காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 1 (Post 11,534)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,534

Date uploaded in London – 12 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

10-12-2022 அன்று நிகழ்த்திய உரை

ச.நாகராஜன் எழுதியுள்ள  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம், திரைப்படங்களில் ராமர் பாடல்கள் ஆகிய மூன்று புத்தகங்களில் உள்ள கருத்துக்களை பெரும்பாலும் கொண்டுள்ள உரை

ச. நாகராஜன்

10-12-2022 உரை

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 1


 அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று ஒரு நன்னாள். ஏனெனில் தமிழுக்குப் பெருமை சேர்த்த தலையாய, காலத்தை வென்ற கவிஞனை  மனதில் இறுத்திக் கொண்டாட இருக்கிறோம்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

அற்புதமான இந்தப் பழம் பெரும் பாடல் உலகிற்கு இருள் அகற்றி ஒளி தருவது இரண்டு. ஒன்று சூரியன் இரண்டாவது தமிழ் என்று கூறுகிறது. எத்துணை பொருள் பொதிந்த பாடல்.

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக கோடானு கோடி ஜீவராசிகளுக்கு ஒளி கொடுத்து உயிர் கொடுத்து வருபவன் சூரியன்.

அதே போல அக இருள் போக்கும் அற்புதத் தமிழ் மொழி கோடானு கோடி பேர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அக இருள் போக்கி, அவர்களை வாழ்விக்க வைக்கிறது.

இந்தத் தமிழை வாழ வைக்கும் அறிஞர்களைக் கொண்டாடுவது நமது சமுதாயக் கடமை.

எந்த ஒரு நாடு ஆகப் பெரும் அறிஞர்களையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறதோ அதுவே சிறந்த நாடு.

அவர்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம்; உன்னதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

அந்த வகையில் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியைத் தன் பெயரிலே கொண்ட திரு காவிரிமைந்தன் வேறு யார் பொய்ப்பினும் தான் பொய்யாமல் கவியரசன் கண்ணதாசனை நாம் எண்ணும்  எண்ணதாசர்களாக ஆக்குவிக்கும் பான்மை போற்றத் தக்கது.

கண்ணதாசன் கலைக்கூடத்தில் அவருடன் இணைந்து நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி முனைவர் திரு தமிழ் இயலன் இந்த இணையவழிக் கூட்டத்தை நடத்துவது பாராட்டுக்குரியது.

ஐ. ஏ. எஸ் என்பதை Inspiration, Admiration, Salutation என்று கொள்கிறேன் நான். உத்வேகத்துடன் வியந்து பாராட்டப்பட வேண்டிய தலையாய தமிழ் மகன் கண்ணதாசன். அவரை முனைவர் மகா சுந்தர் போற்றும் தமிழ்த் தாய் வாழ்த்துடன்  நினைப்பது சாலச் சிறந்தது.

தமிழைத் தன்னுடன் இணைத்து தமிழுடன் இணைந்த கவியரசு கண்ணதாசனை உயிராக நேசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இணைய வழியில் கூடி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

சங்கப் புலவர்கள், தெய்வப்புலவர் திருவள்ளுவர், கவிச்சக்கரவர்த்தி கம்பன், தமிழாகரன் திருஞானசம்பந்தர், அப்பர், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், மகாகவி பாரதியார் என்ற பெரும் பரம்பரை அவ்வப்பொழுது தமிழுக்கு புதிய அணிகளையும் சந்தங்களையும் தந்து அதன் சிறப்பை உலகெங்கும் பரப்பி வியக்கச் செய்வதை வரலாறு கூறுகிறது.

அந்த வகையில் பாரம்பரியம் வழுவாமல் ஆனால் அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை உள் கிரகித்து புதியதொரு பாடல் வழியைக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

இவருக்கும் ஏனைய மற்றவருக்கும் உள்ள ஒரு மாபெரும் வித்தியாசம் :REACH.  அதாவது, கூறிய கருத்துக்கள் ஆயிரக்கணக்கானோரை உடனடியாகச் சென்றடைதல்.

கவிஞர் பாடினார் என்றால் அது உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அந்தக் கடைக்கோடி தமிழனையும் உடனடியாகச் சென்றடைந்தது.

கோயம்பேடில் வசிக்கும் சாமானியனாலும் சரி, கோடீஸ்வரன் மாளிகையாக இருந்தாலும் சரி, அவரது பாடலை அனைவரும் கேட்டு ரசித்தனர். இன்றும் ரசிக்கின்றனர்.

இதை காஞ்சி பரமாசார்யரே அவரிடமே சொல்லி இருக்கிறார்.

‘நான் பேசுவதை விட நீ கூறினால் அது அனைவரையும் எளிதில் சென்றடையும், அனுபவம் குழைந்தது அது’  என்றார் அவர்.

24-6-1927ஆம் ஆண்டு பிறந்த முத்தையா என்னும் கண்ணதாசன் 17-10-1981இல் மறைந்தார்.  54 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அவரை நினைத்துப் போற்றுகிறோமே அந்த ஒன்றே போதும் அவர் காலத்தை வென்ற கவிஞன் என்பதை உணர்த்த.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும், அந்த சூத்திர சுருக்கத்தில் படிப்போரின் அல்லது திரைப்படத்தில் பார்ப்போரின் மனக் கற்பனைக்குத் தக்கபடி பொருளை விரிவுபடுத்திக் கொள்ள வழியை அகலமாக வைத்திருப்பதும் அவருக்கே உரித்தான தனிப் பாணி.

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு Multi Dimensional Personality யாக ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். நல்ல பேச்சாளர். நடிகர். மேற்கோள்களை உருவாக்கியவர். கேள்விக்கு தக்க பதிலைத் தந்தவர். ஸ்வரம் கண்ட இசை மேதை.எல்லாவற்றிற்கும் மேலாக கள்ளங்கபடில்லா வெள்ளை உள்ளம் கொண்ட மா மனிதர். நல்ல மனிதர். இப்படிப் பல பரிமாணங்கள். Multi faceted Personality!

4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக் கணக்கில் கட்டுரைகள்என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.

வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.

இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும், காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.

அந்த வகை கணிப்பில் காலத்தை வென்ற கவிஞனாக மிளிர்கிறார் அவர்.

கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்;

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

அத்தோடு சமகால அரசியலை – குறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர்., தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கண்டு அதைத் தமிழ் மக்களுக்குத்தந்தவர்.

 சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.

நாதாப்ரிய சகி என்று கட்டுப்பட்டிருந்த திரைப்படத் துறைப் பாடல்களிலே தமிழ்ப் புரட்சியைச் செய்தார் கவிஞர்.

நாதா போனது. என் தலைவன்மன்னவன் வந்தானடிஅத்தான் என் அத்தான் என்று ஆனது. ப்ரிய சகி, தோழி ஆனது. கொஞ்சி விளையாடும் தமிழ்ச் சொற்கள் நளின நடை போட்டு பாடல்களில் நர்த்தனம் ஆடத் துவங்கின.

தமிழில் சகலத்தையும் தந்த சகல கால சங்கமம் கவியரசால் உதித்தது. சகலகலாவல்லவன் ஆனார் அவர்.

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்என்பது நல்ல குறுந்தொகையில் 40வது பாடல்.

இதே கருத்து வரும்படி

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

என்று பாடல் அமைத்தார்.

படம் : வாழ்க்கைப்படகு.

தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: