிக்கையை, பஞ்சாங்கங்களை வெளிநாட்டு :அறிஞர்கள்” பேச்சை கேட்டு ஒதுக்கிவிட்டோம்!!!
Kazakastan Rock paintings before 1000 BCE.
வேதத்தில் மற்போர்
ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும் முஷ்டி ஹன், முஷ்டி ஹத்ய (RV 5-58-4, 6-26-2 and AV5-22-4) என்ற சொற்கள் ஒருவருக்கு ஒருவர் கைகலப்புகள் பற்றிப் பேசும். ஆனால் இவை மல்யுத்தப் போட்டி என்ற பொருளில் வராமல் மல்யுத்தப் போர் என்ற முறையில் கையாளப்படுகின்றன.
மஹாபாரத மல்யுத்தங்கள்
மஹாபாரதத்தில் பீமனுக்கும் கீசகனுக்கும் நடந்த மற்போர் மிகத் தெளிவான சித்திரத்தைத் தருகிறது. சைரந்திரி என்ற பெயரில் வேலை பார்த்த திரவுபதியை கீசகன் பின்பற்றவே அவனை பீமன் கொன்றான். பீமன் மேலும் பலருடன் போட்ட மல்யுத்தங்களையும் மஹாபாரதம் விரிவாகவே தரும்.
ஆக வேத, ராமாயண, மஹாபாரத, பாகவத புராண, சங்க இலக்கிய மல்யுத்தக் குறிப்புகள் பற்றிப் படிப்போருக்கு — கலியுகம் என்பது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது என்ற நம்பிக்கை இருக்குமானால் —- எகிப்தியர்கள், கிரேக்கர்களுக்கு முன்னால் மல்யுத்தத்தைப் பயின்றவர்கள் நாம்தான் என்பது விளங்கும்!!
இந்தியர்கள் இதை மெய்ப்பிக்கும் விதத்தில் மல்யுத்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று வருகின்றனர். நாடு முழுதும் எல்லா மொழிகளிலும் ‘’மல்ல, குஸ்தி, பைல்வான்’’ — என்ற சொற்கள் பயிலப்படுகின்றன. பீமன் பெயரில் நாடு முழுதும் மற்போர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
வளர்க மல்யுத்தக் கலை! வாழ்க மல்லர்கள்!!
You must be logged in to post a comment.