
Date uploaded in London – – 3 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 46
கோவில் எண்கள் –67,68,69,70
கேரள மாநிலத்தில், தென் திசையை நோக்கி வர வர , திருவனந்தபுரம் வரை ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களைக் காணலாம் . மாநிலம் முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை முதல் 40 பகுதி கட்டுரைகளில் கண்டோம். ஏனையவை விழாக்கள் மூலம் நிறைய பக்தர்களை இழுக்கின்றன. பகவதி , ஐயப்பன் , சிவன் விஷ்ணு கோவில் இல்லாத இடம் இல்லை . பல இடங்களில் சுப்ரமண்யர், மாரியம்மன் , பேச்சியம்மன் கோவில்களும் இருப்பது தமிழ்நாட்டின் தாக்கத்தைக் காட்டுகிறது . காலடி, சோட்டாணிக்கரா , த்ரிபுனித்துரா , த்ரிகக்காரா , எர்ணாகுளம் கோவில்களைக் கண்டோம் .மாதிரிக்காக மேலும் சில கோவில்களைக் காண்போம்.
67.கக்கூர் காளவயல் மாட்டுவண்டி ரேஸ்
எர்ணாகுளத்திலிருந்து 45 கி.மீ., பிரவம் என்னும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் காளை வயல் என்னும் அறுவடைத் திருவிழா பிப்ரவரி மாதம் நடக்கும். இதன் சிறப்பு என்னெவென்றால் மாட்டுவண்டி பந்தயமும் இரண்டு கோவில் அம்மன்கள் சந்திப்பும் ஆகும்.
எடப்பாரா , அம்பசேரி என்னும் இரண்டு ஊர்களில் கோவில் கொண்டுள்ள தேவிகள் விழாவன்று
கக்கூர் காளவயலில் சந்திப்பார்கள்; அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்ப மாதத்தில் 4 நாட்களுக்கு விழா நடக்கும்.. மூன்றாம் நாள் விழாவில் தேவியர் சந்திப்பு நடக்கும். இரண்டு அம்மன்களும் பஞ்சவாத்யம், நாகஸ்வரம் முழக்கத்துடன் யானை மீது பவனி வருவார்கள்.பின்னர் அம்பசேரி கோவிலில் எழுந்தருளுவார்கள் ; மறுநாள் இரவில் அவரவர் கோவிலுக்குத் திரும்பிப் போவார்கள்.
பிரவம் மாட்டுவண்டி ரேஸ்
இந்த விழாவினை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி ரிஷப வாஹனம் என்ற பெயரில் ஊர்வலமாக வரும். நிறைய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் . முக்கியமாக 40 மாட்டு வண்டிகள் பங்கேற்கும் பந்தயம்/ ரேஸ் நடைபெறும் . அத்தோடு ஐந்து நாட்களுக்கு விவசாயக் கண்காட்சியும் நடக்கும்.

68.பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள்
எர்ணாகுளம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் ..பேச்சியம்மன் கோவில் இருக்கிறது (மதுரையிலும் வைகை ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் .பேச்சியம்மன் கோவில் இருக்கிறது. அந்தப் படித்துறைக்கே அம்மனின் பெயர்தான் ).
ஆண்டுதோறும் எட்டுநாள் விழா நடக்கும் கடைசி நாள் விழாவில் வளஞ்சசம்பலம் தேவி கோவிலிலிருந்து நையாண்டி மேளம், உடுக்கு இசையுடன் ஊர்வலம் புறப்படும்; அதி காலையில் கோவிலை அடையும் தீ மிதித்தல் அல்லது பூக்குழி இறங்குதல் எனும் அக்கினிப்பிரவேசம் முக்கிய சடங்கு ஆகும் . நிறைய நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்பது தனிச் சிறப்பு ஆகும்
எர்ணாகுளம் திவான் ரோடு மாரியம்மன்- பத்ர காளி கோவில் நகரின் முக்கியக் கோவில்களில் ஒன்று. ஒரே கருவறையில் மாரியம்மனும் பத்ரகாளியும் இருப்பது தனித்துவம் மிக்கது.
ஆண்டுதோறும் 5 நாள் விழா நடக்கிறது கடைசி நாளன்று இரண்டு அம்மன்களும் இரண்டு யானைகளில் இரவு முழுதும் பவனி வருவார்கள். நையாண்டி மேளம், நாகஸ்வரம், பஞ்ச்ச வாத்யம் வாசிப்போர் தம் திறமையைக் காட்டுவார்கள். இரவில் பெண்கள் தட்டுகளை ஏந்தி வரும் தாளம் வரவு நடக்கும் கதகளி, ஓட்டந்துள்ளல் நடனங்கள் இடம்பெறும்.
எடப்பள்ளி மாரியம்மன் கோவில் 8 கிமீ தொலைவில் இருக்கிறது எட்டு நாள் விழாவில் 7ஆவது நாள் நடக்கும் கனலாட்டம் குறிப்பிடத்தக்கது. விரதம் அனுஷ்டிக்கும் மாரியம்மன் பக்தர்கள் தீ மீது நடனம் ஆடுவார்கள் அவர்கள் ஆவேசத்துடன் நடனம் ஆடுவது பார்ப்போர் மனதில் அச் சத்தையும் பக்தியையும் உண்டாக்கும். மாலையில் நடக்கும் காவடியாட்டத்தில் அம்மன் குடம், கரகம் முதலியனவும் சேரும்.
69.சுப்ரமண்ய சுவாமி கோவில்கள்
.jpg)
எர்ணாகுளம் குமரேஸ்வர சுப்ரமண்ய சுவாமி கோவில், பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நாள் விழாவில் காவடியாட்டம், கரகாட்டம் இடம்பெறும். யானைகள் பவனியும் உண்டு
எர்ணாகுளம் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள வைத்திலா .சுப்ரமண்ய சுவாமி கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள் இருக்கின்றன. ஆங்கு .சுப்ரமண்ய சுவாமி , சிவ பெருமான், ஐயப்பன் தரிசனம் தருகிறார்கள். எட்டு நாள் விழா ஆராட்டுடன் நிறைவுபெறும். அப்போது 2 யானைகள் ஜெண்டை மேளம், பஞ்சவாத்யம் முழக்கத்துடன் ஆற்றுக்குச் செல்லும் .
தைப்பூசம் நாளன்று முருகனுக்கு விழா எடுப்பார்கள்; .மாலை முதல் நள்ளிரவு வரை காவடி ஆட்டம் நடக்கும் .
எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் கும்பலாவில் ஒரு சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.
அதன் பெயர் குமராலயம் கோவில் ஆண்டுதோறும் நடக்கும் ஆறு நாள் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோளில் காவடி சுமந்து ஆடும் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். மூன்று யானைகள் புடை சூழ காவடி ஆட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லுவார்கள். 24 மணி நேரத்துக்கு விரதம் அனுஷ்டிப்போர் மட்டுமே காவடிகளை சுமக்கலாம் என்ற விதி இருக்கிறது.
பொன்னாக்கரா சுப்ரமண்ய சுவாமி கோவில் எர்ணாகுளம் அருகில் இருக்கிறது. ஆறு நாள் விழாவில் முக்கிய அம்சம் சூலந் தூக்கல் ஆகும். முருக பக்தர்கள் நாவிலும், கன்னத்திலும் காதுகளிலும் வேல் வடிவிலான சூலத்தைக் குத்திக்கொள்ளுவார்கள் முதல் இரண்டு நாட்களில் களமெழுத்துப்பாட்டும் கடைசி 4 நாட்களில் ஓட்டந்துள்ளல் நடனமும் நடக்கும். கரகம் காவடியாட்டம் முதலியன இடம்பெறும்.
கொச்சி கோட்டை ஸ்ரீ கார்த்திகேய கோவில், எடகொச்சி பரமேஸ்வர குமாரமங்கலம் கோவில் , மூவாட்டுப்புழா குமார பஜன தேவஸ்வம், இளம்குன்னபுழா சுப்ரமண்ய சுவாமி கோவில்களிலும் காவடியாட்டம் முதலியன நடக்கின்றன .
70.கொத்தமங்கலம் த்ரிகாரியூர் மஹாதேவ கோவில்
கொத்தமங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது பரசுராமர் உண்டாக்கிய கேரள சாம்ராஜ்யத்தில் 64 பகுதிகள் இருந்தன. அவற்றில் ஒன்றான தளி வட்டாரம் கி.பி. 800 முதல் 1100 வரை கேரளத்தின் தலைநகராக இருந்தது . இந்தப் பழைய சிவன் கோவிலில் பத்து நாள் விழா நடக்கும்.. முதல் 3 நாட்களுக்கு குறத்தியாட்டம் நடக்கும்; சாக்யர் கூத்து, பாடகம் ஆகியவையும் விழாவில் உண்டு. கடைசி மூன்று நாட்களில் இன்னிசை வாத்ய முழக்கத்துடன் யானை மீது சிவன் வலம் வருவார் .
–சுபம் —
Tags – கொத்தமங்கலம் ,த்ரிகாரியூர், மஹாதேவ, கோவில், சுப்ரமண்ய சுவாமி , பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள் , காளவயல், மாட்டுவண்டி ரேஸ் ,