


Post No. 9947
Date uploaded in London – 7 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம். தற்காலத்தில் இதன் பழைய பகுதிகள் 3700 ஆண்டுகள் பழமையானது என்று எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டனர். ஆயினும் இந்துக்களின் பஞ்சாங்கக் கணக்குப்படி இது 5250 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசரால் சரிபார்க்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது’
ரிக்வேதம் முதலான நான்கு வேதங்களையும் அழகுபடப் பிரித்து தன்னுடைய 4 சீடர்களை அழைத்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்ததார் வியாசர். ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானசாஸ்திர அடிப்படையில் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முறபட்டது என்று எழுதியுள்ளனர்.
இதில் சவிதா, ஆதித்ய என்ற பெயரில் சூரியனைப் போற்றும் மந்திரங்களும், முழுப்பாடல்களும் உள்ளன. ரிக்வேதம் முழுதும் 100, 1000 என்ற எண்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறு எந்த பழைய நூல்களிலும் இப்படி 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச(DECIMAL SYSTEM) முறையைக் காணமுடியாது. நாம் சாதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம துதியிலும் கூட விஷ்ணுவை “சஹஸ்ரகோடி யுகதாரிணே” என்று அழைக்கிறோம். ஆயிரம் கோடியுகங்களை நாம் எண் வடிவில் எழுதிக் காட்டக்கூட முடியாது .
ஆக ஆயிரம் என்பது ரிக் வேதத்தில் குறைந்தது இரண்டு பாடல்களிலாவது சூரியனுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ‘’ஆயிரம் கொம்புகள் உடைய காளை கடலில் எழுத்து எழுவதாக’ ரிஷிகள் பாடுகின்றனர். இதற்கு பாஷ்யம்/ உரை எழுதிய சாயனர் ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் கடலில் அல்லது நீர்நிலையில் இருந்து எழுவதாக எழுதியள்ளார். ஆக முதல் வரியே ரிக்வேத வரி.
இன்னொரு ஒப்புமை தாய் என்ற சொல்லில் உள்ளது. சூரியன் ஆணா , பெண்ணா ? உலகிலேயே சூரியனை ஆணாகவும் பெண்ணாகவும் காண்பது இந்தியாவில் மட்டுமே. காயத்ரீ என்ற தேவதை வேத மாதா என்று புகழ ப்படுவாள். அவரை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சூரியனை நோக்கி தண்ணீரை தானமாகக் கொடுத்துவிட்டு வழிபடுவர். ஒரு காலத்தில் நாலாவது வருணத்தவரைத் தவிர மற்ற எல்லோரும் காயத்ரியை வழிபட்டனர் . ஆக வேத மாதாவை கண்ணதாசன் பாடல் (கர்ணன் திரைப்படம்) தாய் என்று சூரியனைக் குறிப்பிடுவதில் தெளிவாகிறது .
உலகிலேயே இந்துக்கள் மட்டுமே சூரியனை இப்படி ஸவித்ரு தேவனாகவும் காயத்ரீ மாதாவாகவும் வருணிக்கின்றனர். இதுதவிர சூரியனின் புதல்வியை சூர்யா (தமிழில் ஜம்புநாதன் சூரியை என்று மொழிபெயர்ப்பார்) என்றும் சூரியனுக்கு முன்னர் தோன்றும் விடியற் பொழுதை உஷா ( உஷை என்பது தமிழ் வடிவம்) என்றும் வருணிப்பர். அதாவது அனைத்தும் பெண்கள்.
XXX

பாரதியும் கூட காயத்ரீ மந்திரத்தை
‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே …….
என்று அழகாகத் தமிழ் சொற்களில் வடித்துள்ளார்.
சூரியன் உதித்தவுடன் உயிர்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று உற்சாகத்துடன் புறப்படும் காட்சியையும் வேத விற்பன்னர்கள் குறிப்பிடத் தவறவில்லை .
இதோ சில மந்திர வரிகள்; இவற்றைக் கண்ணதாசனின் “ஆயிரம் கரங்கள் நீட்டி” என்று துவங்கும் திரைப்படப் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்
ரிக் வேதம் 7-55
நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)
5-1-8
அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள் . (அது சூரியன் பற்றியது என்று உரைகாரர்கள் குறிப்பிடுவர்.)
5-44-2
ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத் திசைகளிலும் பரத்துவாயாக ; நல்ல செயல்களை நடத்தும் நீ, மக்களைக் காப்பவனாகவும் இன்னல் விளைவிக்காதவனும் ஆக இருக்கிறாய். நீ எல்லா மாயைகளுக்கும் அப்பாற்பட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிறாய்.
5-54-5
நாங்கள் சூரியனைப் போல தேயாதவனாக இருக்க வேண்டும் (சந்திரன் அப்படியல்ல).
5-54-15
நாங்கள் சூரியனைப் போல ஒளிவிட உன் அருளை வேண்டுகிறோம்.
5-81-5
நீ ஒருவனே உயிருள்ள எல்லா பிராணிகளையும் நடத்துகிறாய்;இவ்வுலகத்துக்கு எல்லாம் நீயே அரசனாக இருக்கிறாய்.
5-81-2
நீ எல்லா உருவங்களையும் ஏற்கிறாய்.மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நலத்தைத் தோற்றுவிக்கிறாய்.
5-82-9
உயிரினங்களுக்கு உயிரளிப்பவன் சவிதா /சூரியன்.
5-82-8
எப்போதும் விழித்திருப்பவன்; இரவையும் பகலையும் முந்துபவன்
7-71-1
கருப்பாயி சிவத்த ஆளுக்கு வழி விடுகிறாள் ( சூரியன் வந்தவுடன் இரவு போய்விடுகிறது
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!
துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறு நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
கர்ணன் திரைப்படத்தில் T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலகச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடியது.
ஆதித்ய, சவிதா, உஷத் காலம் (விடியற்காலம்/உஷா) என்ற மூன்று தலைப்புகளில் நிறைய பாடல்கள் உள்ளன. விடியற்காலம் பற்றிய (உஷைபற்றிய ) பாடல்கள் உலகிலேயே மிகவும் அழகான கவிதைகளின் வரிசையில் வைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் போற்றி மகிழும் கவிதைகள் அவை . உதய காலத்தை ஒரு பெண்ணாக வருணித்து ரிஷிகள் பாடி மகிழ்கிறார்கள். உலகிலேயே பொழுது விடியும் முன் குளித்துவிட்டு கடவுளைக் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களே.
–SUBHAM–

tags- கண்ணதாசன் பாடல், ரிக்வேத வரிகள், ஆயிரம் கரங்கள் நீட்டி, சவிதா, ஆதித்ய, உஷா