
Written by S NAGARAJAN
Date: 27 December 2015
Post No. 2433
Time uploaded in London :– 16-17
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ரமண மஹரிஷியின் ஜயந்தி தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை.
ஞான ஆலயம் டிசம்பர் 2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை
சிலைகளைக் கும்பிடுவது சரியா? மஹரிஷி ரமணரின் பதில்!
ச.நாகராஜன்

முஸ்லீம் அன்பரின் சந்தேகம்
திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம். பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின் மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம். சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு.
ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.
பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?
மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?
மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?
பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!
பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!
மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.
மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.
மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?
கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.
ஓர் நாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ என்பது அருளாளர் வாக்கு.
உருவமுமாகி அருவமுமாகி அதையும் கடந்தவனாகி இருப்பவன் இறைவன்.
மஹரிஷியின் அருள்வாக்கின் மூலமாக அனைவரும் உருவ வழிபாடு பற்றிய உண்மையை அறிந்தனர்.

சையத் உணர்ந்த சமத்துவம்
டாக்டர் முஹம்மத் ஹபிஸ் சையத் என்பவர் பெர்ஸிய மொழியிலும் உருது மொழியிலும் பேராசிரியராக அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார். அவர் திருவண்ணாமலை வந்து மஹரிஷியை தரிசித்தார். ஏராளமான கேள்விகள் அவரைக் குடைந்தன. ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெளிவு பெற்றார்.
சையத்: உண்மையை எப்படி உணர்வது? அதை எப்படி அனுபவிப்பது?
மஹரிஷி: புதிதாக எதையும் பெற வேண்டியதே இல்லை! ஆன்மாவைப் பற்றிய அறியாமையை விட்டு விட்டாலே போதும்! ஆன்மாவை ஆன்மா அல்லாதவற்றுடன் அடையாளம் காண்பது தான் அறியாமை. அதை விட வேண்டும்.
சையத்: சரி. எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை. உங்கள் உதவி வேண்டும். இங்குள்ள ஒவ்வொருவரும் உங்களின் அருளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களே ஒரு குரு அல்லது கடவுளின் உதவியை நாடி இருக்க வேண்டும். அந்த அருளை இப்போது எல்லோருக்கும் அருளுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்.
இங்கு வருவதற்கு முன்னர் உங்களைக் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏனோ எனக்குக் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்த போது எப்படியும் உங்களை தரிசிப்பது என்று திடமாகத் தீர்மானித்தேன். மிஸ்டர் ஃப்ரைட்மேனையும் இன்னும் பலரையும் சந்தித்தேன். அவர்கள் என்னை இங்கே அனுப்பினர். என்னை நீங்கள் இழுத்திருக்கிறீர்கள். பால் பிரண்டன் பம்பாயில் இருந்த போது அவரது பயணத்தை ரத்து செய்ய வைத்து இங்கே அவரை இழுத்தீர்கள். அது போலத் தான் எனது கேஸும் இருக்கிறது.


இங்கு வந்த போது ஒரே தயக்கம். என்னை உங்களின் அருகே வர அனுமதிப்பார்களா, பேச விடுவார்களா என்றெல்லாம் சந்தேகப்பட்டேன். ஆனால் எனது சந்தேகம் எல்லாம் நீங்கி விட்டன. இங்கு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து கொண்டேன். இங்கு சமத்துவத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து மற்றவர்களைப் போலவே சாப்பிட்டேன். இங்கு நடந்ததை உத்தர பிரதேசத்தில் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அங்குள்ள அந்தணர்கள் என்னுடன் சமபந்தியில் சாப்பிடமாட்டார்கள்; வெற்றிலை கூடப் போட மாட்டார்கள். ஆனால் இங்கோ நீங்கள் என்னை உங்களுடன் ஒருவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். காந்திஜி இதைச் செய்ய முயன்று கொண்டிருந்தாலும் கூட தேசத்தில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்க இன்னும் முடியவில்லை. உங்கள் முன்னால் இருப்பதே எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.
உங்களை தெய்வமாக மதிக்கிறேன். ‘யார் வழிபட்டாலும் சரி, அப்படி வழிபடுபவர் என்னையே வழிபடுகிறார். அவரை நான் காப்பாற்றுவேன்” என்று ஶ்ரீ கிருஷ்ணர் அருளியுள்ளார். ஆனால் மற்றவர்களோ, என் மூலமாகத் தான் முக்தி என்று சொல்லி இருக்கின்றனர். ஶ்ரீ கிருஷ்ணர் ஒருவரே இப்படி பரந்த மனப்பான்மையுடன் கடவுளே பேசுவது போல அருளியுள்ளார். அதே சமத்துவத்தை நீங்களும் கடைப் பிடிக்கிறீர்கள்”
சையத் மனமுருக இப்படிப் பேசி விட்டு மஹரிஷியை வணங்கினார்.
இதிலிருந்து பல முறை அவர் மஹரிஷியைப் பார்க்க வருவது வழக்கமானது.

என் வாழ்க்கையே என் உபதேசம்
கஷ்டமான கேள்விகளுக்கு தான் வாழும் வாழ்க்கை மூலமாகவே எளிய விடையை காண்பித்தவர் மஹரிஷி.
ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் அவர் முன் சமமாக அணி வகுத்து நின்றனர்; சம உரிமையைப் பெற்றனர். தங்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு திருப்தியுடன் அவர் அருளைப் பெற்றனர்.
மஹரிஷியின் அருளுரைகள் ஆன்மீகச் சுரங்கம்; அதைத் தோண்டத் தோண்ட அற்புதமான இதமான விஷயங்கள் கிடைக்கும்; இறைவனை வெளிப்படுத்தும்!
***************
You must be logged in to post a comment.