
WRITTEN BY S NAGARAJAN
Post No.7619
Date uploaded in London – 26 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
காமண்டகர் என்ற மஹரிஷி மிகுந்த தவவலிமை உடையவர். ஒரு நாள் ஆங்கரிஷ்டன் என்ற அரசன் அவர் ஓய்வாய் சுகமாய் அமர்ந்திருந்த சமயத்தில் அவர் அருகே வந்து அவரை வணங்கினான்.
பின்னர் அவரிடம் அந்த அரசன் இரு கேள்விகளைக் கேட்டு அதற்குத் தக்க விடை தந்து அருளுமாறு வேண்டினான்.
கேள்விகள் இவை தாம் :
- ஒரு அரசன மூடத்தனத்தினாலும் காமத்தினாலும் பீடிக்கப்பட்டு ஒரு பாவத்தைச் செய்த பிறகு, தான் செய்த பாவங்களை நினைத்து பச்சாதாபப் பட்டு, அவன் என்ன செய்தால் அந்தப் பாவங்களிலிருந்து விடுபடுவான்?
- ஒருவன் அறியாமையினால் பாவமான ஒரு காரியத்தைத் தான் சரியாகத் தான் நடப்பதாக நினைத்துச் செய்து விட்டால், அது மனிதர்களுக்குள் வழக்கமாக ஏற்பட்டுவிடாதபடி எப்படி அரசன் அதைத் தடுக்க வேண்டும்?
காமண்டக மஹரிஷி அரசன் இப்படி கேள்விகளைக் கேட்டதைக் கண்டு மகிழ்ந்து தன் பதிலைப் பின்வருமாறு உரைத்தார் :
“ ஒரு மனிதன் தர்மம், செல்வம் ஆகியவற்றை அடைவதை ஒழித்துவிட்டு இந்திரிய சுகத்திலேயே கவனமுள்ளவனாக இருந்தால் அந்த நடத்தையின் காரணமாகத் தன் அறிவை இழக்கிறான். எப்போது அறிவை இழக்கிறானோ உடனே அவனுடைய தர்மத்திற்கும் செல்வத்திற்கும் நாசத்தைச் செய்யும் கவனமற்ற மந்தத் தன்மையை அடைகின்றான். அதிலிருந்து தெய்வத்தில் நம்பிக்கை இல்லாத நாஸ்திக எண்ணத்தை அடைந்து கொடுந்தொழிலையே செய்து வரும் அப்பியாசமும் மேலிடுகின்றன.
இப்படிப்பட்ட பாவிகளாகிய துஷ்டர்களை அரசன் தண்டிக்காவிடில், சாதுக்களாய் இருப்பவர்கள் அனைவரும் ஒரே அறையில் பாம்புடன் இருப்பவனைப் போல அந்தக் கொடியவனைக் கண்டு எப்போதும் பயப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட அரசனுக்குக் குடிமக்களும் கீழ்ப்படிவதில்லை. பிராமணர்களும், இதர சாதுக்களும் அப்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே அவனது நாசத்திற்கும் காரணமாக அமைகிறது. இவ்வாறு அபகீர்த்திக்கும் நிந்தனைக்கும் ஆளாகி அவன் மிகுந்த துக்கத்துடன் காலம் கழிக்க வேண்டியவனாகிறான்.
புகழ் இல்லாத ஒரு பிறவி இறந்ததற்குச் சமானம்.
பாவத்தை வரவொட்டாமல் தடுப்பதற்காக வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் கீழ்க்கண்டவைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
- அவன் எப்பொழுதும் மூன்று வேதங்களை ஓதுவதிலேயே கவனம் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.
- அவன் பிராமணர்களை வழிபட்டு அவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து வர வேண்டும்.
- அவன் தர்ம வழியிலேயே பக்தியுடன் நடத்தல் வேண்டும்.
- உயர்ந்த க்ஷமா (மன்னித்தல்) என்கிற உத்தம குணத்தைக் கொண்டிருக்கும் பிராமணர்களுடன் அடுத்துப் பழக வேண்டும்.
- நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து புண்ய மந்திரங்களை ஜபித்து சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்க வேண்டும்.
- துஷ்ட பிரஜைகளை தன்னிடத்திலிருந்தும் தன் ராஜ்யத்திலிருந்தும் அகற்றி நல்லோருடன் சகவாசம் செய்ய வேண்டும்.
- இனிய மொழிகளாலும், நல்ல செய்கைகளாலும் தன்னுடைய குடிமக்களை மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டும்.
- அவன் அனைவரிடமும், ‘நான் உனக்கு வேண்டியவன்’ என்று சொல்வது தவிர, தன்னுடைய விரோதிகளாக இருப்பினும் கூட அவர்களுடைய நற்குணங்களை எடுத்துரைத்தல் வேண்டும்.
இது போல அவன் நடந்து வந்தால் அவன் பாவங்களிலிருந்து நீங்கப் பெற்று பரிசுத்தமானவனாகி யாவராலும் மதிக்கப்படுகின்றான்.
உன்னுடைய பெரியோர்களும், ஆசாரியர்களும் சொல்லுகின்ற உத்தமமான கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
அவர்களுடைய கிருபையால் நீ எல்லா மங்களங்களையும் நிச்சயம் அடைவாய்.”
இவ்வாறு காமண்டகர் அரச தர்மத்தை உபதேசித்து அவனது கேள்விகளுக்கு பதிலை அளித்தார். அதைக் கேட்ட மன்னன் ஆங்கரிஷ்டன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டான்.
****
குறிப்பு :-
மஹாபாரதத்தில் வன பர்வத்தில் காமண்டக மஹரிஷி பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளது.