மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! (Post No.10,765)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY B. KANNAN, DELHI
Post No. 10,765
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வஸந்த விழா
மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்!
Written By B.Kannan, Delhi

உலகளாவியத் தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப் பதிவில் கவிகளும், புலவர்களும் பெண்கள், மரங்கள், பூங்கொடிகளுக்கு இடையே நிலவும் நெருங்கிய நட்ப்பைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்….

வஸந்த விழா ஆரம்பித்து விட்டாலே மானுடர்கள் மட்டுமின்றி மரம், செடிகொடி களுக்கும் ஒருவிதக் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறதாம். நிழல் விழும் தங்கள் மரத்தடியில் இளம் பெண்டிர் அம்மானை ஆடுவதையும், கிளைகளிலிருந்துத் தொங்கும் ஊஞ்சலில் வேகவேகமாக முன்னும், பின்னும் உந்தித் தள்ளியவாறு மேலும் கீழும் பரவசமுடன் செல்வதையும், பனம்பழத்தை ஒத்த ஸ்தனங்களால் தங்களை அணைத்துக் கொண்டு, கோவைப் பழம் (பிம்பா) போன்ற சிவந்த உதடு களால் முத்தமாரிப் பொழிவதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்குமாம். பேறுகாலப் பெண்கள் அநுபவிக்கும் ‘மசக்கை’ (தோஹத) சிரமங்கள் இவைகளுக்கும் உண்டாம். அவற்றைப் போக்கக் கூடிய வழிகளை உபயோகித்தால் அவை மன மகிழ்ந்து மலருமாம். .தார் தள்ளாத வாழை, காய்க்காத முருங்கை முதலியவற்றை, முக்கியமாக சூரியகிரகணத்தின் போது உலக்கை கொண்டுச் செல்லமாகத் திட்டி அடித்தால் பலனளிக்கும் என்பதைப் பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம், அல்லவா?
இதை ருசிகரமாக, சிருங்கார ரசனையுடன் வர்ணிப்பதில் தான் மொழி பேதமின்றி அனைத்துக் கவிஞர்களிடையேப் போட்டா போட்டியே நிலவுகிறது

முதலில் குரு சங்கரரின் சொல்லாடலிலிருந்துப் பயணிப்போம்…
ஆதிசங்கரர் தான் அருளிய சௌந்தர்யலஹரிப் பாடலில் ஒரு ருசிகரமானச் சம்ப வத்தை விவரிக்கிறார். அந்தப் பாடல், இதோ…
नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥ 85॥
நமோ வாகம் ப்ரூமோ= உன்னைப் போற்றி வணங்குகிறோம், நயந ரமனீயாய= கண்களுக்கு ரம்மியமான, பதயோ:=பாதகமலங்களுக்கு, தவ அஸ்மை த்வந்வாய=உனது இரு பாதங்களும்,
ஸ்புட ருசி ரஸலக்த கவதே=ஒளிவீசும் ஈர மருதோன்றி (செம்பஞ்சு) குழம்புடன் கூடிய, அசூயத் யத்யந்தம்= ரொம்பப் பொறாமையுடன், யத் அபி ஹனனாய= (அக்கால்களால்) உதைபட்டுப் (பூ பூக்க) ஸ்ப்ருஹயதே=விரும்புகிற, பசுனாம் ஈசான:= பசுபதியான சிவன், பிரமத வன=உல்லாச நந்தவனத்தில் இருக்கும், கங்கேலித ரவே= அசோகமரத்தைப் பார்த்து…மேலும்,
சேது நாட்டைச் சேர்ந்த வீரசோழன் (வீரை) கன்னலஞ்சிலை வேள் என்றழைக் கப்படும் கவிராஜப் பண்டிதர், சௌந்தர்யலஹரியைத் தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார். அதிலுள்ள இதற்குரியப் பாடல்:

அரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற
உரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே.
‘அன்னை பார்வதி தேவி பரமேஸ்வரனுடன் ஒருசமயம் நந்தவனத்துக்குச் சென்றி ருந்தார்..குளிர்ச்சியும் வெப்பமும் மணமுங் கொண்டு அங்குள்ளப் பூஞ்சோலை கூத்தொடு (கூத்து- செடி கொடி மரங்களின் அசைவு) எதிர்கொண்டு உபசரிக்க, அங்கு தென்றல் உலவியது. அங்கிருந்த. அசோகமரத்து மலர்களை விரும்பியஅன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். உடனே பூமாரிப்பொழிந்தது. அதைக் கண்ணுற்ற பரமசிவானார், தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது என்று பொறாமையுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு எனக்கும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேன் மேலும் பெருகட்டும்’ என்பது இவ்விருப் பாடல்களின் பொருளாகும்.

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களில் காணும் கவி மரபு. இதை நாம் காளிதாசனின் “மாளவிகாக்நி மித்ரா” வில் நாயகி மாளவிகாவின் செயலாலும், ஶ்ரீ ஹர்ஷதேவரின் “ரத்னா வளி”யில் இரு நாயகிகளான ராணி வாஸவதத்தை, சாகரிகா வின் செயல்களாலும் அறிகிறோம். இம்மரபு சங்ககாலத்திலேயே தமிழ்மரபுடன் கலந்து விட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்துப் புலனாகிறது.

அகப்பொருள் இலக்கிய மரபில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. அது, தலைவியின் காதல் களவொழுக்கத்தை அறிந்து வைத்துள்ள தோழி உரிய காலத் தில் அதனைச் செவிலிக்கு உணர்த்துவதாகும்.

அறத்தொடு நிற்றல் என்பது தலைவியின் காதலை வெளிப்படுத்துவது. இந்தத் துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டி அமைந்துள்ளது 48-வது குறிஞ்சித் திணைப் பாடல்..அது செவிலி கூற்றினைத் தோழி வாங்கிக் கொண்டு மறு மொழியாகக் கூறியது. தங்கால் முடக் கொற்றனார் பாடியது

‘அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
‘பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்’ என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
‘புலி புலி!’ என்னும் பூசல் தோன்ற……..

“அன்னையே! உன் மகள் பாலுங் கூட உண்ணாதவளாய்ப் பெரிய துன்பங்கொண்டு உடல் வெளிறி இளைத்து வருகின்றாள், அது ஏனென என்னை வினவுகின்றாய். அதற்கு என்ன காரணம் எனத் தெளிவாக எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தோன்றுகிறது.சில நாட்களுக்கு முன்னம் நானும் அவளும் மற்ற தோழிமாருடன் பூக்கள் மலிந்து மலர்ந்துள்ள மலைச் சாரலுக்கு விளையாடச் சென்றிருந்தோம். பூக்கொய்து விளையாடுகையில் அங்கொரு வேங்கை மரம், கிளை கொம்பெல்லாம் பூத்து மணம் பரப்பி நின்றிருந்ததைக் கண்டோம். ஒரு சிக்கல். அந்தக் கிளைகளெல் லாம் கைக்கெட்டா உயரத்தில் இருந்தன. அந்தக் கிளைகளைத் தாழச் செய்யப் புலி புலி என்று கூக்குரல் எழுப்பினோம்.தன்னைத் தான் கூவி அழைக்கிறோம் என்று எண்ணிய வேங்கை மரம் (வேங்கை=புலி என்றும் பொருள்) மலராத மொட்டுகளை யும் மலரச் செய்து, கிளையைச் சாய்த்து எங்களை உற்று நோக்கியது. கையெட்டும் அளவில் இருக்கும் பூக்களைக் கை நிறையப் பறித்து மகிழ்ச்சியுடன் சூடிக் கொண் டோம்… என்று வர்ணனைப் போகிறது. புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது ஒரு பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும். இதுவும் தோஹதக் கிரியையின் ஓர் அங்கமாகும்.

இச்சமயம் உவமான சங்கிரஹம்- (இரத்தினச் சுருக்கம் பகுதி) நூலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அணியிலக்கண வளர்ச்சி வரலாற்றில் உவமைப் பொருட்களைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியைக் கையாண்டுள்ளது.இதை எழுதியவர் யாரென்றுத் தெரியவில்லை. 1915-16-ம் ஆண்டுகளில் செந்தமிழ் மாத இதழில் தொடராக வெளி வந்துள்ளது. உவமான சங்கிரகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒத்த உவமைக் கருத்துக் களையே இதுவும் தருவதால் அதன் ஓர் அங்கமாகவே இதுவும் கருதப்படுகிறது. பிரிவாற்றாமைக்கு உரிய அறிகுறிகள் என்ற தலைப்பில், “மகளிரான் மலர் மரம்” எனும் பகுதியில் கலித்துறையில் அமைந்துள்ள 41வது பாடல், மகளிருக்கும்
மரங்களுக்கும் இடையே நிலவும் உறவை நேர்த்தியாக விவரிக்கிறது.

எண்மா தவிசண் பகம்பாலை புன்னை யெழிற்படவி உட்
கொண்மா மகிழ மராவொ டசோகு குராமுல்லையின்
பண்பாட னீழற் படனட்ட லாடற் பழித்தலுண்ணல்
கண்ணோக்கு தையனைணத் தல்சிரித் தற்கலர்க் காடுருமே
எண் -மதிக்கத் தக்க, மாதவி- குருக்கத்தி சண்பகம் ஏழிலைப் பாலை -, புன்னை–சண்பகம், பாலை, புன்னை, எழில் படலி- அழகிய பாடலி (பாதிரி) கொள்மா – கொள் ளுதர்க்குரிய மா மரம் மகிழ் – மகிழ, அம் மராவுடனே- அழகிய மரா உடனே அசோகு – அசோகம் குரா- குரா முல்லை-முல்லை, மின்- (ஆகிய இவைகள் முறையே இப்படிச் செய்தால்)

மாதவி-பண்பாடல் னீழல்படல்- சண்பக மரம் -நிழல் படுவது, ஏழிலைப் பாலை மரம்- நட்டல் (நட்பு கொள்ளுதல்), புன்னை- (ஆடல்), பாதிரி, பாடலி- (பழித்தல்), மா மரம்- கவரும் பார்வை, மகிழ மரம்- உண்ணல் (நுகருதல், பற்களால் கவ்வுதல்), மரா- கண்ணோக்கு (அருளுடன் பார்ப்பது), அசோகு- காலால் உதைப்பது, குரா-அணைத்தல், முல்லைக்கொடி- சிரித்தல், அலர்க் காடுருமே – மலர்கள் பூத்துக் குலுங்கும்.

விளக்கம்:
மரா= மரா/மராஅம்/மரவம் என இலக்கியங்களில் சொல்லப்படுபவை மூன்று பெரு மரங்கள்–(1) சுருளி/சுள்ளி (சூர்ணீ = வடமொழிப்பெயர்). இதன் பாலிலிருந்துச் சாம்பி ராணி தயாரிக்கப் படுகிறது. மடையன் சாம்பிராணி மரம் என்ற பெயருமுண்டு. (2) கொற்றவை (பாலை) நிலத்தின் யா என்னும் ஆச்சா மரவகைகள்.Shoreatrees,காராச்சா, வெண்மையானப் பூக்களைக் கொண்டது..(3) கடம்பு :செங்கடம்பு (முருகன் அணிவது),
வெண்கடம்பு, பந்துக்கடம்பு (காதம்பரி என்னும் கள் தயாரிப்பது. அம்பாளின் மலர்), …
மரா/ மரா அம் என்ற பெயர் தமிழில் உள்ள அரிதான ஓரு பெயர்ச்சொல் (TAUTONYM) ஆகும். மரம் என்ற தாதுமூலத்தாலேயே அழைக்கும் மரங்கள் இவைதாம்.

மாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய, வைதிக மரபுகளையும் பதிவு செய்துள்ளார்.காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளியது. இயற்கை வருண னையே காப்பியமாக அமைந்தது. இதில் இளவேனிற்காலத்தில் இளமகளிர் புறத்தே சென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத் தோஹதகக் கிரியைகளை யும் அவற்றுக்கு உடம்படும் மரங்களையும் பற்றிக் கீழ்கண்டவாறு விரிவாகப் பாடுகிறார்.

மகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லைமலர் கொய்தனர். அது,’முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா’ (மூரல்= புன்சிரிப்பு)என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல் லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக் கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு அபராதம் விதிப்பது போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல அச்செயல் இருந்தது. முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன் முறுவலைக் குறித்தது.

ஏழிலைம்பாலை (ஓரு காம்பில் 7 இலைகள் இருப்பதால் இப்பெயர்) என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள். முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்தில் தனிமையில் சுற்றித் திரிந்தபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு வெளி யேற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவு கூர்ந்தாரென்னும்படியாக, அவ்வேழிலைம்பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறு மையடைந்த ஏழிலைம்பாலை மரமும் அவள் நட்புக் கொண்டாள் என நினைத்துக் கொத்து விரிந்தது புது மலர் முகிழ்ப்ப மங்கை அதனை நெருங்கிக் கொய்தாள்.

பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர்,அம்மரத்தை இகழ்ந்தனர். ‘பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும்
மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலையும் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதீர் எனப் பணிந்த தைப் போலக் கைக்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக்கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு.

செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீண்டும் மீண்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரணத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றனர்

மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப் பார்வை வீரியத்தினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன்றன., அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதை ஒத்துக்கொண்டது போலக் கொய்தலை நிறுத்திக் கைசோர்ந்து இளைத்தனர்.

மகிழமரக் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலில் பறிப்பேன் நான் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு பறித்தனர். ஒருசிலர் ஒருகரத்தால் கிளையைப் பற்றிக் கொண்டு மறு கரத்தால் பரித்தனர். அருகில் சிலர், ஒருகையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் என எண்ணி மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகைகளினாலும் பறித்தனர். அவ்வாறு பறித்தும் மலர்கள் குறை யாமையைக் கண்ட பிறர் மகிழமரம் நடுநிலைமைக் காக்கவில்லை என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர்.

மாதவி- குருக்கத்தி .( வசந்த மல்லி) இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரை மலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்புக்கு ஏற்ப பாடவே, தேன் ஒழுக மாதவிமலர் மிகுதியாகப் பூத்துக் குலுங்கியது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துத் தம் கைம்மலரால் அம்மலரை முகத்தில் வியர்வை அரும்பக் கொய்தனர்.

மகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊஞசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ஒளியுடைய எம் நிறத்தைக் கவர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத் தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோகமலரினை முயற்சியின்றிக் கிடைத் தமையால் மகிழ்ச்சியுடன் வேறு சிலர் அவற்றை அள்ளிக் கொண்டுச் சென்றார்கள்.

புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றனர்.

மகளிர் தழுவ மலர்வது குரவம்.(மலை வேம்பு, நீண்ட நீல கண்ணாடிக் குப்பி போன்றது) குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். அம்மானை விளையாட்டில் மணியால் செய்த அம்மானைக் காயைக் குரவம் பாவைக்கு அளிப்பவர் போல மேலே வீச, அது மராமரக் கிளையில் சிக்கித் தங்கியது. அந்த அம்மானைக் காயை எடுப்பதற்குக் குரவ மரத்தின் மேல் ஏற விரும்பி அம்மரத்தை மகளிர் தழுவினர். தாம் அம்மானைக்காயைக் கவர்ந்து கொண்டதாக நினைத்து இவர்கள் தாக்குவர் என அஞ்சிய குரவம் அடிதாழ்ந்து வணங்குவது போலத் தாழவே, கவர்ந்து கொண்ட பொருளோடு அபராதத் தொகை யும் கொடுப்பது போல, அம்மானைக் காயுடன் எமக்குப் பூக்களையுந் தந்ததெனப் புகழ்ந்து குரவ மலர்களைக் கொய்தனர்… என்று வர்ணிக்கிறார் புலவர்.

இதுவரை தமிழ் இலக்கிய மரபைப் பார்த்தோம். அடுத்து சம்ஸ்க்ருதக் கவிகள் இதை எப்படிக் கையாண்டுள்ளார்கள் என்பதைக் காணலாம்.

           -------------------------------------------------------------------------------

tags- வஸந்த விழா, மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: