WRITTEN BY LONDON POET A NARAYANAN
Post No. 9989
Date uploaded in London – 17 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட் 2021ல் எழுதிய 4 கவிதைகள் :
(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)
xxx
தாமரையோ மறையோ
குவித்த கரமொத்த தாமரை மொட்டு
குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்
டதோ காலை இளங்கதிரோன் விரிந்ததோ
இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்
கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்
நடுவே மகரந்தமே மந்தகாசமாக
நறுமணம் வீசிய நல் வரவேற்பில்
தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய
ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்
ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?
இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை
யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை
யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த
இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்
பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த
வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு
களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்
கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம
வேதமாய் வேய் குழலொலித்த கானம்
தாமரை தன்னுள்ளடக்கிய மறையே
— நாராயணன்
xxxx
எது வழி?
உருவமும் அருவமும் அவரவர் அறி வழி
தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி
நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி
நிர்க்குணமும் சகுணமும் நிழலும்
நிசமும் போன்ற மொழி
சமத்துவமும் தத்துவமும்
சம நிலை மனமொழி
அரியும் அயனும் அவரவர் அறியும் வழி
— நாராயணன்
xxxx
மாலனோ மாயனோ
ஒன்றோ பலவோ
ஒன்றினின்று பலவோ
பலகூடி ஒன்றோ
படைப்பில் பலவும்
ஒன்றுமாய் நின்று
மாயையில் மக்களை
மேய்ப்பவன் மாலனே
–நாராயணன்
xxx
அறுபடும் அறம்
அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப
அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது
வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ
வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது
வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ
வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்
நாராயணன்
–subham—
tags- நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ