விவேகானந்தரும் நெப்போலியனும்! (Post No. 2395)

VIVEKA QUOTE

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 December 2015

 

Post No. 2395

Time uploaded in London :– 8-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

விவேகானந்தர் சரிதம்

 

ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

 

ச.நாகராஜன்

 

 

கதாம்ருதம் எழுதிய மகான் எம்

 

எம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகேந்திர நாத் குப்தா (ஜனனம் 14-7-1854; சமாதி 4-6-1932) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதியான பின்னர், அன்னை சாரதா தேவியாரின் அருள் பாலிப்பில் வாழ்ந்து வந்தார். அன்னையின் மறைவுக்குப் பின் தாயை இழந்த சேய் போல அவர் துடித்தார். எழுபது வயது நிரம்பிய அவர்.”ஆஹா! அன்னை அல்லவா என்னை 35 வருட காலம் பாதுகாத்தார்! இப்போது அவர் இல்லையே! நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

 

 

பின் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு சிறு ஆசிரமத்தை அமைத்து அங்கு வசிக்கலானார்.

அமைதியையும் ஞானத்தையும் நாடுவோர் அந்த ஆசிரமத்திற்கு வரலாயினர். வேத கால ஆசிரமம் போல அது விளங்க ஆரம்பித்தது.

 

காலையிலிருந்து இரவு முடிய பரமஹம்ஸரின் அருளுரைகளும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அங்கு ‘எம்’மால் நினைவு கூரப்பட்டன.

 

பரமஹம்ஸரின் பக்தரான பாபு என்பவர் உலகியல் வாழ்க்கையில் அதிக துன்பம் அடைந்திருப்பதாக கேள்விப்பட்ட எம், ஒரு நாள் தனது தொண்டர்களில் ஒருவரை அவருக்கு உதவ கல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

அந்தத் தொண்டரிடம்  “பாபுவிடம் ஷிமுல்தலாவுக்கு (பாபு வாழ்ந்த இடம் – வங்காளத்தில் உள்ளது) என்னால் இப்போது வர முடியாது என்று சொல். யாருக்குத் தான் துன்பம் இல்லை, கஷ்டங்கள் இல்லை!” என்று கூறியவர் தொடர்ந்து வாழ்க்கையில் வாழ வேண்டிய முறையை அங்கு கூடியிருந்தோருக்கு உபதேசிக்க ஆரம்பித்தார்.

 

QUOTE VIEVEKA

எம்மின் உபதேச உரை

 

“உலகம் என்பது புயல் அலைகளைக் கொண்ட ஒரு பெரும் கடல். அதில் பலஹீனமானவர்கள் தலையை நிமிர்த்திக் கொண்டு நிலைத்திருக்க முடியாது. துன்பங்களோ, சறுக்கல்களோ ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஸ்வாமி விவேகானந்தர், “ எவர்கள் துன்பங்களையும் சறுக்கல்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் குழந்தைகள்.. பச்சைக் குழந்தைகள்” என்று சொன்னார்.

 

 

ஸ்வாமிஜி தனது நண்பர் ஒருவரிடம். “ உனக்கு தொந்தரவு, தாழ்வுகள், சறுக்கல்கள் என்றால் என்ன என்று தெரியுமா? எவர்கள் அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மனிதர்களா, என்ன?” என்று கேட்டார்.

 

 

பரமஹம்ஸர் ஒரு  முறை சொன்னார்: “சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள் ஐந்து ரூபாய்க்குச் சமம். ஆனால் எவர்கள்  வெற்றி தோல்வியில் மயங்காமல் இருக்கிறார்களோ அவர்கள் எழுபத்தைந்து ரூபாய்க்குச் சமம். அவர்கள் தொட்டவுடன் துள்ளிப் பறந்தோடும் காளைக்குச் சமம். அவர்கள் எந்த ஒரு சந்தோஷமான உணர்வுக்கும் அடி பணீய மாட்டார்கள்”.

 

 

(கிரேக்கத்தில் உள்ள) ஸ்பார்டாவில் ஒரு  முறை பலஹீனமானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கிப் போட்டார்கள். அந்த தேசத்தில் பலஹீனமானவர்களை ஒரு பெரும்  தொந்தரவு என்று நினைத்தார்கள். பலஹீனமானவன் எதையும் சாதிக்க முடியாது. துன்பங்களைச் சந்திக்காதவன் மனிதனா என்ன?

 

மஹாபுருஷர்களின் குணாதிசயங்கள் எவை தெரியுமா? பொறுமை, அபாய தருணங்களில் சீரான முன்னேற்றம், நல்ல காலங்களில் தர்ம சிந்தனை, பேச்சில் நளினம், போர்க்களத்திலோ அபார வீரம் – சிங்கத்தைப் போல!”

 

Statue équestre de Napoléon

L’empereur désigne le port.

 

நெப்போலியனின் நன்றி உணர்வு

 

இதைத் தொடர்ந்து எம் பாண்டவர்கள் துன்பங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டார். பி நெப்போலியனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்னர்ர்.

“நெப்போலியன் படை விரானாக இருந்த போது அவனுக்கு திடீரென்று வேலை போனது.  கஷ்டத்தில் வாடும் அவனது தாயார் அவனுக்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு கடிதம் எழுதினார். அவனால் வேதனையைத் தாள முடியவில்லை. நேராக ஆற்றை நோக்கி ஓடினான். அதில் குதித்து உயிரை விட் நினைத்தான். அப்போது அவனைப் பின்னாலிருந்து ஒரு கரம் தொட்டது. அவனது நண்பர்களில் ஒருவனின் கரம் அது.

 

 

‘என்ன விஷயம்’ என்று அவன் கேட்க நடந்ததை நெப்போலியன் சொல்லி வருந்தினான். உடனே அந்த நண்பன் தன் பையிலிருந்த (இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான) பிரெஞ்சு நாணயங்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான். தபால் அலுவலக நேரம் முடியப் போவதை நினைத்த நெப்போலியன் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் அதை அனுப்ப ஓடினான். காலம் ஓடியது. படிப்படியாக உயர்ந்த நெப்போலியன் சக்கரவர்த்தியாக மாறினான.

ஒரு நாள் தன் நகரில் மக்கள் வெள்ளம் சூழ ஊர்வலமாக வந்த போது வழியில் ஒரு ஓரமாக நின்றிருந்த பழைய நண்பனைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்ட நெப்போலியன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தான்.

 

 

அந்த நிலையிலும் கூட அந்த நண்பன் தான் நெப்போலியனுக்கு பணம் கொடுத்து உதவியதைச் சொல்லவில்லை. ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நெப்போலியன் வற்புறுத்தி அவனுக்கு ஒரு பெரும் பதவியைத் தந்து கௌரவித்தான்.”

napoleon_statue_inside_les_invalides_2_1600

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில்

 

எம் இதைச் சொல்லி நிறுத்தினார். உடனே குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் இது ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போல அல்லவா இருக்கிறது என்று கூறி வியந்தார்.

அந்தச் சீடர் கூறினார்:- “அடடா! நெப்போலியன் எப்படிப்பட்ட அரும் குணம் உடையவன். பொது சபையில் தன் நண்பனை கௌரவித்தானே! ஸ்வாமிஜியின் வாழ்க்கையிலும் இதே போல நிகழ்ச்சி நடந்துள்ளதே! அல்மோராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தனது பழைய கால நண்பர் ஒருவரைச் சுட்டிக் காட்டி வரவழைத்து பெரிதும் கௌரவித்தார். உணவின்றி பசியால் வாடி விவேகானந்தர் அலைந்த காலத்தில் அந்த நண்பர் அவருக்கு ஒரு வெள்ளரிக்காய் கொடுத்து அவர் பசியைப் போக்கினார். அந்த நன்றியை அவர் மறகக்வே இல்லையே” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

 

எம் கூறினார்: “அது தான் மஹாபுருஷர்களின் குணநலமாகும். அவர்கள் ஒவ்வொரு நல்ல செயலையும் -அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை – மறக்க மாட்டார்கள். என்றும் நன்றியுடன் இருப்பர்.”

 

 

இரவு நேர சந்திர ஒளி பிரகாசமாக ஒளிர ஆசிரமத்தின் வனாந்திர சூழ்நிலை ஸ்வாமிஜியின் நினைவால் புனிதம் பெற்றது.

 

நெப்போலியன் வாழ்விலும் ஸ்வாமிஜியின் வாழ்விலும் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையை மனதில் அசை போட்டு வியந்தவாறு சீடர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் கலைந்தனர்.

 

*********

ஸ்வாமி நித்யாத்மனந்தா எழுதிய ‘M – THE APOSTLE AND THE EVANGELIST’ (VOLUME – 1) என்ற நூலில் 346 முதல் 349ஆம் பக்கம் முடிய உள்ள உரையாடலை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை.

Leave a comment

Leave a comment