Research paper No 1953
Written by London swaminathan
Date: 25 June 2015
Uploaded in London at காலை 9-50
ரிக்வேதத்தில் (10-108) சரமா என்ற நாயின் கதை பத்தாவது மண்டலத்தில் உள்ளது. அந்த நாய்க்கு இரண்டு குழந்தைகள் (குட்டிகள்). அவற்றின் பெயர் சரமேயஸ். இந்து கிரேக்க நாட்டில் ஹெர்மஸ் ஆனது. பாரசீகர்களுக்கும் (ஈரான்), கிரேக்கர்களுக்கும் (கிரீஸ்) எஸ் – என்ற எழுத்து எல்லாம் எச்- என்ற எழுத்தாகி விடும். சிந்து என்ற நதியின் பெயரை உச்சரிக்க முடியாமல் நமக்கு ஹிந்து என்ற பெயர் சூட்டியவர்களும் அவர்கள்தான்.
சரமா என்பது ஹெர்மஸ் ஆனது மாக்ஸ்முல்லர் காலத்திலிருந்தே அடிபட்ட விஷயம்தான். ஆயினும் “ரிக் வேதத்தில் வரலாறு” — என்ற ஆங்கில நூலை எழுதிய ஸ்ரீகாந்த் தலகரி இதை மூன்று தலைப்புகளில் விரிவாக ஆராய்ந்து சில புதிய விஷயங்களைச் சொல்கிறார். சுருக்கமாகக் காண்போம்:
ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல்; இந்துக்களின் பூர்வீக வரலாற்றை இதிலிருந்து ஓரளவு அறியலாம். ஏனெனில் இது வரலாற்று நூல் அல்ல. மதம் பற்றிய நூல்.
சர்மா கதை ரிக் வேதம் தவிர, ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகிய நூல்களிலும் இருக்கிறது.. சரமா பற்றிய துதி என்ன செப்புகிறது:
1.சரமா நீண்ட பாதை வழியாகச் சென்று ரசா நதியைக் கடந்து, பாணிக்களைச் சந்தித்து, அவர்களுடைய செல்வம் வேண்டும் என்று இந்திரன் கேட்டதைச் சொல்கிறது.
2.பாணிக்கள் அதை நிராகரித்து, இந்திரனை வேண்டுமானால் மாடு மேய்ப்பவனாக நியமிக்கத் தயார் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர்.
3.சரமா, இதனால் வரும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கிறது.
4.இந்திரனுடன் போரிடத் தயார் என்று சொல்லும் பாணிக்கள், சரமாவைத் தங்கள் பக்கம் வரும்படி கோருகின்றனர்.
5.சரமா, அதை நிராகரித்துவிட்டு இந்திரனிடம் சென்று விடுகிறது.
6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா தூது சென்றும் பலிக்கவில்லை; பின்னர் இந்திரன் சண்டை போட்டு அவைகளை மீட்கிறான்.
சரமேயஸ் பற்றி என்ன அறிகிறோம்?
அவை இரண்டும் யம தர்மனின் காவல் நாய்கள்.
தலகரி சொல்கிறார்: இது அன்றாடம் நிகழும் இயற்கை நிகழ்வைப் பின்னர் கதையாக மாற்றி விட்டனர். அதாவது சூரியன் பூமிக்கு அடியில் (பின்புறம்) சென்று மறைவதையும் பின்னர் மறுநாள் வெளிவருவதையும் கூறும் கதை இது என்கிறார். துதியில் வரும் பசுக்கள்—சூரிய ஒளியையும், சரமா – உதயத்தையும், பாணிக்கள் — இருளையும் குறிக்கும் என்பார்.
எனது கருத்து: இது துவக்கத்தில் சரியாக இருக்கலாம். பின்னர் அதையே உவமையாக்கி மற்றொரு சம்பவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம்.
பாணிக்கள் என்பவர்களை பீனீஷியர்கள் என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள்தான் பணம் (காசு) என்பதையும் அகர வரிசை எழுத்து முறை என்பதையும் உலகிற்குக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று மேலை நாட்டுப் புத்தகங்கள் கூறும்.
பாணி என்ற சொல்லிலிருந்து வந்த சம்ஸ்கிருதச் சொற்கள் அனைத்தும் வணிக சம்பந்தமானவை:
பாணி = பணம் = வணிக = பனியா/வியாபாரி = ஆபணம் = கடை/மார்க்கெட்
முக்கிய தொடர்பு
சரமா கதை, கிரேக்க நாடு தவிர, உலகில் வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. பாரசீகத்திலும், ரோமானிய சாம்ராஜ்யத்திலும், ஸ்காண்டிநேவிய பண்பாடுள்ள நாடுகளிலும் இருக்கிறது. ஆயினும் அங்கெல்லாம் அது உருச் சிதைந்து காணப்படுகிறது. இவை எல்லாம் தொடர்பு படுத்தும் முழுக்கதை ரிக் வேதம் ஒன்றில்தன் இருக்கிறது!! எடுத்துக் காட்டாக ஹெர்மஸ் என்பது ரோம் கலாசரத்தில் மெர்குரி என்ற தெய்வமாக ஆனதாக எழுதுவர். அவரும் வணிகக் கடவுளே. மெர்கண்டைல் போன்ற வணிகச் சொற்கள் அதிலிருந்தே வந்தன. ஆனால் ஹெர்மஸ் – மெர்குரி வணிக விஷயத்தைத் தொடர்புபடுத்த ரிக் வேத பாணி ஒன்றால்தான் முடியும். இது போல ட்யூடானிக் (ஸ்காண்டிநேவிய) கலாசாரத்தில் அசீர் (அசுர என்பதன் உரு மாறிய வடிவம்), வாணீர் (பாணி என்பதன் சிதைந்த வடிவம்) என்ற இரண்டு வகைத் தெய்வங்கள் சண்டையிடும் கதைகள் உள்ளன. இது நமது புராணங்களில் தேவாசுர யுத்தமாக —- (கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதை) —– வருகிறது.
சுருங்கச் சொல்லின் நான்கு நாட்டுக் கதைகளின் மூலம் வேதத்திலுள்ள சரமா கதையில் இருக்கிறது!!
வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கதை கட்டிவிட்டான். பாருங்கள்! சம்ஸ்கிருதம் போலவே ஐரோப்பிய மொழிகள் எல்லாம் இருக்கின்றன. ஆகையால் நீங்களும் எங்களைப் போல வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். பாருங்கள்! தமிழ் மொழி போலவே, சிதிய மொழி உள்ளது. ஆகையால் திராவிடர்களும் மத்திய தரைக் கடலிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர், கால்டுவெல் பாதிரியார் எல்லாம் கதை கட்டிவிட்டனர். இவை எல்லாம் இப்போதைய ஆராய்ச்சியில் புஸ்வாணமாகப் போய்விட்டன.
யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர்?
இன்னும் சில திராவிடங்களும், மார்கஸீய வாதிகளும், அதுகளும் இதுகளும் — நீங்கள் எல்லாம் வெளியே இருந்து வந்தவர்கள் என்று வாதிடுகிறார்கள் அல்லவா?
அதற்குப் பதில்:
வேதம் என்பது கி.மு.1700 ஐ ஒட்டி எழுந்தது என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படுகிறது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கிரேக்க மொழியில் நூலே தோன்றியது. லத்தீன், தமிழ் முதலியன அதற்கும் மிகமிகப் பின்னே வந்தவை. ஸ்காண்டிநேவிய கதைகள் எல்லாம் நேற்று (கி.பி.700) வந்தவை. இப்படியெல்லாம் யாராவது புத்திசாலித் தனமாக சொல்லிவிடுவார் என்பதை அறிந்த தந்திரக்கார குள்ள நரி வெள்ளைக் காரன் – வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல- இன்னுமொரு பொய்யையும் ஏற்றிவைத்தான். இதற்கெல்லாம் மூலம் ஒன்று இருந்தது – அதிலிருந்து தோன்றியவை இவை என்றான். ஆனால் அதுவும் செல்லாக் காசு ஆகிவிட்டது.
சம்ஸ்கிருத மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் இடையே மட்டுமே ஆயிரம் ஆண்டு இடைவெளி! ஆட்டைச் சாப்பிட விரும்பிய ஓநாய் , அட நீ கலக்காவிடில் உன் அப்பன் கலக்கியிருப்பான் என்று சொல்லி ஆட்டை முழுங்கிய ஈசாப் கதை ஞாபகம் வருகிறதல்லவா? அந்த ஓநாய்தான் வெள்ளைத் தோல் படைத்த வெளிநாட்டான்! அந்த ஓநாய்க்காக முதலைக் கண்ணீர் விடுபவைதான் திராவிடங்களும் அதுகளும் இதுகளும்!
முடிவுரை:
1.இந்திய-ஐரோப்பிய புராணக் கதைகளில் வரும் எல்லா அம்சங்களையும் கொண்ட கதைகள் வேதங்களில் மட்டுமே உள்ளன (மற்ற கலாசாரங்களில் இதே கதைகளின் சில அம்சங்கள் மட்டும் உருமாறிச் சிதைக்கப்பட்டு சட்னியாகவோ அவியலாகவோ காணப்படுகின்றன. ஹெர்மஸ் என்னும் கிரேக்க தேவனின் கதையில் சரமா, பாணீக்களின் அம்சங்கள் – அவியல் போலக் காட்சி தரும்).
2.வேதங்களிலுள்ள கதைகள் இல்லாவிடில் இவைகளைத் தொடர்புபடுத்த முடியாமலே போயிருக்கும் (மொழி விஷயத்தில் ஒற்றுமை இருந்தால் மூலக் கதை. கலாசரத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது வேதத்தில் மட்டுமே உளது.
- மேலும் பீனிஷியர்கள் பற்றிய தகவல் எல்லாம் காலத்தால் மிகவும் பிந்தியவை. வேதத்தில் உள்ள பாணீக்களுடன் பணம், ஆபணம்(மார்க்கெட்/கடை) முதலியவற்ரைத் தொடர்புபடுத்துவது சரியெனக் கொண்டால், அந்தக் காலத்திலேயே வேத கால மக்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் முடிவு செய்யலாம். (உலகிற்கு பணம் என்ற சொல்லே ரிக் வேதத்தில் இருந்து வந்தது என்று சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்).
4.எல்லாக் கதைகளிலும் இழையோடும் பொது அம்சங்கள்:–
அ)பசுக்களைத் திருடுதல்
ஆ)சரமா தூது போதல்
இ)பாணிக்கள் என்போர் தீயோராக வருதல்
ஈ)நாய்கள் இறந்தோருடன் செல்லுதல்
–சுபம்–
You must be logged in to post a comment.