

Post No. 9189
Date uploaded in London – –26 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திங்கள் தோறும் லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-1-2021 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை இது. இதை யூடியூப் மற்றும் facebook.com/gnanamayam தொடுப்பில் எந்த நாளும், எந்த நேரமும் காணலாம்!
ஒளிவட்ட உண்மைகள்!
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று AURA எனப்படும் ஒளிவட்டம் பற்றிய உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் -அவ்ரா – AURA- உள்ளது. இது பழங்காலம் தொட்டே இருந்து வரும் ஒரு நம்பிக்கை. எல்லா மதத்தினரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அனைத்து மத ஸ்தாபகர்கள், மகான்கள், ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் உருவங்களைச் சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்கான சான்று!
அவ்ராவை – ஒளி வட்டத்தை – மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு (Permanent Radiation from Human Body) என்று விவரிக்கின்றனர்.
இது நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1. நிம்பஸ் (Nimbus) 2. ஹாலோ (Halo) 3. அரோலா (Aureola 4) க்ளோரி (Glory).
நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை.அரோலா முழு உடலிலிருந்தும் வருவது. க்ளோரி தலை மற்றும் உடலிலிருந்து வருவது ஆகும்.
பிரம்மஞானசபையை – Theosophical Society-ஐச் சேர்ந்தோர் இதை ஐந்தாகப் பிரிக்கின்றனர் இப்படி: 1. ஆரோக்கிய ஒளிவட்டம் (Health Aura) 2. முக்கிய ஒளிவட்டம் (Vital Aura) 3. கர்ம ஒளிவட்டம் (Karmic Aura) 4. குணாதிசய ஒளிவட்டம் (The Aura of Character) 5. ஆன்மீக ஒளிவட்டம் (The Aura of Spritual Nature)
எல்லா ஒளிவட்டங்களிலும் வண்ணங்கள் பல காணப்படுகின்றன.
இந்த வண்ணங்களை வைத்துக் குறிப்பிட்ட மனிதனின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பதோடு அவன் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகளையும் கூற முடியும்!
பிரகாசமான சிவப்பு நிறம் கோபம் மற்றும் வன்மையைக் குறிக்கிறது. மங்கலான சிவப்பு நிறம் காமம் மற்றும் அடங்கா இச்சையைக் குறிக்கிறது. பழுப்பு நிறம் பேராசையையும் ரோஸ் நிறம் அன்பையும், மஞ்சள் நிறம் மிக உயரிய அறிவுத் திறனையும், இளஞ்சிவப்பு ஆன்மீகத்தையும் பச்சை ஏமாற்றுதல், பொறாமை ஆகியவற்றையும் அடர்த்தியான பச்சை இரக்கத்தையும் குறிக்கின்றன.கருமை ஒளிவட்டம் எதிர்பாராத மரணம் சம்பவிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒளிவட்டம் உண்மையே என்று அறிவியல் பூர்வமாக முதலில் கண்ட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஜே. கில்னர் (Walter J.Kilner) ஆவார். இவர் 1847இல் பிறந்தார். 1920ஆம் ஆண்டு மறைந்தார். லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவ மனையில் மருத்துவராக இவர் பணி புரிந்தார்.
‘Thr Human Aura’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். ஏராளமான பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விளக்கமாகக் கூறும் நூல் இது.

1908ஆம் ஆண்டே மனித ஒளிவட்டம் பற்றிய கருத்து கில்னரின் மனத்தில் ஊன்றி விட்டது. கோல்தர் டை எனப்படும் டிக்யானினை (Coal Tar dye – Dicyanin)
வைத்து அவர் ஒளிவட்டத்தைக் காண வகை செய்தார். நூற்றுக்கணக்கான சோதனைகளைப் பொறுமையாக நடத்திய பின்பே 1911ஆம் ஆண்டில் தாம் கண்ட ஆய்வு முடிவுகளை ‘The Human atmosphere’ என்ற நூலாக எழுதி வெளியிட்டார். ஒளிவட்டம் காணும் முறையை இதில் அவர் விளக்கி எழுதியிருந்தார்.
வழக்கம் போலவே இதை நம்பாதோரின் கடுமையான விமரிசனத்திற்கு இந்த நூல் இலக்காயிற்று. ஆனால் தனது முயற்சியில் சிறிதும் மனம் தளராத கில்னர் இதை மேலும் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்.
1914இல் பிரபல அறிஞர் சர் ஆலிவர் லாட்ஜ் இவர் சோதனைகளில் அக்கறை செலுத்தினார். 1920இல் திருத்தப்பட்ட பதிப்பாக இவரது நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. 23-6-1920 அன்று தனது 73ஆம் வயதில் மறைந்த இவர் தனது நூல் வெளியிடப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ இதழ் 1922இல் இவரைப் பாராட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.
உயிர் இருக்கும் வரை ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம் உயிர பிரிந்தவுடன் மறைந்து விடுகிறது.
ஒரு மனிதனின் ஒளிவட்டத்தை எப்படிக் காண்பது?
இதற்கு இரண்டு கண்ணாடி ஸ்கிரீன்கள் வேண்டும். இவற்றின் மீது டிக்யானின் டை உள்ள ஆல்கஹால் கரைசல் தடவப்பட வேண்டும். கண்ணாடியில் ஒன்று அடர்ந்த பூச்சுடனும் மற்றது லேசான பூச்சுடனும் இருத்தல் வேண்டும். இந்த ஸ்கிரீன்களை, உபயோகிக்காதபோது அவற்றை இருட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கெமிக்கல்கள் அழிந்து அவை பயனற்றுப் போய்விடும்.
இந்த கண்ணாடி வழியே யாரைப் பார்த்தாலும் அவரின் உருவத்தைச் சுற்றிப் பனி போல இன்னொரு உருவச்சுற்று தெரியும். பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டோருக்கு ஸ்கிரீனே தேவை இல்லை. வெறும் கண்ணாலேயே ஒளி வட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒளி உருவத்தைப் பார்க்கவே முடியாதவர் அடந்த பூச்சுக் கண்ணாடி வழியே முதலில் பார்த்து விட்டு பிறகு லேசான பூச்சுக் கண்ணாடி வழியே பார்த்தால் ஒளி உருவம் இருப்பது தெளிவாகத் தெரியும்.
ஒளிவட்டத்தை விவரிப்பது என்பது இன்னொரு விஷயம்! அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரையும் பொறுத்தே ஒளிவட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போகும் முறையில் இருப்பதே சிறந்த முறை. அதாவது ஒளிவட்டம் பார்க்கப்பட வேண்டியவர் ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க ஒளிவட்டம் பார்ப்பவர் ஜன்னலை நோக்கி நிற்க வேண்டும்.
இந்த ஒளிவட்ட சோதனை மூலம் வியாதிகளை இனம் கண்டு சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

நல்ல ஆரோக்கியம் உள்ள மனிதரின் ஒளிவட்ட வண்ணம் நீலம் மற்றும் சாம்பல் கலந்த ஒன்றாக இருக்கும். தலையைச் சுற்றி எட்டு அங்குலம் ஒளிவட்டமும் மற்ற இடங்களில் ஐந்து அங்குலமும் ஒரு பிரபல விளையாட்டு வீரருக்கு இருந்தது. அப்போது அவருக்கு வயது 33. இதே அளவு அவருக்கு முன்னும் பின்னும் ஒளி பரவி இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அடுத்து ஆரோக்கியம் உள்ள ஒரு பெண்மணிக்கு வெளி ஒளிவட்டம் நாலரை அங்குலமாக இருக்க, கால் அருகே நான்கு அங்குலமாகக் குறைந்து இருந்தது. நீலம் கலந்த சாம்பல் நிற உள் ஒளிவட்டத்தைச் சுலபமாகத் தனியே பார்க்க முடிந்தது. மூன்றரை அங்குலம் முன்பின் அனைத்துப் பக்கமும் இருந்தது. கைகால்களில் மட்டும் அது மூன்று அங்குலமாகக் குறைந்திருந்தது.
ஐலீன் காரட் (Eileen Garrett) என்னும் பெண்மணி ஒளிவட்டத்தைப் பார்ப்பதில் வல்லவர். அவர் ஒரு க்ளர்வாயண்ட் (Clairvoyant). அதாவது கட்புலனுக்குப் புலனாகாமல் உள்ளவற்றை காணும் திறன் கொண்டவர். தமது சுயசரிதையில் தாம் கண்ட காட்சிகளை அவர் விவரிக்கிறார்:
குழந்தையாக இருக்கும் போதே மனிதர்களின் குணாதிசயங்கள் அவர்களின் சுற்று ஒளியை (Surround) பொறுத்தே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறுகிறார்.
“அவர்களின் ஒளியின் தரத்தைப் பொறுத்தும் அதன் வண்ணங்களைப் பொறுத்தும் அவர்களது பர்ஸனாலிடியை என்னால் நிர்ணயிக்க முடியும் . சிலர் மிளிரும் ஒளியுடன் நடக்கும் போது இன்னும் சிலரோ மங்கலான ஒளியுடன் நடப்பார்கள். மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இது உண்டு. அவைகளைச் சுற்றி இருக்கும் ஒளியைப் பொறுத்து மரங்கள் மற்றும் பூக்களுக்கு ஜீவத்தன்மை இருக்கிறது. மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் கவனித்தேன். அவைகளால் ஏனையவற்றின் சுற்று ஒளியை உணர முடிகிறது என்று என்னால் கூற முடியும். பருந்தைக் கண்டு எலி எப்படி உடனே ரீ-ஆக்ட் ஆகிறது?! அதே போல நண்பர்கள் மற்றும் எதிரிகளை இனம் காண இந்தச் சுற்று ஒளி அவற்றிற்கு உதவி புரிகிறது” என்று இப்படி விளக்கமாகக் கூறுகிறார் அவர்.

இன்னொரு சுவையான சம்பவம். இது ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றிய ஒன்றாகும். உலகின் மிகப் பிரபலமான விஞ்ஞானி பாரனோவ்ஸ்கி ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார். அவர் வெறும் கண்களாலேயே ஒளிவட்டத்தை நன்கு பார்க்க வல்லவர். ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் புட்டபர்த்தியில் பார்த்த பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறினார் : “நான் ஜனாதிபதி ஃபோர்டு, எலிஸபத் மஹாராணி, கிரீஸ் தேசத்து ராணி போன்ற பிரபலமானவர்களுடன் ஒரே மேடையில் பேசியவன். என்றாலும் இன்றைய எனது அனுபவம் விநோதமான ஒன்றாக இருக்கிறது. பாபாவின் ஒளிவட்டம் ஆகாயத்தை எட்டும் இளஞ்சிவப்பு வண்ணமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு ஒளிவட்டத்தை -அவ்ராவை – என் வாழ்நாளில் கண்டதே இல்லை. அவர் நடக்கும் போது அந்த பிரம்மாண்டமான இளஞ்சிவப்பும் ஆகாயத்தை ஊடுருவிச் செல்கிறது. அன்பின் உருவான இளஞ்சிவப்பாகவே இவர் இருப்பதால்
இவரை ‘Love Walking on two feet’ – ‘நடமாடும் அன்பின் உருவம்’ என்றே அழைக்கலாம் என்றார் அவர்.
ஒளி வட்டத்தைக் காண உதவும் காமராக்கள் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரது ஒளிவட்டத்தையும் இந்த காமரா மூலம் படம் எடுத்து அதை பரிசோதித்து அவரவர் பலனை அறிய இப்போது முடிகிறது!
நோயாளிகள் தங்களது நோயை இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையைப் பெற முடியும்; நோய் வருவதை முன்கூட்டியே அறிய முடியும்; ஆகவே அதிலிருந்து ஒருவர் வரப்போகும் அபாயத்திலிருந்து தன்னை ஒருவர் காத்துக் கொள்ள முடியும்.
ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் தனது கோபம் போன்ற தீய குணங்களை அறவே அகற்ற இந்த ஒளிவட்டத்தைக் கண்டு தனது முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ளலாம். இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கொண்ட ஜோதி ஒளிவட்டத்தை அடையலாம்!
ஒளிவட்டம் பற்றி அறிந்து கொள்வது என்பது அறிவியல் நமக்குத் தந்த பரிசுகளில் முக்கியமான ஒன்றாகும்!

நன்றி, வணக்கம்!

***
tags- ஒளிவட்டம், aura,