Research paper written by London Swaminathan
Research article No.1515; Dated 25 December 2014.
நிலம், நீர், தீ, வளி (காற்று), விசும்பு (ஆகாயம்) என்பன பஞ்ச பூதங்கள், அதாவது ஐம்பூதங்கள். சிவ பெருமான் இந்த ஐந்து ரூபத்தில் இருக்கும் தலங்கள் தென்னிந்தியாவில் இருப்பதை நாம் அறிவோம்.
இதே பஞ்சபூதக் கொள்கை சிறிது மாற்றங்களுடன் கிரேக்க நாட்டிலும் ,பாபிலோனிய கலாசாரங்களிலும் உள்ளன. புத்தர்களும் சமணர்களும் இதை இந்துக்களிடமிருந்து இரவல் வாங்கி அவரவர் மனப்போக்கில் உருவாக்கி சீனா, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தனர். அங்கு சில மாறுதல்களுடன் இன்றும் உளது.
இதனை நாம்தான் கண்டுபிடித்தோம் என்பதற்கு என்ன ஆதாரம்?
மிகப் பழமையான தைத்ரீய உபநிஷத்திலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு புறநானூற்றுப் பாடலிலும் உள்ளன. அதைப் பாடியவர் முரஞ்சியூர் முடிநாகராயர், பாடல் 2..
உபநிஷத்தில் இருப்பதால் மட்டும் இதை நாம் கண்டு பிடித்ததாகச் சொல்ல முடியுமா? பாபிலோனியாவிலும் பழைய ‘’எனுமா எலிஸ்’’ என்னும் பாடலில் உள்ளதே என்பர் சிலர். முதலில் அந்த எனுமா எலிஸ் என்பதே ரிக் வேதத்தில் உள்ள பிரபஞ்சத்தின் தோற்றம் (க்ரியேஷன்) பற்றிய பாடலின் மொழி பெயர்ப்பு என்பதை என் ஆங்கிலக் கட்டுரையில் ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறேன். மேலும் அந்தக் கொள்கை நம் கலாசாரத்தில் ஊறியது போல வேறு எங்கும் காணப்படவில்லை.
சங்க இலக்கியத்தின் பல பாடல்களிலும், காளிதாசன் காவியம் முழுதும் ஐம்பெரும் பூதங்களின் ஆற்றலையும், குணங்களையும் மன்னனுக்கு ஒப்பிடுவது மரபு.
தீப்போல எதிரிகளை அழிப்பவன், தண்ணீர் போல கருணையுள்ளவன், காற்று போல வேகம் உள்ளவன், ஆகாயம் போல சர்வ வல்லமை உள்ளவன், பூமி போல பொறுமையும் உறுதியும் உடையவன் என்று இலக்கியங்கள் போற்றும்.
இதோ புறநானூற்றுப் பாடல் 2
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும் உடையோய்
இந்தப் பாடலைப் பாடிய திரு..நாகராஜன் (நாகராயர்) நால் வேத நெறியே பிறண்டாலும் பால் புளித்தாலும் —- என்றெல்லாம் கூறுவதில் இருந்து நால் வேதம் அறிந்தவர் என்பது புலனாகிறது. மேலும் தைத்ரீய உபநிஷத்தும் காளிதாசனும் சொன்னதைச் சொல்வதில் இருந்து நாடு முழுதும் இக்கொள்கை இருந்ததும் புலனாகிறது. முரஞ்சியூர் நாகராஜன் (முடி நாகராயர்) இமயத்தையும் பொதியத்தையும் இதே பாடலில் குறிப்பிடுவதால் இமயத்தில் இருந்து சிவபெருமான கட்டளையை ஏற்று தமிழ் வளர்க்க வந்த அகத்தியன் கதையை அறிந்தவர் என்பதும் புலனாகிறது. இதே போல காளிதாசனும் மலயம், பாண்டியன், அகத்தியன் ஆகிய அனைவரையும் ரகுவம்ச காவியத்தில் அடுத்தடுத்து குறிப்பிடுவான். ஆக காளிதசனின் செல்வாக்கு தமிழ் இலக்கியத்தில் பரவியதற்கு இது மேலும் ஒரு சான்று.
இதோ தைத்ரீய உபநிஷத் (பிரம்மவல்லி; அனுவாகம்1:
பரமாத்மாவிடமிருந்து
ஆகாயம் தோன்றியது
ஆகாயத்தில் இருந்து காற்று
காற்றில் இருந்து தீ
தீயில் இருந்து தண்ணீர்
தண்ணீரில் இருந்து பூமி தோன்றியது
ஆக இதே வரிசையை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது.
காளிதசன் ரகுவம்ச (1-29) காவியத்தில் — ‘’திலீபனைப் படைத்த பிரம்மா அவனிடத்தில் ஐம்பெரும் பூதங்களையும் படைத்தார்’’ என்கிறார். ஏனெனில் அவனும் ஐம்பெரும் பூதங்கள் போல பயன்பட்டான் என்பார். அறிவியல் நோக்கில் பார்த்தால் நாம் அனைவரும் உடலில் ஐம்பெரும்பூதங்கள் உடையவர் — அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது — என்பது ஆன்றோர் வாக்கு. இதையும் கிரேக்கர்கள் நம்மிடமிருந்து வாங்கி அப்படியே மாக்ரோ காஸ்ம்- மைக்ரோகாஸ்ம்—சொன்னார்கள். எம்படோக்ளிஸ் என்பவர் ஆகாயம் என்பதை விட்டுவிட்டு நால் பெரும் பூதங்களைக் குறிப்பிடுவார்.
அதுமட்டுமல்ல (4-11) ரகுவம்சத்தில்,
ரகு பிறந்தவுடன் ஐம்பூதங்களும் புதுப்பொலிவு எய்தின என்கிறான் காளிதாசன். இந்த உவமைகள் எல்லாம் அக்காலத்தில் மக்கள் நன்கு அறிந்த கருத்துகள் இவை என்பதையும் காட்டுகின்றன.
மன்னர்களை ‘பூ புக்’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வர். அதாவது மண் உண்ணுபவன் —- மாற்றார் தேசங்களை வெல்வதால் மன்னனுக்கு இந்தப் பெயர். இதை காளிதாசனும் புறநானூற்றில் குறுங்கோழியூர் கிழாரும் (பாடல் 20) பாடுகின்றனர்.
சுதக்ஷிணை கருவுற்றவுடன் மசக்கையால் மண் உண்டாள். ஏன் தெரியுமா எதிர்காலத்தில் (ரகுவம்சம். 3-4) அவள் கருவில் தோன்றும் ரகு உலகாளப் பிறந்தவன் என்பார்.
குறுங்கோழியூர் கிழாரும் :
பிறர் மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே
என்கிறார். இதுவும் வடமொழி வாசகத்தின் பொழி பெயர்ப்பே. ஆக பாரதம் முழுதும் ஐம்பெரும் பூதம் பற்றி வேத காலம் முதற்கொண்டு சங்க காலம் வரை ஒரே கருத்து இமயம் முதல் குமரி வரை ஈரான் முதல் இந்தோ நேஷியா வரை ( இவை இரண்டும் ரகுவம்சத்தில் வருகின்றன ) நிலவின என்றால் அது மிகையாகா.
அவ்வையார் பாடிய புறப்பாடலில் (92) மன்னனை தந்தை என்கிறார். காளிதாசன் மன்னனை விஷ்ணு என்று போற்றுவார். தமிழில் கோவில் என்றால் அரண்மனை, இறைவன் உறைவிடம் என இருப் பொருளுண்டு. இறை என்றாலே கடவுள், மன்னன் ஆகிய இரண்டு பொருள் உண்டு. ஆக தமிழர்களும் முன்காலத்தில் மன்னை தெய்வமாக மதித்ததற்கு சங்கப் பாடல்களில் நிறைய சான்றுகள் உள.
பஞ்சபூதக் கருத்து இன்றும் நம்மிடையே இருப்பதற்கு பஞ்சபூத க்ஷேத்ரங்கள் நாம் எல்லோரும் வழிபடும் தெய்வத் தலங்களாக நீடிப்பதே சான்று கூறும்.
contact swami_48@yahoo.com



Inpparathy Yogarajah
/ December 26, 2014பூதங்கள் ஐந்தாகி புலனாகி பொருளாகி …..கண்டபத்து
Yogarajah Ceylon