
Post No. 9192
Date uploaded in London – –27 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் கந்தனைப் போற்றும் ஆறு நாட்கள் விழாவில் ச.நாகராஜன் 24-1-2021 அன்று ஆற்றிய உரை!
தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
தெய்வத் தமிழுக்குச் சிறப்பைத் தருவது அதில் அமைந்துள்ள இறைவனைப் பாடித் துதிக்கும் அற்புதப் பாடல்களே.
இந்தப் பாடல்களில் புதிய ஒளியையும் புதிய சந்தத்தையும் புதிய மெருகையும் தந்தவர் அருணகிரிநாதர். வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரி நாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளினார். அதில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். தனி ஒரு சந்தத்தில் துள்ளு நடை போட்டு இறைவனின் விளையாடல்களை அள்ளித் தரும் திருப்புகழில் 857 சந்தங்கள் உள்ளன; 178 தாள அமைப்புகள் உள்ளன என்பது அதிசயிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.
அருணகிரிநாதர் திருப்புகழை எப்படிப் பாடுவது என்று தியானம் செய்த நிலையில் முருகனே முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என அடி எடுத்துக் கொடுத்தான்.
அருணகிரிநாதர் இயற்றி அருளிய திருப்புகழ் என நாம் சொல்லும் போது அருணகிரிநாதரும் சற்று நகைக்கிறார்; முருகனும் சற்றுப் புன்முறுவல் பூக்கிறான்.
ஏனெனில் அருணகிரிநாதரே கூறுகிறார்,
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தததனால் என்று கந்தர் அனுபூதியில்! (பாடல் 17)
ஆக அருணகிரிநாதர் நாவால் முருகனே அருளிய தெய்வீகப் பாடல்கள் திருப்புகழ் அமிர்தமாகும்.
அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று அந்தத் தலத்தின் மஹிமையையும் அங்கு நடந்த இறைவனின் அருள் விளையாடல்களையும் அற்புத சந்தம் அமைத்துப் பாடியுள்ளார். இப்படி அவர் சென்ற தலங்கள் சுமார் 200 தலங்களாகும்.
இந்தத் திருப்புகழை தினமும் ஓதுங்கள் என அருளாளர்கள் கூறியதோடு அவற்றின் மகிமையையும் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்
என்பதன் மூலம் வேதம், சகல வித்தை, கீத நாதம், ஞானம் ஆகிய அனைத்தும் இதில் உள்ளது என்பது பெறப்படுகிறது.
அத்தோடு இதைப் பாடி என்ன பெறலாம் என்பதற்கும் பதில் உண்டு:
ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ
டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேயிக் கூறு
என்ற பாடலின் மூலம் வளமும் நலமும் பெறுவதோடு முக்திப் பேறும் கிடைக்கப் பெறும் என்பது உறுதியாகிறது.
வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்த பிரஸித்தரே என்று கூறுகிறது சித்து வகுப்பு.
அருணகிரிநாதர் சரித்திரத்தில் ஏராளமான அற்புதங்கள் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் தேவி உபாசகனான சம்பந்தாண்டான் என்பவன் அவர் மீது பொறாமை கொண்டு அருணகிரிநாதரை ஆதரித்த பிரபுடதேவமாராஜனிடம் அவரை பொது மன்றத்தில் முருகனைக் காட்டுமாறு வற்புறுத்த அதை சிரமேற்கொண்டு அருணகிரிநாதர், “கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே” என்று பாட முருகன் அனைவரும் முன் காட்சி தந்தார். தேவியைக் காட்ட இயலாத சம்பந்தாண்டான் தெளிவு பெற்றான். மக்களும் மன்னனும் மகிழ்ச்சி அடைந்தனர்.
‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட’ என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் உதய தாம மார்பான பிரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே என அவர் பாட மயிலும் ஆடி தானும் ஆடி வந்தான் முருகன் என்கிறது வரலாறு.
அன்றாடம் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை அத்தனை அனுஷ்டானங்களுக்கு உகந்த திருப்புகழ் பாடல்கள் உண்டு. எழுந்தவுடன் முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்பார் அவர்.
திருநீற்றை எழுந்தவுடன் நெற்றியில் இட வேண்டும். ‘நீறதிட்டு நினைப்பவர் புத்தியில் நேசம் மெத்த அளித்தருள் சற்குரு’ என்பார் முருகனை அவர். துணையாய்க் காவல் செய்வாய் என்ற திருப்புகழை ஓதி உறங்கினால் காவலுக்கு இருப்பான் வேலவன்! இப்படி காலை முதல் இரவு வரை பாட வெண்டிய திருப்புகழ் பாடல்கள் பல உண்டு.
முருகனைத் துதிப்போருக்கு நோய்கள் அண்டா; கர்மவினையால் வரும் நோய்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர்.
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறினை எரிசூலை சூலை
பெருவலி வேறும் உள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படி உனதாள்கள் அருள்வாயே
என்று பாடும் போது நோய்கள் நம்மை அண்டா; அண்டியவையும் நம்மை நலியச் செய்யா என்பது உறுதி.

அருணகிரிநாதருக்கு ஜெபமாலை கொடுத்து அருளியவன் குமரன்.
அபகார நிந்தைப் பட்டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
என அவர் உருகுகிறார்; நம்மையும் உருக வைக்கிறார்.
இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன் குடி பெருமாளே என்று கூறி அவருக்கு முருகன் ஜெபமாலை தந்ததைக் கூறி அருளுகிறார்.
முருகனை எப்படி அறிவது?
அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே என்கிறார் அவர். நுண்ணறிவால் அறிய வேண்டியதை அறி; ஸயின்ஸ் கூறும் நுண்ணறிவைப் பயன்படுத்தி அவனை அறி; பின்னர் அவன் இருதாள் இறைஞ்சு; அப்போது உன் இடர் களையும் என்ற ரகசியத்தைக் கூறுகிறார்.
விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் உரிய முறையில் இணைத்த மகான் அவர்.
அணுவில் அசைவாய் என்று அவர் கூறும் போதே நவீன அறிவியல் இப்போது கண்டுபிடித்த அணு அசைவை ஆடம் மற்றும் பார்டிகிளை அன்றே அவர் கண்டு உரைத்ததை நினைத்து வியக்கிறோம்.
அருணகிரிநாதர் நமக்கென வேண்டுவதில் சமர்த்தர்.
இகபர சௌபாக்யம் அருள்வாயே என்று கூறுவதால் பக்தர்களுக்கு இகவாழ்வும் சிறக்க வேண்டும் பர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று கூறி அவ்விரண்டும் முருகனைத் துதித்தால் கிடைப்பது உறுதி என்று அறுதியிட்டு உரைக்கிறார்.
என்றனுயிர்க்காதரவுற்றருள்வாயே, நீடு கழலிணைகள் சேர அருள்வாயே
செஞ்சொற் தருவாயே அடியிணை தந்து நீ ஆண்டருள்வாய்
மலர் தாள் கமலம் அருள்வாயே வந்து நீ அன்பில் ஆள்வாய்
சந்தப் பதம் வைத்தருள்வாயே என இப்படி ஒவ்வொரு பாடலிலும் நமக்கு வேண்டியதைக் கேட்டு நம்மைப் பாடித் துதிக்க வைப்பது அவர் சிறப்பாகும்.
சுப்ரமணியன் என்றாலேயே வெற்றி அருள்பவன் என்றே பொருள் என்பதை மஹாபாரதம் விவரிக்கும்.
அசுரருடன் போருக்குச் செல்கையில் மற்ற தேவர்களின் பின்னே வெற்றி தேவதை செல்லும். ஆனால் முருகன் சூரபன்மனுடன் போருக்குச் செல்கையில் அவனுக்கு முன்னே வெற்றி தேவதை சென்றதாம். அதாவது Cause and effect – அதாவது காரண காரியம் என்பது முறை. இங்கு செயலுக்கு முன்னேயே வெற்றி உறுதி செய்யப்படுகிறது என்கிறார் வியாஸ பகவான் முருகனைப் பற்றிச் சொல்லும் போது.
ஆகவே தான் வெற்றி வடிவேலனை வெற்றி அருள்வாய் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
உயர் திருப்புகழ் விருப்பமெனச் செப்பன என்னக்கருள்கை மறவேனே என்று முருகனின் அருளை நினைத்து உருகுகிறார்.
to be continued…………………………..
tags-தித்திக்கும் திருப்புகழ்-1




























































