
Post No. 8895
Date uploaded in London – – –6 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
கருவூர்ச் சித்தர் வரலாறு!
ச.நாகராஜன்
கருவூர்ச் சித்தரின் வரலாறு பல அதிசய சம்பவங்களைக் கொண்ட ஒன்று.
கருவூரில் வேதியர் குலத்தில் பிறந்த இந்த சித்தர் பல சமய உண்மைகளை ஆராய ஆரம்பித்தார். பின்னர் சைவ சமயமே சமயம் என்ற முடிவுக்கு வந்தார்.
வேதம் மற்றும் ஆகமங்களின் சாரமான திருவிசைப்பாக்களை பல தலங்களுக்கும் சென்று ஓதி அருளினார். உலகப் போக்கில் வாழ்ந்து வந்த இந்த சித்தர் மாதவம் செய்தாலும் மாதர் பால் இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்து வந்தார்.
தல யாத்திரையாகச் சென்ற சித்தர் பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூரைச் சென்றடைந்தார்.
திருக்குருகூரில் எழுந்தருளியுள்ள திருமால் தன் பக்தரின் கனவில் தோன்றி சித்தரை எதிர்கொண்டு அழைத்து வருமாறும் தக்கபடி உபசரிக்குமாறும் கட்டளையிட்டார்.
பக்தர் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தார். மது வேண்டும் என்று சித்தர் சொல்ல காளி அதைக் கொணர்ந்தாள். பின்னர் வன்னி மரத்தை மீன் மழை பொழியச் செய்தார்.
பின்னர் பொதிகை மலை சென்று அகத்தியரைச் சந்தித்தார்.
தஞ்சாவூரிலே பெரிய கோவில் கட்டப்பட்டு வந்த காலம் அது. சிவ பிரதிஷ்டைக்கு மருந்து இளகி இறுகாமல் இருந்தது. இதை எண்ணி எண்ணி மன்னன் வருத்தப்பட்டான்.
கருவூர்ச் சித்தர் வந்தாலன்றி காரிய சித்தி பெற முடியாது என ஆகாயவாணி ஒலி எழுந்தது.
அங்கிருந்த போகநாதர் உருவத்தை மாற்றிக் கொண்டு ஒரு காக்கையின் காலில் சீட்டு ஒன்றை எழுதிக் கட்டினார்.
அதைப் பார்த்த கருவூர்ச் சித்தர் ஆலயத்தினுள் புகுந்தார். தனது தாம்பூல எச்சிலை உமிழ்ந்தார். மருந்தை பந்தனம் செய்தார். அட்டபந்தனம் முடிந்தது.

பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதற்காக அன்னம் தயாரானது. அதைத் தனி ஒருவராக சித்தர் தானே உண்டார். அனைவரும் பிரமித்தனர். ஆனால் அவர்கள் வயிறு அனைத்தும் நிரம்பி விட்டது.
பின்னர் ஸ்ரீரங்கம் சென்றார் சித்தர். அங்கு ஒரு பெண் இவரைக் கண்டு காமுற்றாள். அவளையும் சித்தர் திருப்தி செய்தார்.
பின்னர் ரங்கநாதரை அழைத்து விலை மதிக்கவே முடியாத ஒரு மாணிக்க மாலையை வாங்கி அந்தப் பெண்ணுக்கு அவர் கொடுத்தார். கோவிலில் இருந்தோர் இறைவனின் மாலையை தாசி வைத்திருப்பதைக் கண்டு அவளைப் பிடித்தனர். அவளோ ரங்கநாதர் தான் அதைக் கொடுத்தார் என்று கூறினாள்.
அங்கிருந்த அந்தணர்கள் கருவூர் சித்தர் மது, மாமிசம் அருந்துவதாக அரசனிடம் சென்று புகார் செய்தனர். அரசன் தானே நேராக சித்தர் வசிக்கும் இடத்திற்கு வந்தான்.அங்கு பெரியோர் வைத்திருக்கும் உபகரணங்கள் இருந்தன.
அவற்றை உற்று நோக்கும் படி அவர் கூற அவற்றில், அந்தணர்கள் கூறிய படியே அங்கே மதுக் குடங்களும் புலால் உணவும் இருந்தன. இப்படி பல அரிய சித்துகளை அவர் காட்டியருளினார். அனைவரும் அவர் பெருமையை உணர்ந்தனர்.
என்றாலும் கூட, இவரை பெரிய சித்தர் என்று அறியாத அந்தணர்கள் அவரை ஆம்பிரா நதிக்கரைக்குத் துரத்தினார்கள்.
அவர் வெகு வேகமாக ஓடி அங்கிருந்த ஆலயத்துள் புகுந்து சிவபிரானைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
ஒரு பெரும் ஜோதி தோன்றி அவரைத் தன்னுள் இழுத்துக் கொண்டது.
இந்த வரலாறுகளைப் பல புராணங்களும் தெரிவிக்கின்றன.
திருவாவடுதுறைப் புராணம் கூறும் பாடல் இது:
வாகுறு சோழன் மனமகிழ்ந் திறைஞ்ச வளமிகு மாவுடை யாளோ
டேர்கெழு சிவலங் கம்புணர்ந் தருள வெழில்பேறு மட்டபந் தனநற்
பாகிலை சுவைத்த பசையினை யுமிழ்ந்து பண்பொடு மிறுகிடப் பயிற்றி
மோகமோ டரச நாக்கிய வமுத முழுதுமுண் டுயிர்தோறு நிரப்பி ..
-திருவாவடுதுறைப் புராணம்
கரூர்ப் புராணம் கூறும் பாடல் இது:
என்றவர் கவலித் துட்க வேய்ந்து சிற்றிலைக டுற்று
நின்றதோர் வன்னி தன்னை நீதரு கென்ற போழ்தின்
மின்றறு வானம் பூத்த மீனில மெய்த லேய்ப்ப
வன்றளித் ததுயார் மேலோர் கருத்தினை யளவு காண்பார்
- கரூர்ப் புராணம்
இப்படிப்பட்ட பெரும் சித்து விளையாடல்கள் செய்து அருளிய கரூர்ச் சித்தர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே எனப் பெருமையுடன் கூறுகிறது கொங்கு மண்டல சதகத்தின் பாடல் எண் 34.
பாடல் இதோ:-
வாய்த்தம் பலவெச்சி லாலட்ட பந்தன மாண்புறமீன்
காய்த்து மாஞ்சொரி யச் செய்து பத்தி கனிந்து செந்தேன்
தோய்ந்த திருவிசைப் பாப்பா டொருசித்தர் தோன்றிவர
வாய்த்த கருவூர்ப் பதிசேர்வ துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
தம்பல எச்சிலால் அட்ட பந்தனம் இறுகவும், மரம் மீன் காய்த்துச் சொரியவும், பக்தி கனிந்த திருவிசைப்பா ஓதி அருளிய கரூர்ச் சித்தர் பிறந்ததற்கு வாய்ப்புற்ற கருவூர் சேர்வதும் கொங்குமண்டலமே என்பதாம்.
கருவூர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஊர் என்பதில் தான் எத்தனை பெருமை அடங்கியுள்ளது!

tags–கருவூர்ச் சித்தர்
***