
Post No. 11,267
Date uploaded in London – – 15 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானி!
வெர்னர் ஃபார்ஸ்மேன் (Werner Forssman -பிறப்பு 29-8-1904 மறைவு 1-6-1979) நோபல் பரிசு பெற்ற ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி.
‘தன் இதயத்தைத் தானே தொட்டவர்’ என்ற பெயர் அவருக்கு உண்டு.
இதற்கான காரணம் அவர் தன்னையே இதய ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டது தான்!
அவரது டாக்டர் இப்படிச் செய்யக்கூடாது என்று அவரை கண்டிப்பாகச் சொல்லி இருந்தார்.
ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜெர்டா டிட்ஜென் (Gerda Ditzen) என்ற நர்ஸிடம் நைஸாகப் பேசி தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உதவி செய்யுமாறு வேண்டினார்.
டிட்ஜென் அறுவை சிகிச்சை செய்யும் அறையில் அனைத்து உபகரணங்களையும் அறையையும் தூய்மையாக இருக்கச் செய்யும் பணியில் திறம்பட வேலை பார்த்து வந்தவர். அவர் இதற்கு ஒப்புக் கொண்டார் – ஒரு நிபந்தனையின் பேரில்.
இப்படி செருகு குழாயை இதயத்த்தில் செருக வைப்பதை தன் மீது தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும், அவரை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதும் தான் அந்த நிபந்தனை.
ஃபார்ஸ்மேன் ஒப்புக் கொண்டார். ஆனால் தந்திரமாக டிட்ஜெனைப் படுக்கையில் கட்டிப் போட்டு விட்டு தன் கையில் 60 சென்டிமீட்டர் நீளமுள்ள குழாயைச் செருகினார். எக்ஸ்ரே ரூமுக்கு ஓடினார்.
அது இதயம் வரை சென்றது.
இது பின்னால் அனைவருக்கும் தெரிய வந்தது.
இதய சம்பந்தமான வியாதிகளுக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவி செய்தது.
அவரை அனைவரும் புகழ்ந்தாலும் கூட அனுமதியின்றி இப்படிச் செய்ததற்காக அவரை அவரது ஜெர்மானிய புரபஸரான சாயர்ப்ரூச் டிஸ்மிஸ் செய்து விட்டார்.
பின்னால் 1956இல் அவர் நோபல் பரிசு பெற்றார்.
12
உணவு விடுதியில் நாப்கினில் கண்டுபிடிக்கப்பட்ட MRI கண்டுபிடிப்பு!
பிரபல விஞ்ஞானியான பால் சி. லாடர்பர் (Paul C. Lauterber) 2003ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.
(பிறப்பு 6-5-1929 மறைவு 27-3-2007)
கதிரியக்க பாதிப்பு இல்லாமல் மனித உடலின் உட்பகுதிகளைப் பார்க்க வழி வகுத்தவர் இவர் தான்!
எக்ஸ்ரே மூலமாக இல்லாமல், மாக்னெடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் – எம் ஆர் ஐ (Magnetic Resonance Imaging – MRI) எனப்படும் உடலின் உட்பகுதிகளையும் மெல்லிய திசுக்களையும் பார்க்க வழி வகுக்கும் வழிமுறை இவரால் உருவாக்கப்பட்டது.
1980இல் உலகெங்கும் நடைமுறைக்கு வந்த இந்த எம் ஆர் ஐ வருடந்தோறும் சுமார் ஆறு கோடி பேர்களுக்கு செய்யப்படுகிறது.
இது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை நன்கு கண்காணித்து எந்த வியாதி எப்படி இருக்கிறது என்பதைக் கணிக்க உதவுகிறது. மூட்டு ஜாயிண்ட் உட்பட்ட பல மூட்டுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
இது கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவையானது. ஒரு நாள் லாடர்பர், உணவுவிடுதி ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று உத்வேகம் பெற்ற அவர் அருகிலிருந்த நாப்கினை எடுத்து அதில் வரைய ஆரம்பித்தார். அது தான் எம் ஆர் ஐ கண்டுபிடிக்க வழி வகுத்தது!
13
ஆர் என் ஏ கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman)இரசாயன இயலில் 1989ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றவர். ஆர் என் ஏ (RNA( எனப்படும் ரிபோ நியூக்ளிக் ஆசிட் (Ribonucleic Acid) பற்றிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவர் இவர். (பிறப்பு 7-5-1939 மறைவு 5-4-2022).
கெமிக்கல் ரீ ஆக்ஷன் எனப்படும் இரசாயன எதிர்வினையாற்றலைச் செய்ய புரோட்டீன்கள் மிகவும் தேவை என்பதை இவர் நிரூபித்தார்.
2010இல் இவர் ஹாரி க்ரெய்ஸருக்கு அளித்த ஒரு பேட்டியில் தான் இதை தற்செயலாகக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
ஆர் என் ஏ மாலிக்யூலை அவர் ஆராய்ந்த போது அது புதிய புரோட்டீன்களை உருவாக்க எப்படி மரபணு குறியீட்டைக் கொண்டு செல்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். அவரே ஆச்சரியப்படும்படி, ஆர் என் ஏ மாலிக்யூல் இல்லாமல் புரோட்டீன் ஒரு என்ஜைம் போல வேலை செய்வதில்லை என்பதைக் கண்டுபிடித்தார். பின்னால் புரோட்டீனே இல்லாமல் கூட ஆர் என் ஏ மாலிக்யூல் ஒரு கிரியா ஊக்கிபோல செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதுவரை அனைவரும் எண்ணி வந்ததற்கு மாறாக இந்தக் கண்டுபிடிப்பு அமையவே அனைவரும் வியந்தனர். அவர் உலகப் புகழ் பெற்றார்!
**

புத்தக அறிமுகம் – 56
அறிவியல் துளிகள் – பாகம் – 16
பொருளடக்கம்
392. ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!
393. 2022இல் விண்வெளியில் இந்திய வீரர்!
397. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 1
398. ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2
400. அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?
401. இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?
402. மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!
406. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1
407. மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2
408. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1
409. புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2
410. ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?
411. உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?
412. ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!
413. வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!
414. நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!
415. சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்!
416. இனி விண்வெளியில் மனிதன் வாழமுடியும்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினாறாம் பாகம் – எட்டாம் ஆண்டில் 27ஆம் வாரம் முதல் வெளியான 392 முதல் 416 முடிய உள்ள 25 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர்
14-5-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**