WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,663
Date uploaded in London – – 16 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!
ச.நாகராஜன்
கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பாரத தேசத்தில் தமக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக ஹிந்து தர்மத்தில் இருந்து வரும் ஒரு வழிபாட்டு முறை ஸ்தோத்திரங்களைச் சொல்லி தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வழிபடும் வழிபாடு முறையாகும்.
இப்படி துதிப்பதால் ஆறு விதமாக சுத்திகள் ஏற்படுகின்றன.
பாவ சுத்தி
ஹ்ருதய சுத்தி
க்ரியா சுத்தி
சரீர சுத்தி
குல சுத்தி
வாக் சுத்தி
இந்த ஆறு சுத்திகளில் முதல் இரண்டு சுத்திகளான பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிக மிக மேலானவை; பவித்திரமானவை.
பாவ சுத்தியாலும் ஹ்ருதய சுத்தியாலும் மனிதன் அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்க முடிகிறது.
கிரியா சுத்தியால் நல்லன செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்ல காரியங்களாகவே அமைகிறது.
சரீர சுத்தி ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக நாம் நம்மைத் தயார் செய்யும் போது ஏற்படும் ஒன்று. அது மட்டுமல்ல தொடர்ந்து இப்படி தினமும் செய்து வரும் ஸ்தோத்திர வழிபாட்டு முறை, நாமே அறிய முடியாதபடி உடலில் நுட்பமான மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
குல சுத்தி என்பது தொடர்ந்து செய்து வரும் ஸ்தோத்திர வழிபாடு. இது ஒரு குடும்பத்தையே சுத்தப்படுத்த்வதோடு குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும அந்த வழிபாட்டில் இணைக்கிறது. தாத்தா, ம்கன், பேரன் என்று வழி வழியாக குல முறைப்படி வழிபாடு தொடர்கிறது. குல தெய்வ வழிபாடு என்று ஒன்று ஏற்பட்டு இந்த குலதெய்வத்தை வழிபடுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
வாக் சுத்தி என்பது தொடர்ந்து இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதால் நல்லதையே பேச வேண்டும் என்ற நிலை உருவாகி சொல்லுகின்ற வார்த்தைகள் பலிக்கும் அளவிற்கு வாக் சுத்தி ஏற்படுகிறது.
ஆக இந்த ஆறு சுத்திகளுக்கும் ஆதாரமாக அமைவது பக்தியே.
பக்தியை வளர்க்க உதவுவது ஸ்தோத்திரங்களே.
இது மனதின் அடித்தளத்திலிருந்து ஏற்பட வேண்டும்.
ஸ்தோத்திரங்களைச் சொல்லும் போது சிரத்தையுடன் சொல்ல வேண்டும், சரணாகதி அடைந்து சொல்ல வேண்டும், ஆத்ம சமர்ப்பணம் செய்து சொல்ல வேண்டும். இந்த மூன்றும் அமைந்தால் ஸ்தோத்திரத்தின் பலன் உடனடியாக ஏற்படுகிறது.
ஸ்தோத்திரம் என்பது பலகோடி பிரம்மாண்டங்களைப் படைத்துக் காத்து வரும் ஒரு பெரும் மஹாசக்தியுடன் தனி நபர் என்னும் அதைச் சொல்லும் ஜீவனை இணைக்கும் பாலமாக அமைகிறது.
மகான்களின் மொத்த அபிப்ராயமும் முடிவது ஒரு விஷயத்தில் தான் :- மனிதரின் தவம், வேத அத்யயனம், யாக யக்ஞங்களைச் செய்தல், சத் கதையைக் கூறல், கேட்டல், ஞானம் பெறல், தானம் செய்தல் ஆகிய அனைத்து நல்ல கர்மங்களின் அழியாத பலனாக பகவானின் குணங்களைப் பாடுவது அமைகிறது.
இந்த குணங்களைச் சொல்வது ஸ்தோத்திரங்களே!
உயிர் காக்க உதவுவது ஸ்தோத்திரங்களே என்பதை நமது புராண இதிஹாஸங்கள் தகுந்த உதாரணங்களுடன் விளக்குகின்றன.
கஜேந்திரனின் ஆதிமூலமே என்ற உள்ளார்ந்த அழைப்பு கஜேந்திரனின் உயிரைக் காத்தது.
உத்தரையின் பக்தி உலகம் அறிந்த ஒன்று,’
திரௌபதி ஹ்ருதய கமல வாஸா என்று உளமுருகி அழைத்த தருணத்தில் அவளது மானத்தைக் காக்க ஓடோடி வந்தான் கண்ணபிரான்.
அர்ஜுனனுக்குத் தோழனாக அமைந்து ரதத்தை ஓட்டி பாண்டவரைக் காத்து துஷ்ட துரியோதனாதியரை அழித்தான் கண்ணன்.
ஸ்தோத்திரங்கள் கூறுவதால் எளிதில் உடனடியாக நாம் அடையக் கூடிய பலன்கள் :
துக்கம் தீர்வது (துக்க நாசம்)
சாஸ்வத பதம் (என்றும் இறைவனுடன் இருக்கும் மேலான நிலை)
பரம சாந்தி (சொல்லுதற்கரிய மன சாந்தி)
நிர்மல புத்தி (தெளிவான அழுக்கற்ற புத்தி)
ப்ரபு சரணாம்புஜத்தில் ஈடுபாடு
ஸ்தோத்திரம் சொல்வதில் ஈடுபாடும் நம்பிக்கையும் ஏற்படுவது
மோக்ஷ ப்ராப்தி ஆகியவை உள்ளிட்ட பெரும் பலன்கள் ஸ்தோத்திரம் சொல்வதால் உறுதி செய்யப்படுகின்றன.
பலன் தரக் கூடிய ஆயிரக்கணக்கான ஸ்தோத்திரங்களில் நமக்குப் பிடித்த ஒன்றை சொல்ல ஆரம்பித்துப் பயன் பெறலாமே!