உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?(PostNo.6020)

Written by S Nagarajan


Date: 2 February 2019


GMT Time uploaded in London – 5-08 am


Post No. 6020

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

25-1-19 பாக்யா வார இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு 47ஆம் )கட்டுரை: அத்தியாயம் 411

Oval: 411

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

அறிவியல் துளிகள் அத்தியாயம் 411   

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஏழாம் கட்டுரை)

உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?

ச.நாகராஜன்

உனக்கு அறிவு இருக்கிறதா என்று ஒருவரைக் கேட்டால் விளைவு விபரீதம் தான்.

ஆனால் உங்களுக்கு அற்புதங்களை உண்டு பண்ணும் ஆறாவது அறிவு இருக்கிறதா என்று கேட்டால் அவர் யோசிப்பார்.

பண்டைத் தமிழ் நூலான தொல்காப்பியம், ‘புல்லும் மரமும் ஓர் அறிவினவே, நந்தும் முரளும் ஈர் அறிவினவே, சிதலும் எறும்பும் மூ அறிவினவே, நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே, மாவும் மக்களும் ஐ அறிவினவே, மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே’ என்று ஆறு அறிவு பற்றி விளக்குகிறது. தொடுகின்ற உணர்வு இருந்தால் ஓர் அறிவு, அத்துடன் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு, அவற்றுடம் முகரும் அறிவும் இருந்தால் மூன்று அறிவு, அவற்றுடன் பார்வையும் இருந்தால் நான்கு அறிவு, அவற்றுடன் கேட்கும் திறனும் இருந்தால் ஐந்து அறிவு, இவற்றுடன் சிந்திக்கும் ஆற்றலும் இருந்தால் ஆறறிவு. மனிதனின் இந்த ஆறாவது அறிவு விளக்கமாக விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது.

மனிதனுக்கு மொத்தம் பல்வகை அறிவு உண்டு என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் இன்று கூறுகின்றனர். (அறிவியல் துளிகள் தொடரில் 109ஆம் அத்தியாயத்தில் பல்வகை அறிவு : ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்ற தலைப்பில் அறிவின் வகைகள் விளக்கப்பட்டுள்ளது)

ஆறாவது அறிவு என்பதை உள்ளுணர்வால் ஏற்படும் அமானுஷ்ய அறிவு என்று சில உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

சிலருக்குத் தன்னை யாரோ பார்ப்பது போல உள்ளுணர்வு கூறும். குறிப்பாக பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம். அவர்கள் சற்று கவனித்துச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தால் அவர்கள் உள்ளுணர்வு கூறியது சரியே என்பது தெரிய வரும்.

இப்படி ஒரு ஆறாவது அறிவு உண்டா என டீன் ராடின் என்ற பிரபல உளவியலாளரை ஒரு பெண்மணி கேட்டார். அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

அந்தப் பெண்மணியின் இடது கையில் விரல்கள் இரண்டுடன் தோலின் தடையை (Skin Resistance) குறிக்கும் சென்ஸர்களையும் இன்னொரு விரலில் ரத்த ஓட்டத்தைக் குறிக்கும் சென்ஸரையும் அவர் இணைத்தார். கையில் ஒரு பம்பைக் கொடுத்து ரெடி என்று தோன்றும் போது இதை அமுக்குங்கள். கம்ப்யூட்டர் ஒரு படத்தை மூன்று விநாடிகள் காண்பிக்கும். அதைப் பார்த்த பின் அடுத்த படம் பார்க்க ரெடி என்றால் மீண்டும் பம்பை அமுக்குங்கள். அடுத்த படம் வரும் என்றார் டீன் ராடின். பின்னர் அவர் அடுத்த அறைக்குச் சென்று விட்டார். நாற்பது படங்களைக் கம்ப்யூட்டர் காண்பித்தது.

    சோதனை முடிந்த பின்னர் பத்திரிகைப் பெண்மணி ராடின் இருந்த அறைக்கு வந்தார். அவர் சோதனை முடிவைக் காண்பிக்கும் ஒரு வரைபடத்தைக் காண்பித்தார். எப்போதெல்லாம் ஒரு அமைதியான ஏரி போன்ற காட்சிகளை அவர் பார்த்தாரோ அப்போதெல்லாம் தோலில் படபடப்பு இல்லை, ரத்த ஓட்டம் சீராக இருந்தது. எப்போதெல்லாம் அவர் பயமுறுத்தும் ஒரு காட்சியைப் பார்த்தாரோ அப்போதெல்லாம் அவர் ரத்த ஓட்டம் சீராக இல்லை. தோலின் எரிச்சல் மிக அதிகமாக இருந்தது. வெறும் படத்திற்கே இப்படியா என்று ஆச்சரியப்பட்டார் அந்தப் பெண்மணி.

இந்த சோதனையின் அடுத்த கட்டமாக பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளவருக்கு எண்ண சக்தியை ஒருவர் அனுப்ப, அதை இன்னொருவர் பெறுவதும் இதே போல துல்லியமாகக் குறிக்கப்பட்டது.

எப்போதெல்லாம் அனுப்புபவர் (sender)  ஒரு எண்ணத்தை அனுப்புகிறாரோ அதே நேரத்தில் பெறுபவர் (Receiver) அதைப் பெறுவதை அவர் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காண்பிக்கிறது.

    மனதிற்கும் உடலுக்குமான தொடர்பை (Mind- Body Connection) அறியாமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஏராளமான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டீன் ராடின் எழுதிய புத்தகங்கள் 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படித்து அதில் உள்ள சம்பவங்களை எண்ணி வியக்கின்றனர். அவரது சூப்பர் நார்மல், ரியல் மாஜிக், கான்ஸியஸ் யுனிவர்ஸ் (Super Normal, Real Magic, Conscious Universe) உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த புத்தகங்களாகும்.

இதே போல நடக்கப் போவதை முன்னாலேயே கனவில் கண்டு அதை நடந்ததைப் பார்த்து வியப்போரின் தகவல்களும் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் திரட்டி வருகின்றனர். இன்னும் தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களாகக் கருதப்படும் அதிசய ஒற்றுமைகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

மனதிற்கும் உடலுக்குமான தொடர்பை முற்றிலுமாக விஞ்ஞானிகள் அறியும் போது புதியதொரு உலகம் தோன்றும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரண்டாம் உலக  மகா யுத்தத்தில் ஜெர்மனியில் உள்ள தொழில் நகரமான ஹாம்பர்க் (Hamburg) மீது பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமானத் தாக்குதல் கோரமான ஒன்று. போர் தளவாடங்களை ஜெர்மானிய ராணுவத்திற்குத் தயார் செய்து கொடுத்து வந்த அந்த நகரத்தின் மீது இடைவிடாது ஏழு நாட்கள் குண்டுமாரி பொழியப்பட்டது. 1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி இரவு துவங்கப்பட்ட அது ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீடித்தது. அந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் கொமொரா (Operation Gomorrah) என்ற பெயர் தரப்பட்டது. குண்டுமழையில் 42600 மக்கள் மடிந்தனர். 37000 பேர் காயமடைந்தனர். பத்து லட்சம் பேர் நகரை விட்டு ஓடினர். 9000 டன் குண்டு போடப்பட்டது.

ஆனால் நேசநாடுகளின் விமானத்திற்குப் பலத்த சேதம் ஏற்படாமல் பெரும் வெற்றியை அடைந்ததற்கு ஒரு பெண்மணியே காரணம். அவர் பெயர் ஜோன் குரன் (Joan Curran).அவர் மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ராடார் ரெஃப்ளக்டர் பிரிட்டன் விமானங்களைப் பாதுகாத்தது. இந்த ரெஃப்ளக்டர்கள் ராடாரை ஒரு  விமானம் எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியாதபடி செய்து விடும். ஆகவே ஜெர்மனி தனது ராடார் மூலம் எதிரி விமானம் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை.

மொத்தம் 3000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு நாளில் 791 விமானங்கள் பறந்ததில் 12  விமானங்கள் மட்டுமே சேதம் அடைந்தன. விண்டோ (Window) என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்ட ஒரு உத்தியை ஜோன் குரன் அறிமுகப்படுத்தினார். ராடார் ரெப்ளக்டர்களை பல்வேறு விதமாகத் தயாரித்து சோதனை செய்து பார்த்த அவர் இறுதியில் 1 முதல்  2 செண்டிமீட்டர் அகலமும் 25 செண்டிமீட்டர் நீளமும் உள்ள அலுமினியப் பூச்சிலான பேப்பர் தகடுகளை  தயாரித்து குண்டு போடும் விமானங்களான பாம்பர்களுக்கு அளித்தார்.

அந்த பாம்பர்கள் இந்த ரெப்ளக்டர்களை வானிலிருந்து தூவி விடவே ராடாருக்கு விமானம் இருக்கும் இடம் தெரியவில்லை!

ஜெர்மனியின் நாகசாகி என்று வர்ணிக்கப்படும் கோரமான இந்த போரில் பிரிட்டன் வெற்றி பெற்றது ஜோன் குரனாலேயே தான் என்றாலும் திரை மறைவில் அவர் இருந்ததால் அவர் பெயர் பிரபலமாகவில்லை என்பது வருந்தத் தக்கது. இந்த போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆனதன் நினைவாக இப்போது 2018இல் தான் அவரது பெயர் பிரபலமாகியுள்ளது!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: