பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 1 (Post No.9899)

Post No. 9899

WRITTEN BY S NAGARAJAN

Date uploaded in London – 27 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-7-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாருக்கரிய பகவான் ரமண பதஞ்

சேரக் கிடைத்த இந்த சென்மம் போல் – யாருக்கும்

எத்தனை கோடிப் பிறவி ஏற்றாலும் வாய்ப்பரிதே

அத்தனை மாண்புள்ளதிதுவாம்.

ஸ்ரீ சாது ஓம் வாழி!

பல்லாயிரக்கணக்கான ரிஷிகளை யுகம் தோறும் பார்த்த பூமி பாரத பூமி. அவர்கள் யுகம் கடந்த நிலையான தர்மங்களை மக்களுக்கு உபதேசித்தவர்கள்.

ரிஷிகளைப் பற்றி சம கால மக்கள் நன்கு அறிந்து உணரும் வண்ணம் தோன்றி, லக்ஷக்கணக்கானோருக்கு அருள் பாலித்தவர் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!

திருவண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட!

காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மீகத்தில் உயர்த்த வழி வகுத்தார். திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!

ரமண அவதாரம்

 அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சுழியில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன நாளன்று புனர்வசு நக்ஷத்திரத்தில் சுந்தரம் ஐயருக்கும் அழகம்மாளுக்கும் குழந்தையாக வந்துதித்தார் ரமணர். அவருக்கு வேங்கடராமன் என்று பெயரிடப்பட்டது.

மற்றவர்களைப் போலவே இருந்தாலும் கூட இள வயதிலேயே சகஜ சமாதி எனப்படும் அரிய நிலை வேங்கடராமனுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு நாள் அவரது உறவினர் ஒருவர் நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்றார். திருவண்ணாமலை என்ற சொல் அவரை வெகுவாகப் ஈர்த்தது.

1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அவருக்கு மரண பயம் தோன்றியது. தொடர்ந்து, மதுரையில் அவர் இருந்த இல்லத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தால், பெறுதற்கரிய ஞானத்தில், உயர் நிலையை அவர் பெற்றார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி  சமாதி நிலையை எய்தியது வரை திருவண்ணாமலையை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் அவர் செல்லவில்லை.

கடுமையான தவத்தின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாசார்யர், நாராயண குரு உள்ளிட்ட மகான்கள் வியந்து போற்றும் மஹரிஷியாக அவர் திகழந்தார். காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அவரை அழைத்த ரமணர் என்ற பெயரால் அவரை உலகம் அறிந்து கொண்டது.

ஏராளமானோர் அவர் அருள் நாடி வரவே ரமணாசிரமம் உருவானது.

அற்புதங்கள் ஆயிரம்!

ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு எண்ணிக்கையே இல்லை; நவீன காலத்திற்கேற்றபடி பல்வேறு அன்பர்களும் அவற்றைக் குறிப்புகளாக எடுத்ததோடு புத்தகங்களாக எழுதியும் வெளியிட்டனர்; ஆகவே தான் அதிகாரபூர்வமான ஆவணங்கள் மூலம் அவை அனைத்தையும் அறிந்து பரவசப்பட முடிகிறது.

நேரத்தைக் கருதி சில சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அமுதத் துளியில் எந்தப் பகுதியைச் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த சம்பவமும் சுவையானதே; அரிய ரகசியத்தையோ செய்தியையோ அது சொல்வதும் இயல்பானதே.

ரமணரிடம் வந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்

 நூற்றுக் கணக்கான மேலை நாட்டோர் திருவண்ணாமலை வந்து ரமணரை தரிசனம் செய்து பயன் பெற்றனர்; தங்கள் அனுபவங்களைப் பல்வேறு நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

முதன் முதலாக வந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ் என்பவர். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரிடெண்டெண்டாக பம்பாய்க்கு வந்தார். பம்பாய் வரும் போதே அவரது உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது மனதை வலியிலிருந்து திருப்ப முயற்சி செய்து ஆவி உடலில் மேலெழும்பி சஞ்சரிக்க ஆரம்பித்து வெல்லூர் வரை வந்தார். அங்கு நரசிம்மய்யா என்பவரைப் பார்த்தார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒருவாறாக அவர் மார்ச் மாதம் உடல் நிலை தேறினார். அதே மாதம் 18ஆம் தேதி வெல்லூருக்கு அவர் வந்தார். அங்கு தான் ஆவி உடலில் பார்த்த நரசிம்மய்யாவை நேரில் கண்டு வியந்தார். மீண்டும் உடல் நிலை மோசமாகவே ஊட்டிக்குச் சென்ற அவர் அதீதமான தனது அனுபவங்களை நரசிம்மய்யாவிற்குக் கடிதம் மூலம் எழுதி விளக்கம் கேட்டு வந்தார். ஏதேனும் ஒரு பெரிய மகானைச் சந்திக்க முடியுமா என்ற தனது ஆவலைக் கடிதம் மூலம் தெரிவித்த அவர் வெல்லூர் வந்த போது தன் மனதில் தோன்றிய ஒரு குகையின் படத்தையும் குகை வாயிலில் நிற்கும் மகானின் படத்தையும் வரைந்து நரசிம்மய்யாவிற்குக் காட்டினார். அந்த மகான் தான் ரமணர்.

இப்படி எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பல அயல் நாட்டினருக்கும் அருள் பாலித்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ரமணர்.

உலகின் மிகப் பெரும் எழுத்தாளரான பால் பிரண்டன் (Paul Brunton) ரமணரைச் சரண் அடைந்த சம்பவம் சுவையான ஒன்று. காஞ்சி மஹாபெரியவாளைச் சந்தித்த பிரண்டன் அவரைத் தனக்குக் குருவாக இருந்து வழிகாட்ட முடியுமா என்று கேட்ட போது அவர் ரமணரைத் தரிசிக்குமாறு அருளுரை புகன்றார். அதன்படி ரமணரைச் சந்தித்த பிரண்டன் தான் கேட்க விரும்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் சந்நிதியில் உடனுக்குடன் தன் மனதிலேயே பதில் கிடைப்பது கண்டு வியந்தார்.

பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் ரமணரின் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரண்டனின் ‘எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் சந்நிதியின் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய அவரது ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.

பகவான் ரமணரின் கருணை மழை அனைவருக்கும் பொதுவானது.

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். இன்னும் மைசூர் மஹாராஜா, பரோடா மஹாராஜா, மஹாத்மா காந்திஜியின் செயலாளரான மஹாதேவ தேசாய், பரமஹம்ஸ யோகானந்தா, நாராயண குரு, காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக், சாமர்செட் மாம்,திலிப் குமார் ராய் உள்ளிட்ட ஏராளமான துறவிகள், தேசியத் தலைவர்கள், பேரறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

  – தொடரும்

tags- பகவான்,  ரமண மஹரிஷி,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: