சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! – Part 2

kevin2
Kevin Richardson

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
கட்டுரை எண்- 1464; தேதி 7 டிசம்பர், 2014.

“ஹிந்து தத்துவம் ஐந்து அறிவுக்கும் மேற்பட்ட – அதீத பேரறிவு (super consciousness) என்னும் ஆறாவது அறிவு ஒன்று இருக்கிறது என்பதை விளக்குகிறது. அதன் மூலமே உத்வேகம் வருகிறது– – ஸ்வாமி விவேகானந்தர்

6. பல மொழி பேசும் ஹரால்ட் வில்லியம்ஸ்
உலகில் சாதாரணமான ஒரு நபர் 1.69 மொழிகளை மட்டுமே பேச முடியும் என்று அறிவியல் கூறுகிறது. ஹரால்ட் வில்லியம்ஸ் என்பவரோ 58 வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்!.
ஏழு வயது வரை சாதாரணமாகத் தான் ஹரால்ட் இருந்தார். திடீரென அவர் மூளையில் பெரிதாக ஒரு வெடிப்பு ஏற்பட்டது போல இருந்ததாம்! அதன் பின்னர் அவர் லத்தீன் மொழியைக் கற்க ஆரம்பித்தார். லத்தீன் பல மொழிகளுக்கும் ஆதாரமான ஒரு மொழி. அத்தோடு நிற்காமல் அவர் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து பல மொழிகளையும் கற்றார்.

7. கழுகுப் பார்வை கொண்ட வெரோனிகா செய்டர்
எந்தவிதமான தொழில்நுட்ப உதவியுமின்றி தனது சொந்தக் கண்களினாலேயே மிகச் சிறிய பொருளையும் பார்க்கும் வல்லமை படைத்தவர் வெரோனிகா செய்டர்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் பல்கலைக் கழகம் தன் பல்கலைக்கழக மாணவிகளுள் ஒருவரான வெரோனிகா செய்டர் மற்ற யாரையும் விட 20 மடங்கு கூரிய பார்வைத் திறனைக் கொண்டிருப்பவர் என்று அறிவிப்பு ஒன்றை 1972ஆம் ஆண்டு வெளியிட்டது. ஒரு மைலுக்கு அப்பால் வரும் ஒருவர் யார் என்று சொல்லும் திறனைக் கொண்டவராம் வெரோனிகா. அப்படி ஒரு கழுகுப் பார்வை!
இப்படி ஒரு மைலுக்கு அப்பால் வரும் ஒருவரைப் பார்க்க சாமானியர்களுள் ஒருவரான நாம் மிகவும் சக்தி வாய்ந்த, அதி நவீன பைனாகுலரை நாடினால் தான் வருவது யார் என்று சொல்ல முடியும்!

veronica seider
Veronica Seider

8.ஒலியின் மூலம் பார்வை கொண்ட பென் அண்டர்வுட்
பென் அண்டர்வுட் (Ben underwood) பார்வை இல்லாத ஒருவர். புற்று நோயினால் அவரது கண் பார்வை போயிற்று. ஆனால் மனிதன் செய்யும் ஒலிகளின் மூலம் (human etholocation) அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் திறன் படைத்தவராய் இருக்கிறார்.
இதனால் சாதாரண பார்வை உள்ள ஒருவரைப் போலவே அவரால் வாழ முடிகிறது. ஒலிப் பார்வை அவருக்கு எப்படி வந்தது என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவர் பற்றிய புகழ் பெற்ற வீடியோக்கள் நெட்டில் வலம் வந்து உலகை அசத்துகிறது.

Ben-Underwood
Ben Underwood

9. வலியைப் பொறுக்க வல்ல டிம் க்ரிட்லேண்ட்
சின்ன வலியைக் கூடப் பொறுக்க முடியாமல் ‘ஓ’வென்று கத்தும் நபர்களைத் தான் சாதாரணமாக நாம் பார்த்து வருகிறோம். பிரசவ வலியைக் கூட இப்போது யோகா மூலமாக பெண்மணிகள் பொறுத்துக் கொள்ளக் கற்று வருகிறார்கள். ஆனால் மிக அதிகமான வலியைக் கூடத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதைத் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் காண்பிக்கிறார் டிம் க்ரிட்லேண்ட்

“உடல்ரீதியாக அசாதாரணமான விசேஷமான சக்தி எதையும் நான் கொண்டிருக்கவில்லை. நான் செய்யும் ஒவ்வொன்றையும் மிகவும் பயிற்சி செய்த பின்னரே என்னால் செய்ய முடிந்தது.இப்படி அசாதாரணமாக பிரம்மாண்டமான வலிகளை நான் பொறுத்துக் கொள்வதை நீங்கள் கூட உங்கள் மனதையும் உடலையும் ஒருங்கிணைப்பதன் மூலம் செய்ய முடியும்! நான் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் உத்திகளை நீங்களும் கூடப் பயன்படுத்தி வலிகளைப் பொறுத்துக் கொள்ளலாம்!” என்று கூறுகிறார் டிம் க்ரிட்லேண்ட்!

அப்படி என்ன செய்கிறார் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! வலைத்தளத்தில் இவர் பற்றிய வீடியோக்களைப் பார்த்தால் கண்களில் ரத்தமே வந்து விடும். கூர்மையான ஒரு கம்பியை முழங்கைக்கு கீழாக ஒரு புறம் குத்தி மறுபுறம் எடுக்கிறார் மனிதர். இப்படிப் பல காட்சிகள்! நம்மாலும் எந்த வலியை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லும் இவரைப் பார்த்தாலே அதிசயமாகத் தான் இருக்கிறது! !(Tim Cridland என்று டைப் செய்து வலையில் பார்க்கவும்)

386100-the-lion-whisperer
Lion Man Kevin Richardson

10. மிருகங்களுடன் தகவல் தொடர்பு கொள்ள வல்ல கெவின் ரிச்சர்ட்ஸன்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கெவின் ரிச்சர்ட்ஸன். சிங்கங்களில் ஆரம்பித்து எந்த மிருகமாக இருந்தாலும் சரி, சுலபமாக அவைகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்! உலகில் அபாயகரமான மிருகங்களை அணுகுவதற்கு எத்தனை விதமான பாதுகாப்பு விதிகள் இருக்கிறதோ அத்தனையையும் உடைத்தெறிந்து விட்டு மிகச் சாதாரணமாக அபாய மிருகங்களுடன் பழகுகிறார் கெவின்! இது எப்படி சாத்தியம் என்றால், “என் உள்ளுணர்வினாலும் காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயமான முறை மூலமாகவும் தான் மிருகங்களுடன் என்னால் பேச முடிகிறது” என்கிறார் இவர்!
இன்னும் சில சூப்பர் மனிதர்களையும் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அறிவியல் சோதனைகளுள் பல விசித்திரமான சோதனைகள் உண்டு. மாதிரிக்கு ஒரு சோதனையைச் சொல்லலாம். வில்லியம் பீமாண்ட் (William Beaumont) ஆயிரத்து எண்ணூறுகளில் அமெரிக்க ராணுவத்தில் சர்ஜனாகப் பணியாற்றியவர். ஒரு நாள் அலெக்ஸிஸ் செயிண்ட் மார்டின் என்பவர் அவரிடம் சிகிச்சைக்கு வந்தார்.அவர் விலங்குகளின் மயிரைப் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த போது துப்பாக்கி ஒன்றால் சுடப்பட்டார். அவரது தோலைத் துளைத்துச் சென்ற குண்டு அவரது உறுப்புகளைச் சேதப்படுத்தவில்லை. நிச்சயம் குண்டினால் ஏற்பட்ட காயத்தினால் மார்டின் இறந்து விடுவார் என்று வில்லியம் நம்பினார். ஆனால் அதிசயமாக பெரிய துளை வயிற்றில் தெரிய மார்டின் பிழைத்து விட்டார். வயிற்றுத் துளை வழியே அவர் உடலில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் பார்க்க முடிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வில்லியம் வயிற்றில் ஜீரணம் ஆவது எப்படி என்ற சோதனையை அவர் மேல் தொடங்கினார். மார்டின் பழைய கம்பெனியில் வேலை பார்க்க முடியாத காரணத்தினால் சிறு வேலைகளைச் செய்வதற்காக அவரைத் தன்னிடமே பணியிலும் அமர்த்திக் கொண்டார். பல வருட காலம் ஜீரணம் சம்பந்தமான சோதனையை வில்லியம் தொடர்ந்தார். வயிற்றின் அசைவுகளினால் ஜீரணம் நடைபெறவில்லை என்றும் வயிற்றில் உருவாகும் அமிலங்களினால் தான் ஜீரணம் நடைபெறுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். சில சமயம் உணவுத் துணுக்குகளை அவர் வயிற்றில் ஒரு நூலில் கட்டித் தொங்கவிட்டு எப்படி ஜீரணம் நடைபெறுகிறது என்பதைக் கூட வில்லியம் செய்து பார்த்தார்.
ஆனால் தொடர்ந்த சோதனைகளினால் மார்டின் மிகவும் சோர்ந்து போனார். அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குச் சென்று விட்டார். ஆனால் 1826ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கே மீண்டும் திரும்பி வந்து வில்லியமிடமே வேலைக்குச் சேர்ந்தார். ஜீரணம் சம்பந்தமான எத்தனை சோதனை உண்டோ அத்தனையையும் அவர் மேல் நடத்தி அதை ஒரு புத்தகமாகவும் வில்லியம் எழுதி விட்டார்.
.உலகின் அதிசய சோதனைகளுள் இந்த ஜீரணச் சோதனையும் ஒன்று!

Written by my brother for a Tamil Magazine:swami

*********************

Leave a comment

Leave a comment