
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,061
Date uploaded in London – – 6 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 5-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருவலஞ்சுழி திருத்தலம்!
ஓதமார் கடலின் விடம் உண்டவன், பூத நாயகன் பொற்கயிலைக்கு இறை
மாதொர்பாகன், வலஞ்சுழி ஈசனைப், பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே!
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.



ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றாக அமையும் திருவலஞ்சுழி ஆகும். இந்தத் தலமானது தமிழகத்தில் சுவாமிமலைக்குத் தெற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணம் தஞ்சாவூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மூலவர் திரு நாமம் : திருவலஞ்சுழிநாதர், கற்பகநாதேஸ்வரர், கபர்த்தீசர், கற்பகநாதர்
அம்மனின் திருநாமம் : பெரிய நாயகி, பிருஹந்நாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம் தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
இந்தத் தலத்தில் ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமாதேவி, இந்திரன், திருமால்,பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தலத்தின் இறைவன் ஸ்வயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள் பாலிக்கிறார்.
இந்தத் தலத்திற்கு சக்தி வனம், தக்ஷிணாவர்த்தம், திரிணாவர்த்தம் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் தேவேந்திரனின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டதாகும். காவிரி நதி இந்தத் தலத்தை வலமாகச் சுழித்துச் செல்வதால் இது திருவலஞ்சுழி என்னும் பெயரைப் பெற்றது.
மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிப் பல புராண வரலாறுகள் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அதில் கடும் விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை வேண்ட அவர், இந்தக் காரியத்தை விக்னேஸ்வரர் பூஜையின்றித் தொடங்கியதால் ஏற்பட்டது இது என்று கூறினார். தேவர்கள் கடல் நுரையினால் ஒரு விநாயகரை உடனே உருவாக்கினர். அதற்குப் பூஜை செய்து, பின்னர் பாற்கடலைக் கடைந்து தங்களுக்கான பயனைப் பெற்றனர்.
தேவேந்திரன் அந்த விநாயகரை தனது நித்ய பூஜைக்காக எடுத்துக் கொண்டு வலம் வருகையில் இந்தத் தலத்தில் அந்த விநாயகரை வைத்து பூஜை செய்தான். பூஜை முடித்த பின்னர் விநாயகரை எடுக்கப் பார்க்கும்போது விநாயகரை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்றும் இங்கு வந்து பூஜை செய்யும்படி உத்தரவு பெற்ற அவன் விநாயகரை அங்கேயே விட்டுச் சென்றான். கடல் நுரையினால் ஆக்கப்பட்டதால் வெள்ளை வெளேரெனக் காட்சி தந்த விநாயகருக்கு ஸ்வேத விநாயகர் என்று பெயர்.
இந்தத் தலம் காவிரி ஆற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு தலமாகும். ஒரு சமயம் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து வெளி வந்ததன் காரணமாக வெளி வந்த இடத்தில் ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டது. அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளியான காவிரி இந்தப் பள்ளத்தில் இறங்கி விட்டது. இதைக் கண்ட சோழ மன்னன் திகைப்புற்றான். அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. பாதாளத்தில் ஒரு மன்னனோ அல்லது ஒரு முனிவரோ இறங்கி உயிர்த் தியாகம் செய்தால் பாதாளம் மூடப்பட்டு பழைய நிலை ஏற்படும் என்றது அசரீரி. ஏரண்டம் எனப்படும் கொட்டைச் செடிகளுக்கு இடையே தவம் செய்து கொண்டிருந்த ஹேரண்ட முனிவர் என்பவர் இதைக் கேட்டார். அவர் மன்னனைத் தேற்றித் தானே அந்தப் பள்ளத்தில் இறங்கினார். பள்ளம் மூடியது. காவிரி மீண்டும் பாயத் தொடங்கியது. இன்றும் இந்த ஆலயத்தில் ஹேரண்ட முனிவரின் சிலையைக் காணலாம்.
இந்தப் பள்ளத்திலிருந்து எழுந்த ஆதிசேஷன் மஹா சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாமத்திலும் ஒவ்வொரு தலமாக நான்கு தலங்களை வழிபட்டான் அதில் ஒன்று திருவலஞ்சுழி ஆகும். ஏனைய மூன்று தலங்கள் திருநாகேஸ்வரம்,திருப்பாம்புறம், திருநாகைக்காரோணம் ஆகியனவாகும். இன்றும் அவன் அப்படி வழிபடுவதாக ஐதீகம்.
ஐந்து நிலைகளுடன் கூடிய பெரிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இங்கு அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் பின்புறம் திருக்குளமும், மண்டபக் கோவிலும் உள்ளன. இதற்கு அடுத்த கோபுர வாயிலில் கொடிமரமும் நந்தி மண்டபமும் உள்ளன.
அதன் பின்னர் ஸ்வேத விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கு விநாயக மண்டபம் சித்திர வேலைப்பாடுடன் சிறப்புற அமைந்துள்ளது. இது இந்திரனால் அமைக்கப்பட்டதாகும். ஸ்வேத விநாயகருக்கு இங்கு, இதர ஆலயங்களில் நடப்பது போல அபிஷேகம் எதுவும் நடப்பதில்லை. சுமார் பத்து அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளை பிள்ளையாருக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அத்துடன் பச்சைக் கற்பூரத்தை அரைத்து விநாயகரின் திருமேனியில் அவரைத் தொடாமல் தூவி விடுவது வழக்கம். ஆகவே இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி விநாயகர் ஆவார். திருவிடைமருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, இந்தத் தலம் அதற்குரிய பரிவாரத் தலமாக விளங்குவதோடு விநாயகருக்கான சிறப்புத் தலமாகவும் அமைகிறது.
மூன்றாவது வெளிப் பிரகாரத்தின் தென்புறத்தில் அம்பிகையின் சந்நிதி கிழக்குநோக்கியுள்ளது. சதுர்புஜங்களுடன் அம்பிகை கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.
இங்குள்ள அஷ்டபுஜ காளி, பைரவ மூர்த்தி சக்தி வாய்ந்தவர்களாவர். உள்பிரகாரத்தில் முருகப் பெருமான் ஆறு முகங்களுடனும், பன்னிருகரங்களுடனும் கிழக்கு நோக்கி மயில் மீது அமர்ந்து இரு தேவியருடன் இருந்து அருள் பாலிக்கிறார்.
இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் மூன்று திருப்பதிகங்களையும் அப்பர் இரு திருப்பதிகங்களையும் அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலையும் அருளி உள்ளனர்.


காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருவலஞ்சுழிநாதரும் பிருஹந்நாயகியும் ஸ்வேத விநாயகரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே, இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை, முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ், திருவலஞ்சுழி வாணனை, வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!
நன்றி வணக்கம்!

***
tags- திருவலஞ்சுழி, என்ன புண்ணியம் செய்தனை