WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,199
Date uploaded in London – – 11 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 10-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஆஜ்மீர் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்திபீடம்!
ஸ்ரீ நாராயண உவாச : த்வமேவ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ ச சரஸ்வதீ
ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்த ஸ்வேதா ஸிதேதரா
ஸ்ரீ நாராயணன் சொல்லுகிறார் :- ஹே! காயத்ரி தேவியே, தாங்களே ஸந்த்யையாகவும், காயத்ரியாகவும், ஸாவித்ரியாகவும், ஸரஸ்வதியாகவும், ப்ரஹ்மாவின் சக்தியாகவும், ரக்தஸ்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் ப்ரகாசிக்கிறீர்கள்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் 27வது பீடமாக அமையும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்தி பீடம் ஆகும். இந்தத் தலம் காயத்ரி மலையில் புஷ்கருக்கு அருகில் ஆஜ்மீரின் வடமேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புஷ்கர் பிரம்மா கோவிலுக்கு அருகே 7 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. சதியின் அங்கபாகங்களில் ஒன்றான மணிக்கட்டு விழுந்து அமைந்த சக்தி பீடம் இது.
தக்ஷப்ரஜாபதி தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. தாக்ஷாயணி எனப்படும் சதி தேவி தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று சிவபிரானை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க தக்ஷன் பெரும் கோபம் கொள்கிறான். சிவபிரான் அருளினால் வீர பத்திரனும் காளியாக மாறிய சதியும் யாகத்தை அழிக்கின்றனர். தக்ஷ வதமும் முடிகிறது. தேவி தனது தியானத்தால் அக்னியை மூட்டி அதில் தன் உடலை அர்ப்பணிக்கிறாள். நடந்ததை அறிந்த சிவபிரான் தாக்ஷாயணியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறான். யாராலும் தாண்டவத்தை நிறுத்த முடியாத நிலையில் விஷ்ணு பகவான் தன் சுதர்ஸன சக்கரத்தை ஏவி சதி தேவியின் உடலை 51 துண்டுகளாக ஆக்குகிறார். அவை பாரதமெங்கும் சிதறி வீழ்ந்தன. அவையே சக்தி பீடங்களாக ஆயின.
சதியின் மணிவேதிகா எனப்படும் இரு மணிக்கட்டுகள் ஆஜ்மீர் காயத்ரி மலைப் பகுதியில் விழுந்தன. ஆகவே இங்கு அமைந்துள்ள ஆலயம் மணிவேதிகா ஆலயம் எனப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு பின்னால் ஸ்தாபிக்கப்பட்ட விக்ரஹம் காயத்ரி தேவியினுடைய விக்ரஹம் ஆகும். இங்கு இரு விக்ரஹங்கள் உள்ளன. ஒன்று காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சதியினுடையது. இன்னொன்று அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்பவன் என்ற பொருளில் அமைந்துள்ள சர்வானந்தா என்ற சிவபிரானின் விக்ரஹம். இது சாமுண்டா ஆலயம் புஷ்கர் என்றும் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி விசேஷமாக இங்கு ஒன்பது நாட்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதே போல சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிது. சிவலிங்கத்தின் மீது பால் அபிஷேகம் செய்து வில்வப் பழம் நிவேதனம் செய்யப்படுகிறது.
காயத்ரி அறிவின் தெய்வமாகும். “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்பது காயத்ரி மந்திரத்திற்கான மகாகவி பாரதியாரின் தமிழாக்கம் ஆகும். காயத்ரி மந்திரத்தை உபாசித்து சாதனை மேற்கொள்பவர்கள் தமக்கு உகந்த இடமாக இதைக் கருதி இங்கு வருகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரமுள்ளது காயத்ரி மலை. பிரம்மாண்டமான தூண்களுடன் சிற்பச் சிறப்பைக் காட்டும் வண்ணம் இந்த ஆலயம் அமைந்துள்ளது.மலைகளில் மேருவும், பறவைகளில் கருடனும், புண்ணிய தீர்த்தங்களுள் புஷ்கரும் சிறந்தவை என்று பத்ம புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புஷ்கரானது புஷ்கர், கயா, கங்கா, குருக்ஷேத்திரம், பிரயாகை ஆகிய பஞ்ச தீர்த்தங்களுள் முதன்மை இடத்தைப் பெறுகிறது. பாண்டவர்கள் தமது அக்ஞாத வாச காலத்தில் ஒரு பகுதியை இங்கே கழித்தனர். பாண்டவர்கள் இங்கு ‘பஞ்ச குண்ட்’ என்ற இடத்தில் யக்ஞமும் செய்ததாக ஐதீகம்.
புஷ்கரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு முறை பிரம்மா யாகம் செய்யத் தகுந்த இடம் தேடி வான் வழியே வந்த போது இந்த இடத்தில் அவர் தாமரை வளைந்து நீர் ஊற்று சுரந்ததாம். அந்த இடமே புஷ்கரம் எனக் கூறப்படுகிறது. பிரம்மாவுக்கு உள்ள ஒரே கோவில் இது தான். ஒரு சமயம் சாவித்திரி தேவி பிரம்மாவை சபித்ததால் அவருக்கு வேறு எங்கும் ஆலயம் இல்லை என வரலாறு கூறுகிறது. இங்குள்ள பிரம்மா ஆலயம் முழுவதும் சலவைக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவில் ஏராளமான மக்கள் இங்கு கூடுகின்றனர்.பௌர்ணமி தினத்தை மையமாக வைத்து முன்னும் பின்னுமாக மொத்தம் ஏழு நாட்கள் இந்த விழா இங்கு கொண்டாடப்படுகிறது. பிரம்ம புஷ்கரணியில் ஸ்நானம் செய்து பிரம்மாவை வழிபட்டால் தலை எழுத்து மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயத்ரி தேவியும் சிவபிரானும், பிரம்ம தேவனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீ காயத்ரி ஸ்தோத்ரம் கூறும் சத்ய வாக்கு இது :
மஹா பாப ப்ரஸமனம் மஹா ஸித்தி விநாயகம் |
இதம் கீர்தயேத் ஸ்தோத்ரம் ஸந்த்யா காலே ஸமாஹித: ||
கீர்த்தியைக் கொடுக்கும் காயத்ரி ஸ்தோத்திரத்தை ஸந்த்யா காலத்தில் படித்தால் மஹா பாபங்கள் விலகி அளவற்ற புண்யம் உண்டாகும். மஹா ஸித்திகள் ஏற்படும். நன்றி வணக்கம்!
tags– மணிபந்த் ,சக்திபீடம், பிரம்மா கோவில், புஷ்கர்