
Date uploaded in London – – 6 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Pictures are from websites; thanks. hey are about Chettikulangara Bhagavathy Temple.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 49
கோவில் எண்கள் –81, 82, 83
81, 82. துறவூர் மஹாதேவர் , நரசிம்ம மூர்த்தி கோவில்கள்
எர்ணாகுளத்திலிருந்து ஆலப்புழை செல்லும் வழியில் 23-ஆவது கி.மீ ட்டரில் துறவூர் அமைந்துள்ளது . இங்குள்ள புரந்தரேஸ்வரர் / மஹாதேவர் கோவிலும், நரசிம்ம சுவாமி கோவிலும் மிகவும் சிறப்புடையன. ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையன. கடவுள் இல்லை; அவனைக் கற்பித்தவன் அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்ன கயவனை இரு கூறாகக்கிழித்து ரத்தத்தைக் குடித்த சிங்க முக நரசிம்மரின் ஆக்ரோஷத்தைத் தணிக்க சிவ பெருமான் சரபேஸ்வரராக அவதரித்தார். அவரே மஹாதேவர் ,புரந்தரேஸ்வர் என்ற பெயரில் இங்கு ஒரு கோவிலில் குடிகொண்டுள்ளார் . இந்தக் கோவில், கேரள கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது; செப்புத் தகடுகளைக் கொண்டு கூரையை வேய்ந்துள்ளனர் .
மஹா சிவராத்திரி உற்சவ காலத்தில் ஆண்டுதோறும் 9 நாள் உற்சவம் நடக்கும். திரு உற்சவம் என்று அதை அழைக்கிறார்கள்; 4,5,6 ஆவது நாள் விழாக்களில் இரவு முழுதும் கதகளி நடனம் நடக்கும். எட்டாவது நாளன்று வலியவிளக்கு உற்சவம் கண் கவரும் ஒன்பது யானைகள் பவனியுடன் நடக்கிறது. ஓட்டந்துள்ளல் , சங்கீத வித்வான்களின் கச்சேரிகள் சிறப்பு நிகழ்சசிகள் ஆகும். ஆராட்டு என்னும் இறைவன் குளியலுடன் விழா நிறைவு அடையும்.
அஷ்டமி ரோகிணி என்னும் கிருஷ்ணர் பிறப்பு நாளை ஒரே நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
டிசம்பரில் நடக்கும் திருவாதிரை உற்சவத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வர வேண்டி பிரார்த்திக்க வருகிறார்கள். மகரவிளக்கு உற்சவத்தில் சப்பரத்தில் சுவாமி வலம் வருவார். கருட வாகான புறப்பாடும் இருக்கும். எல்லா விழாக்களிலும் கேரளா வாத்யங்களைக் கொட்டி முழக்குவார்கள்.
ராமாயண பாராயணம்
கற்கிடக மாதத்தில் ராமாயண பாராயணம் நடப்பதோடு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்யும் சம்பூர்ண ராமாயண பாராயணமும் நடக்கும் .
நவராத்ரி காலத்தில் விஜய தசமியன்று வித்யாரம்பம் என்னும் கல்வி துவக்க விழாவுக்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களை பெற்றோர்கள் அழைத்து வருகிறார்கள்; துர்காஷ்டமி முதல், சிறுவர்கள் புஸ்தகக் கட்டுகளுடன் சரஸ்வதி பூஜைக்கு வந்துவிடுவார்கள் .
நரசிம்மர், சுதர்சனர் கோவில்
லட்சுமி நரசிம்மரும், சுதர்சன மூர்த்தியும் எழுந்தருளிய இரட்டைக்கோவில் துறவூரில் இருக்கிறது
நாலம்பலத்தில் வடக்கில் நரசிம்மரும், தெற்கில் சுதர்சனரும் இருக்கின்றனர்.; இரண்டும் தனித்த தனி கோவில்கள்.; தனித்தனி தங்க முலாம் பூசிய கொடி மரங்கள்.
வட்ட வடிவக் கருவறையில் 4 கரங்கள் உடைய விஷ்ணு ரூபத்தில் சுதர்சனர் அருள்பாலிக்கிறார்.
கோவில் வளாகத்தின் வடபகுதியில் நரசிம்மர் சதுர வடிவ கருவறையில் காட்சி தருகிறார். இதுவும் விஷ்ணு உருவமே. அங்கமாலி என்னும் இடத்தில் ஒரு பக்தரின் கனவில் தோன்றிய விக்கிரகம் பூமிக்கடியி லிருந்து கிடைத்தது
தீபாவளி பண்டிகை
துறவூரின் சிறப்பு தீபாவளி பண்டிகை ஆகும். அன்று 4 இறைவன் திருவுருவங்கள் கூட்டாக எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருகிறார்கள் .
கரபுரம் என்னும் துறவூர் முன்காலத்தில் பிராமண அக்கிரகாரமாகத் திகழ்ந்தது. திருவேங்கிட புரம் புரந்தரேச்வரம் , துறவூர் கோவில்கள் அவர்கள் வசம் இருந்தன. தீபாவளி நாளில் கூடி எழுநல்லது என்ற விழாவை அவர்கள் ஏற்பாடு செய்து ஹரியும் சிவனும் ஒன்று என்று காட்டினார்கள் . மகா தேவன் என்னும் சிவன், நரசிம்ம மூர்த்தி என்னும் விஷ்ணு (ஹரி) , சுதர்சன மூர்த்தி , திருவேங்கிடபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய 4 தெய்வங்களும் துறவூர் கோவிலில் சந்தித்து ஆயிரக் கணக்கான மக்களுக்கு தரிசனம் தருகிறார்கள்.
தீபாவளி நாளன்று கோவிலைச் சுற்றி விளக்கு ஏற்றுவதை வலிய விளக்கு என்பார்கள். அன்று கோவில் ஒளி மயமாகத் திகழும்
ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதர் நரசிம்ம உபாசகர்; அவர் ஸ்தாபித்த நரசிம்மர் இது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மஹா கணபதி, அனுமன் சந்நிதிகளும் கோவிலுக்குள் உள்ளன. காசி மடத்தில் 11ஆவது சுவாமிகளாக (கிபி.1700) இருந்தவர் ராஜேந்திர தீர்த்த சுவாமிகள். அவருடைய சமாதி உள்ள பிருந்தாவனமும் இங்கு இருப்பது புனிதத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
xxxx



83.செட்டிகுளங்கரா பகவதி கோவில்
ஆலப்புழா மாவட்டத்தில் காயம்குளத்திலிருந்து 5 கிமீ தொலைவில் புகப்பெற்ற பகவதி (பத்ர காளி ) கோவில் இருக்கிறது . அருகிலுள்ள ஊர் மாவேலிக்கரா .
சபரி மலைக்கு அடுத்தபடியாக வருவாய் உடைய கோவில் இது; சாந்தத்தம் என்னும் பிரசாதம் மூலம் மட்டுமே கோடிக் கணக்கான ரூபாய் கிடைக்கிறது . கோவிலின் வருவாயை திருவிதாங்க்கூர் வட்டாரக் கோவில்களின் பூஜைக்குப் பகிர்ந்தளிப்பது குறிப்பிடத்தக்கது; சபரி மலை அய்யப்பன் கோவில் பிரசாதம் தயாரிக்கவும் இந்தக் கோவிலின் நெல் பயன்படுகிறது
கோவிலில் பிரசாதங்களான குத்திராமூட்டில் கஞ்சி மற்றும் தெரம்மூட்டில் கஞ்சி ஆகியவை முக்கியமானவை . குத்தியோட்டம், கும்பபாரணி முதலிய பல சடங்குகள் வேறு எங்கும் இல்லாதவை. இதனால் பல தனிச் சிறப்புகளுடைய கோவில் இது
1000 திரிகளுடன் அதிசய விளக்கு
கல்லு விளக்கு என்னும் மிகப்பெரிய கருங்கல் விளக்கு இங்கு இருக்கிறது 1000 திரிகளுடன் தினமும் விளக்கு ஏற்றுகின்றனர் .
பரந்து விரிந்த நெல் வயல்களுக்கு இடையே கோவில் அழகாக நிற்கிறது.
இந்தக் கோவிலின் தனித்துவத்தை அறிந்த யுனேஸ்கோ UNESCO நிறுவனம், தகவல்களைச் சேகரித்து வருகிறது .
ஆண்டு தோறும் ஒரே நாள் விழா நடக்கும். அதில் தென் கேரளத்தின் அத்தனை வழக்கங்களும் சடங்குகளும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன !!!

குத்தியோட்டம் என்பது என்ன?
இந்த சடங்கு 1200 ஆண்டு வரலாறு உடையது . சடங்கை நிகழ்த்தும் ஒருவர் 8 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு உடலில் வேலையும் கம்பியையும் குத்திக்கொள்ளும் சடங்கினை போதிக்கிறார். பரணி உற்சவ நாளில் அந்தச் சிறுவர்கள் வெள்ளிக் கம்பியை உடலில் குத்திக்கொள்ளுவர்; கழுத்தைச் சுற்றியுள்ள வெள்ளிக் கம்பி, தலை மீதுள்ள கத்தியில் நாட்டப்படும். அவர்கள் ஊர்வலமாகச் செல்லுகையில் மக்கள் இளநீரைத் தெளித்து ஆவேசத்தை அடங்குவர். அவர்கள் மீது சாமி ஏற ஏற அவர்கள் இறைவி முன்னால் கட்டுகடங்கமால் ஆடுவார்கள்; கூடவே வரும் வாத்தியக் கலைஞர்கள் சுருதியை ஏற்றி ஆவேசம் உண்டாக உதவுவர் ; வண்ண வண்ணக் குடைகளுடன் பக்தர்கள் பின்னே வருவார்கள் .
பிப்ரவரி மாதத்தில் பரணி உற்சவம் நடக்கும் .
பரணி உற்சவத்தின் மற்றும் ஒரு சடங்கு கெட்டு கழிச்சா என்பதாகும் . வித விதமான பெரிய குதிரை உருவங்கள், புராண, இதிஹாச கதா பாத்திர உருவங்கள், அழகான சப்பரங்கள் முதலியன கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சேரும் . வேறு எங்கும் காணக் கிடைக்காத நாட்டுப்புற நிகழச்சிகளை நடத்திய வண்ணம் கலைஞர்களும் ஊர்வலத்தில் வருவார்கள்; இதைக் காணுவோர் வியப்பில் மிதப்பர்; வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத காட்சிகளாக அவை அமையும் .
—சுபம்–
TAGS –குத்தியோட்டம், பரணி உற்சவம், அதிசய விளக்கு, செட்டிகுளங்கரா பகவதி , கோவில் , துறவூர் மஹாதேவர் , நரசிம்ம மூர்த்தி ,