WRITTEN by London Swaminathan
Date: 9 DECEMBER 2017
Time uploaded in London- 7–19 am
Post No. 4473
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சபதம் ( NEW YEAR RESOLUTION) எடுக்கிறேன்; அது ஜனவரி இரண்டாம் தேதியே காற்றில் பறந்துவிடுகிறது. ஏன் தெரியுமா? நடக்க முடியாத விஷயங்களை நினைப்பதால்தான்! ‘கோபமே வரக்கூடாது; யாரையும் சபிக்கக்கூடாது’ என்று சபதம் எடுத்தேன். நான் வேலை பார்த்த இடத்தில் காரணமே இல்லாமல் எனக்கு எதிராகச் சதி செய்தவர்களைச் சபிப்பதும் வெறுப்பதும் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் வெல்லுவது அப்படி என்ன கிள்ளுக் கீரையா?
அப்படி கோபத்தையும் வெறுப்பையும் வென்று விட்டால் அப்புறம் சங்கராச்சார்யார், பாபா ஆகியோர் படங்களுடன் என் படமும் சுவரில் தொங்குமே! அது நடக்கக் கூடிய காரியம் இல்லை!!!
என் தந்தையைக் காண தினமும் நிறைய பேர் வருவார்கள்; அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் வெ. சந்தானம். மதுரையில் தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டிற்கு வந்து செய்திகளைக் கொடுத்து ‘ஸார்! கட்டாயம் நாளைக்கே, கொட்டை எழுத்துக்களில் பெரிய செய்தியாகப் போட்டு விடுங்கள்’ என்பார்கள். என் தந்தை ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். யெஸ் YES என்றோ நோ NO என்றோ சொல்ல மாட்டார்.
சில நேரங்களில் நானும் அதை வாங்கிப் பார்ப்பேன், படிப்பேன்; அவருடைய புன் சிரிப்பின் காரணத்தை அறிய! ஒரு முறை அந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு புன்சிரிப்புக்குப் பதிலாகக் குபீர் சிரிப்பு வந்தது வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தேன். என் அப்பாவின் முன்னிலையில் ஒரு காமெண்ட் (COMMENT) டும் அடித்தேன்.
“சரியான முட்டாள் பயல்! கங்கை நதி -வைகை நதி இணைப்பு சங்கக் கூட்டம்! இது என்ன பைத்தியக்காரத்தனம்? கங்கை நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகளையே இணைக்க முடியாது. இடையில் பெரிய தக்காண பீடபூமி இருக்கிறது. பூகோளமே தெரியாத பயல் எல்லாம் சங்கம் நடத்துகிறான்” என்றேன்
பொதுவாக எங்களிடம் அதிகமாகப் பொது விஷயங்களைக் கதைக்காத என் தந்தை கதைத்தார். சிரித்துக்கொண்டே சொன்னார். அவன் பெயர் குலாம்பாய்; 7 சங்கங்களுக்கு தலைவன்; நல்லவன்; காஷ்மீர் நமதே சங்கம், நடைபாதைக்காரர் கள் சங்கம், சைக்கிள் சவாரி செய்வோர் சங்கம் போன்ற சங்கங்களுடன் கங்கை- வைகை நதி இணைப்பு சங்கமும் வைத்திருக்கிறான். எது நடக்க முடியாதோ அதை லட்சியமாக வைத்து நடத்துவதே அவன் தொழில்; நடக்கக்கூடிய ஒரு லட்சியம் வைத்து இருந்தால் சங்கத்தின் முடிவு நெருங்கிவிடும். கங்கை- வைகை இணைப்பு நடக்க 100 ஆண்டுகள் ஆகலாம்; நடக்காமலும் போகலாம். இதனால் சங்கம் ஆண்டுதோறும் கூடி, ஒரு தீர்மானமாவது நிறை வேற்றலாம் என்று தொடர்ந்தார். என் சிரிப்பு அடங்கியது. மேலும் ஒரு பாடம், தந்தையிடமிருந்து, கற்றேன்.
இது போல நடக்கமுடியாத பிரமாண்டமான லட்சியங்களை வைக்கக்கூடாதென்று நினைத்து இந்த ஆண்டு, நடக்கக்கூடிய(?!?!?!) ஒரு ரெஸல்யூஷன் – தீர்மானம் நிறைவேற்றப் போகிறேன்.
புதிய, நடக்கக்கூடிய ஒரு புத்தாண்டு சபதம் எடுக்கப்போகிறேன். அது என்ன? தயவு செய்து யாரும் போட்டிக்கு வராதீர்கள்!
பேஸ்புக்கில் FACEBOOK நிறைய பேருக்கு LIKE லைக் போட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதே என் லட்சியம்! ஆனால் எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு, நிபந்தனையும் போட்டுக்கொள்வேன். கண்ட கண்ட, தோழான் துருத்திக்கெல்லாம்,(TOM DICK AND HARRY) சகட்டுமேனிக்கு லைக் போட மாட்டேன். அடி மனதின் ஆழத்திலிருந்து, இந்த விஷயம் புதிய விஷயம், இது உன்னத கருத்து, இது உண்மையிலேயே அழகானது என்று என் மனதில் படும்போது மட்டுமே லைக் போடுவேன்.
பொம்பளை படத்துக்கு அதிக லைக்ஸ்!
ஏன் இந்த திடீர் ஆசை? அற்ப ஆசை! என்று கேட்கிறீர்களா? ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு அழகான பொன்மொழி கண்களில் பட்டது.
‘சீ! நன்றி சொல்லுவதில்கூட நான் பிச்சைக்காரன்!’ என்று ஹாம்லெட் நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது.
BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS (HAMLET).
பேஸ்புக்கில் பலர் LIKE லைக் போடுவதில்கூட பிச்சைக்காரகளாக இருக்கிறார்களே! என்ற நினைப்பு உடனே பளிச்சிட்டது. ஆனால் அவர்கள் தவறாமல், பெண்கள் படங்களுக்கு, அதாவது பெண்கள் (நண்பிகள்) UPLOAD அப்லோட் செய்யும் படத்துத்துக்கு
தவறாமல் லைக் போடுவதையும் பார்க்கிறேன்.
இது என்னடா? புதிய வியாதி!
ஆனால் இதைச் சொன்னவுடன் என் போஸ்டு POST களுக்கு எல்லாம் லைக் போட வேண்டும் என்று நான் நினைப்பதாக நீங்கள் நினைத்துவிட மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் (குழப்புகிறேனோ?)
லைக் போடுவதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் புரிகிறது. யாராவது ஒருவருக்கு லைக் போட்டால் அந்த ஆள் போடும் வேண்டாத போஸ்டுகளும் நம் கண் முன் தோன்றி நம் கழுத்தை அறுக்கும். வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய கதை ஆகிவிடும். வேலியிலே போன ஓணானை ……………………. (UNPARLIAMENTARY WORDS!) விட்டுக்கொண்டு குடையுதே குடையுதே என்று கத்திய கதை ஆகிவிடும்.
நான் சொல்ல வந்த விஷயங்கள் இரண்டே!
- புத்தாண்டில் 2018-ல், நான் அதிகம் பேருக்கு லைக் போட்டு பேஸ்புக்கில் முதலிடம் பிடிக்க வேண்டும் (நடைமுறை வாழ்க்கையிலும் இதைச் செய்யலாம்)
- நீங்களும் எல்லாருடைய ஒரிஜினல் போஸ்டுகளுக்கும் லைக் போட்டு அவர்களை ஆதரியுங்கள்.
- பெண்களின் போஸ்டுகளுக்கும், பெண்களின் படங்களுக்கும் லைக் போடுவதை நான் தடுக்கவா முடியும்?
கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக
ஷேக்ஸ்பியர் உதிர்த்த மேலும் இரண்டு நன்றிப் பொன்மொழிகளை மொழிவேன்.
வள்ளுவன் சொன்ன செய்நன்றி அறிதல் பற்றிய பத்துக் குறட்களும் தான் நமக்கு அத்துபடியாயிற்றே! நான் அரைத்த மாவையே அரைக்க விரும்புவதில்லை!
இதோ ஷேக்ஸ்பியர்:–
சீ நன்றிகெட்ட ஒரு மகன், விஷப்பாம்பின் பல்லை விடக் கொடுமையானவன்! –(கிங் லியர்)
HOW SHARPER THAN A SERPENT’S TOTH IT IS TO HAVE A THANKLESS CHILD (KING LEAR).
நான் உன் குரலுக்கு நன்றி சொல்லுகிறேன், நன்றி, என்ன இனிமையான குரல்! – (கொரியோலேனஸ்)
I THANK YOU FOR YOUR VOICES, THANK YOU, YOUR MOST SWEET VOICES (CORIOLANUS)
பேஸ்புக் வாழ்க! லைக்ஸ் வாழ்க! வாழ்க!!
kps710
/ December 9, 201709.12.2017 1700 hrs. Indian time
wish you all best in following your new year decisions.
2017-12-09 12:49 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” WRITTEN by London Swaminathan Date: 9
> DECEMBER 2017 Time uploaded in London- 7–19 am Post No. 4473
> Pictures shown here are taken from various sources such as Facebook
> friends, Books, Google and newspapers; thanks.”
>