
Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018
Time uploaded in London – 7-54 am
(British Summer Time)
Post No. 5587
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மநு நீதி நூல் – பகுதி 31
முதல் நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டோம்; ஐந்தாவது அத்தியாயத்தின் முதல் 55 ஸ்லோகங்களை ஆராய்வோம்.

பிராஹ்மணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னதை முன்னர் எழுதினேன். பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் கட்டளை இட்டதையும் சொன்னேன். இப்பொழுது பிராஹ்மணர்கள் வெங்காயம், உள்ளிப் பூண்டு (வெள்ளைப் பூண்டு), மஷ்ரூம் mushroom எனப்படும் காளான் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது (5-5, 5-19). சிலவகை மீன், மாமிசம் ஆகியவற்றை கடவுளுக்குப் படைத்தோ நீத்தாருக்குப் படைத்தோ உண்ணலாம் என்கிறார்.
வெங்காயம், பூண்டு சாப்பிடுபவன் ஜாதிப்ப்ரஷ்டம் ஆனவன் (தள்ளி வைக்கப்பட்டவன்) என்கிறார் 5-19
தப்பித் தவறி சாப்பிட்டுவிட்டால் கடுமையான விரதங்கள் நோன்புகளை அனுஷ்டிக்கக் கட்டளை இடுகிறார் (5-21, 5-20)
நோன்பு விவரங்களை 11 ஆவது அத்தியாயத்தில் தருவேன்.
இந்தப் பீடிகையுடன் நான் ‘மானவ தர்ம சாஸ்திர’த்தின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடங்குவதற்குக் காரணம் என்ன?
இப்போதுள்ள மநு தர்ம சாஸ்திரத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகளுக்குக் காரணம் அவ்வப்போது நிகழ்ந்த இடைச் சொருகல்கள் ஆகும்.
இன்னொரு விஷயத்தையும் நினைவிற் கொள்ள வேண்டும் ; சட்டம் என்பது காலத்துக்கு காலம் மாறு படும்; இடத்துக்கு இடம் வேறு படும். அமெரிக்காவில் இன்றும் சில மாநிலங்களில் மரண தண்டனை உண்டு இன்னும் சில மாநிலங்களில் கிடையாது. இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவிலக்கு உண்டு. அங்கு பாட்டிலுடன் நின்றால் குற்றம்!
இனி ஐந்தாம் அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களைக் காண்போம்:

மநு நீதியை முழுதும் படிப்போர் அவருடைய அறிவாற்றலைப் புகழ்வர்; இடைச் செருகல்களைக் கண்டு கொள்வர். 40, 50 ஸ் லோகங்களில் “சூத்ராள்” பற்றிச் சொன்னதைக் கூப்பாடு போட்டு அவரைத் திட்டத் தேவை இல்லை. ஏனெனில் “பிராஹ்மணாள்”களே அவரைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.
இதே அத்தியாயத்தில் பிராஹ்மணர்கள் மாமிசம் சாப்பிடலாம்; அகஸ்தியரும் இதைச் செய்தார் என்று ஒரு வரி வருகிறது. இது ஒரு நல்ல ஜோக்/ joke தமாஷ்.5-22
அகஸ்தியர் கதையில் அவர் வாதாபி,என்ற அரக்கனை, அவன் சஹோதரன் இலவலன் கறியாகச் சமைத்துப் போட்டு, ஏ வாதாபியே வெளியே வா- என்று கட்டளை இட்டான். அவரோ தவ வலிமையால் ‘வாதாபி ஜீர்ணோ பவ’ என்று சொன்னவுடன் அவன் அகஸ்தியர் வயிற்றுக்குள் ஜீரணமாகி விடுகிறான் இதை மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் செய்ய முடியாது. ஆகையால் அங்கு அகஸ்தியரின் பெயரை மநு வம்புக்கு இழுத்திருக்க மாட்டார். அது மட்டுமல்ல,2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனை அழைத்துச் சென்று வியட்நாமில் (சம்பா தேசம்) ஒரு அரசு அமைத்தார். அந்த அரசு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும், துலுக்கர்கள் நுழைவதற்கு முன், 1500 ஆண்டுகளுக்க் கொடி கட்டிப் பறந்தது. இதன் பொருள் என்ன? அகஸ்தியர், மநு சொன்ன கட்டளையை மீறி வெளிநாட்டுக்குப் போனார். இதைப் புராணங்கள் அகஸ்தியர் ‘கடலைக் குடித்தார்’ என்று சொல்லும்.

ஆகவே மாமிசம் சாப்பிட்ட கதை மநு எழுதியதல்ல. பிற்காலப் பிற்சேக்கை!
மச்சம், மாமிசம் சாப்பிடுவது பற்றி மநு ஸ்ம்ருதியில் பல குழப்பங்கள் இருக்கின்றன . ஏன்?
சுமார் 2000ஆண்டுகளுக்கு முன் உருவான 2500 சங்கத் தமிழ்ப் பாடல்களில் பிராஹ்மணர்களை மரக்கறி உணவு உண்ணும் ‘வெஜிட்டேரியன்’ vegetarians களாகவே காட்டியுள்ளனர். பிராஹ்மணர் வீட்டுக்குப் போனால் அந்தப் பெண்மணி உனக்கு என்ன உணவு தருவாள் என்று ஆற்றுப்படை நூலில் இருக்கிறது. அந்த மெனு menu வில், எல்லாம் வெஜிட்டேரியன்!!! பிராஹ்மணர் தெருவுக்குள் நாயோ கோழியோ- போக முடியாது- அவ்வளவு சுத்தமான இடம் அக்ரஹாரம் என்றும் தமிழ் இலக்கியம் விதந்து ஓதுகிறது.
இங்கே காட்டப்படும் மநுவின் 55 ஸ்லோகங்களை திருவள்ளுவர் தமிழ் வேதத்தில்– திருக்குறளில்- ‘புலால் மறுத்தல்’, ‘கொல்லாமை’ ஆகிய இரண்டு அதிகாரங்களில் மொழி பெயர்த்துள்ளார். ஆக ஒரிஜினல் மநு , திருவள்ளுவர் காட்டும் மநுவே. ஏனையன பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே.
ஆனால் திவஸத்திலும், யாகங்களிலும் மாமிசம் சேர்க்கலாம் என்ற மநுவின் கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை. வங்காளி, அஸ்ஸாமி பிராஹ்மணர்கள் மீன்களை ‘ஜல வாழைக்காய்’ போல எண்ணி சாப்பிடுவதை உலகம் அறியும். தர்மம் என்பது கால, தேச,வர்த்தமானங்களை (சூழ்நிலை) அனுசரித்ததே என்று மநு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். இன்றும் கூட நமது பார்லிமெண்டுகளும் சட்ட சபைகளும் பழைய சட்டங்களுக்குத் திருத்தம் கொண்டு வருவதும் புதுச் சட்டங்களியற்றுவதும் மநு சொன்ன ‘பார்முலா’ formula தான்.

Goldsmith
த்விஜன் யார்?
‘கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனதைப் போல’, இப்போது த்ரிகால சந்தியா வந்தனம், அக்னி ஹோத்ரம், தினமும் பஞ்ச மஹா யக்ஞம் செய்யும் பிராஹ்மணர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆக த்விஜன் என்பது ஆதிகாலத்தில் முதல் மூன்று ஜாதிகளைக் குறித்திருக்க வேண்டும். க்ஷத்ரியர்கள் மாமிஸம் சாப்பிடுவதில் வியப்பில்லை. ராமன் திவஸத்துக்கு மிருகங்களைக் கொண்டு வந்ததாக வால்மீகி ராமாயணம் செப்பும். அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத்தான் சொன்னான். அறவே நிறுத்த உத்தரவிடவில்லை என்பதை அவனது சாஸனங்கள் காட்டும். ஆக “த்விஜன்” என்று மநு சொல்லுவது பிராஹ்மணர்களை மட்டும் அல்ல. பிராஹ்மண, க்ஷத்ரிய, வைஸ்யர்களையும் தான் என்று பொருள் கொண்டால் தவறில்லை. இப்போதும்கூட செட்டியார், ஆசாரி ஆகிய ஜாதிகள் பூணூல் போடுவதைப் பார்க்கிறோம். பூணூல் போட்ட பின் இரண்டாவது பிறப்பு; அதாவது இருபிறப்பாளன்/ த்விஜன்.
காளிதாசன் படைப்பிலும்கூட ஒரு பிராஹ்மண விதூஷகனைக் கிண்டல் செய்யும்போது அசைவம் பற்றி வருகிறது. சங்கப் பாடலில் புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பலரும் போற்றிய மஹா பிராஹ்மணன் கபிலன், மாமிஸ உணவு பற்றிப் பாடியதை வைத்து சிலர் கதைத்தனர். ஆயினும் அவை எல்லாம் பசையற்ற வாதமாகக் கரைந்து ஓடிவிட்டது.
2000 ஆண்டு இலக்கியம் காட்டும் பிராஹ்மனணர்கள்- மரக்கறி உண்ட ‘வெஜிட்டேரியன்’களே.
மிருகங்களை அடித்துக் கொன்று சாப்பிடுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்று மநு சொல்லுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெள்ளிதின் விளங்கும்.5-51,5-45, 5-38 ETC.
டார்வின் கொள்கை!
வலுவற்ற மிருகங்கள் வீழ்ந்து அழியும்; வலியோரே வாழ்வர் SURVIVAL OF THE FITTEST என்று டார்வின் சொன்னார். மநுவும் துணிச்சல் மிக்கோருக்கு கோழைகளுணவு COWARDS ARE THE FOOD OF THE BRAVE ஆகி விடுவர் என்று மநுவும் சொல்லும் அரிய கருத்து ஒப்புநோக்கத தக்கது.5-29
பிராஹ்மணர்களுக்கும் சாவு உண்டா?
அத்தியாய ஆரம்பத்தில் மநு கூட்டிய மஹாநாட்டுக்கு வந்தவர்கள் ஒரு வினா எழுப்ப அதற்கு மநு கொடுத்த பதில் சிந்தி க்கத் தூண்டுவது. மஹா புனிதமான வேதங்களை ஓதும் பிராஹ்மணர்களுக்கு மரணம் வருகிறதே! அது எப்படி சாத்தியம்? என்று சிலர் வியக்க மநு 4 காரணங்களை முன் வைக்கிறார். அதில் ஒன்று தவறான உணவு! இங்கே சாவு என்பதைவிட அவர்களும் கூட ‘இளம் வயதில் இறப்பது எப்படி’ என்று பொருள் கொள்க.5-4
மநுவின் சொல்லாடல் திறன்!
‘மாம்ஸ’ம் என்ற சொல்லை மநு விவரிக்கும் பாங்கு அழகாக இருக்கிறது. என்னை உண்பவன் ஆக நான் மாறிவிடுகிறேன் ( மாம்+ சஹ ). இப்போது நீங்கள் மாட்டை உண்டால் அடுத்த ஜன்மத்தில் மாடு மனிதன் ஆகும்; நீங்கள் மாடு ஆவீர்கள். அந்த மனிதன் உங்களை உண்பான் (மாம்+ சஹ= என்னை + அவன்); என்னை அவன் உண்டான் ; நான் அவனை உண்ணுவேன்.5-55
சின்னக் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும்; எறும்பு முதலிய ஜந்துக்களைக் குழந்தைகள் துன்புறுத்தினால் தாய்மார்கள் எச்சரிப்பர். அடுத்த பிறவியில் ‘நீ எறும்பாக, அது நீ ஆகி’ உன்னை துன்புறுத்தும் என்பர். மறு பிறப்புக்கொள்கை சங்க தமிழ் பாடல்களிலும் திருக்குறளிலும் மலிந்து கிடக்கிறது
இறுதியாக மற்ற ஒன்றையும் காட்ட விழைகிறேன். மநு சொல்லும் மிருகம், மீன் வகை பற்றியே அதிக சம்சயங்கள் உண்டு. அவரோ வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிக் கட கதைக்கிறார். இப்படி அவர் சொன்ன மீன் வகைகள் பற்றியே ஐயப்பாடுகள் எழுவதற்குக் காரணம் அவர் மிக, மிக, மிக முற்காலத்தவர். மநு சொன்ன ஸுமுகன் என்ற மன்னன் பற்றி சுமேரியாவில் மட்டுமே காண முடிகிறது. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு மன்னன் பெயர் இல்லை என்று பாஷ்யக்காரர்கள் அனைவரும் பகர்வர். முன்னரே எழுதிவிட்டேன்;
மாமிசத்துக்குப் பதிலாக மாவில் அதே போல உருவம் செய்வது 5-37ல் சொல்லப்பட்டுள்ளது. யாககங்களில் இப்படி உருவ பொம்மைகளே போடப்பட்டன.மிருகங்கள் பலி இடப்படவில்லை என்போர் இதை ஆதாரமாகக் காட்டுவர். ஆதிகால மிருக பலி காலப்போகில் மாவு உருவ பலியாக மாறியது போலும்!
ஸ்லோகம் 5-46, 5-47 இந்த இரண்டு பாடல்களில் கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றும் அவன் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்கிறார்.
ஆகையால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர், ‘ஒரிஜினல்’ மநுவை, போலி மநுவில் இருந்து பிரித்து எடுத்து, காய்தல் உவத்தலின்றி, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல, அவரை எடை போடுவதே முறை.
ஐந்தாம் அத்தியாயம் முதல் 55 ஸ்லோகங்கள்










வாழ்க மநு- வளர்க ‘ஒரிஜினல்’ மநு நீதி!