written by London Swaminathan
Date: 7 September 2018
Time uploaded in London – 6-47 am (British Summer Time)
Post No. 5401
பிரியாடிக் டேபிள் (periodic table) எனப்படும் மூலக அட்டவணையில் 80-ஆவது இடத்தைப் பிடித்த மூலகம் பாதரஸம். இது ஒரு விநோதமான மூலகம். திரவ ரூபத்தில் இருக்கும். கண்ணாடி முதலியவற்றில் ஒட்டாது. சிறிய வெப்பம் இருந்தாலும் விரிவடையும். இதனால் உடலில் உள்ள சூட்டை அளக்க இதை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினர். இதன் விநோதத் தன்மையால் இதைக் கொண்டு ஈயத்தையும் இரும்பையும் தங்கம் ஆக்கலாம் (alchemy) என்று உலகம் முழுதும் நம்பிக்கை இருந்தது. ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா அல்லது காம சம்பந்தமான (syphilis) நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாரா என்று இறந்த பின்னரும் தலை முடி காட்டிவிடும். இது அந்தக்காலம். இப்பொழுது மெர்க்யுரி எனப்படும் பாதரஸம் (Mercury) விஷம் என அறிந்ததால் அதை உள்ளுக்கு சாப்பிடும் மருத்துகளில் கலப்பது இல்லை.
நமது ரிஷி முனிவர்கள் ஈயம், இரும்பு தாமிரம் ஆகியவற்றிலிருந்து தங்கத்தை உண்டாக்கியது உண் மையாக இருக்கலாம். ஆனால் மேலை நாட்டில் எந்த ஒரு ரஸவாத ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கவில்லை. விஞ்ஞானம் இன்று வரை நம்பாத அஷ்டமா சித்திகள் , இந்துமத முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உண்டு. ஆகையால் அவர்கள் இப்படி ஒரு சித்தியைப் பெற்றதில் வியப்பில்லை.
பாதரஸம் எப்பொழுதுமே திரவ நிலையில் (liquid state) இருக்கும் ஒரு உலோகம் என்ற நம்பிக்கை தகர்ந்து போன ஒரு சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1759-ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவில் வேறு ஒரு சோதனைக்காக சென்றனர். ஏ. பிரவுனும் எம்.வி. லோமோனோசோவும் உப்பையும் பனிக்கட்டியையும் கலந்து வெப்பத்தைத் தாழ்த்தும் சோதனை செய்தனர். அமிலத்தையும் பனிக்கட்டியையும் கொண்டு மேலும் வெப்பநிலையைக் குறைக்கலாமா என்றும் ஆரய்ந்தனர். வெப்பத்தை அளக்க முயன்றபோது தெர்மாமீட்டரில் (வெப்பமானி) பாதரஸம் நகரவில்லை! கண்ணாடிக்குள் அது கட்டியாக நின்றவுடன் அதை உடைத்து வெளியே எடுத்தால் கம்பி போல வந்தது. மற்ற உலோகக் கம்பிகளை வளைப்பது போல வளைக்கவும் முடிந்தது. அப்பொழுது முதல் பாதரஸ மும் ஒரு சாதாரண மூலகமே என்று உலகம் உணர்ந்தது.
கலோமல் (calomel) எனப்பட்டும் மெ ர்க்யுரிக் குளோரைடு (Mercuric chloride) பேதி மருத்தாகவும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்தாகவும் இந்தியா உள்பட பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தது. சீன மருந்துகளில் இப்பொழுதும் பாதரஸ கூட்டுப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலை நாடுகளில் தோல் நோய்களுக்கு வெளியே (Skin Ointments) பூசும் களிம்புகளில் மட்டும் இருக்கும். இது விரைவில் ஆவியாகக் கூடியதால் சோதனைச் சாலைகளில் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் புகுந்து பலவிதக் கேடுகளைத் தந்தது.
கடல் மீன்களைச் சாப்பிடுவோர் (tuna, Sword fish) இந்தக் கேடுகளுக்கு அதிகம் ஆட்படுவர். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் இது இருந்தாலும் மிக மிகக்குறைவே. அதனால் ஆபத்து ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்களை மேலை நாடுகளில் சில வகை மீன்களைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பர்.
பாதரஸத்தை இப்பொழுதும் மின்சாரக் கருவிகளில் பயன்படுத்துவர். ஆனால் புறச் சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பாட்டரிகளில் அதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது.
எகிப்தியர், கிரேக்கர், இந்தியர் ஆகியோருக்கு ஆதிகாலம் முதல் தெரிந்த ஒரு உலோகம் இது. எகிப்திய கல்லறையில் தேங்காய் வடிவ குடுவை கிடைத்தது. இது கி.மு 1600 ஆண்டில் செய்யப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் பழங்கால குகை ஓவியங்களில் சின்னபார் (cinnabar) எனப்படும் மெக்யுரி சல்பைடை (Mercuric sulfide) பயன்படுத்தினர். இது 30,000 ஆண்டு பழமையுடைத்து.
தென் அமெரிக்க இன்கா நாகரீக மக்களும் இதை அறிந்து இருந்தனர். ஆகவே தங்கம் தாமிரம் இரும்பு போல பழங்கால மக்கள் அறிந்த உலோகம் பாதரஸம். ஆனால் இதை வைத்து தங்கம் உண்டாக்கும் முயற்சிகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!
-சுபம்-