
picture of Anikkattilamma Devi Tempe
Date uploaded in London – – 8 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 51
கோவில் எண்கள் –88, 89, 90, 91, 92
88.அனுமன் சந்நிதியுடன் கவியூர் மஹாதேவர் கோவில்
த்ரிக்கவியூர் என்னும் ஊர் திருவல்லா அருகில் இருக்கிறது . சபரிமலை கோவில் இருக்கும் பதனம் திட்டா மாவட்டத்தில் இருக்கிறது . சிவன் கோவில் என்றபோதிலும் இங்குள்ள அனுமன் சந்நிதி புகழ் பெற்ற ஹனுமான் ஜயந்தியைக் கொண்டாடுகிறது .
பழங்கால மரச் சிற்பங்கள் இந்தக் கோவிலை அலங்கரிக்கின்றன . அவற்றில் நிறைய புராணக் கதைகளை வடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் சிவ பெருமானுக்கு ஒரு விழாவும் ஹநுமானுக்கு ஒரு விழாவும் நடக்கிறது.
சிறிய குன்றின் மீது கோவில் நிற்கிறது . மேலே செல்ல 21 பெரிய படிகள் உண்டு. கருவறையில் சிவனையும் பார்வதியையும் தரிசிக்கலாம். கீழே மஹாவிஷ்ணு கோவிலும் இருக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள சுவர், பழங்கால மதில் ஆகும். குன்றின் மேலே குளமும் கீழே பெரிய ஏரியும் இருக்கின்றன.

மூலவரான சிவன் திருக்கவியூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் மணல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆனது என்று நம்பப்படுகிறது. அருகில் அவரது மகன்களான கணபதி, சுப்ரமணியர் உள்ளனர். கருவறையின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கணபதி உள்ளனர். தென்மேற்கில் அய்யப்பன் கிழக்கு நோக்கி மேற்கில் ராஜேஸ்வரியாக பார்வதி உள்ளனர். உள் முற்றத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பிரதான கருவறைக்கு வெளியில் அனுமன் உள்ளார். நாலம்பலத்திற்கு வெளியில் வடகிழக்கு முற்றத்தில் நாகர்கள் (நாகராஜா, நாக யட்சி), வடமேற்குப் பகுதியில் உள்ள பிரதான கோயில் வளாகத்தின் அடியில் அமைந்துள்ள கீழத்திருக்கோயிலில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோர் உள்ளனர். (இது விக்கிபீடியா தரும் தகவல்.)
ஆயிரமாண்டுக்கும் மேலான பழமை உடைய கல்வெட்டுகள் இருப்பதால், இந்தக் கோவில் வரலாறு எழுதுவோருக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது .
வட்ட வடிவில் அமைந்த கருவறையின் சுற்றளவு 46 அடி. முன் காலத்தில் 16 விழாக்கள் நடந்தன. தற்போது சிவனுக்கு நடக்கும் 10 நாள் உற்சவமும் அனுமனுக்கு நடக்கும் 7 நாள் உற்சவமும் முக்கியமானவை. பண்டிகை நாட்களில் சிறிய உற்சவங்களும் நடக்கும் .
சிவ பெருமான் உற்சவத்தில் பள்ளி வேட்டை, ஆராட்டு , இரவு முழுதும் நடக்கும் கதகளி நடனம் சிறப்பானவை .
ஹனுமத் ஜெயந்தி உற்சவத்தில் கடைசி நாளன்று, அருகிலுள்ள தேவி கோவிலின் சப்பரம் இங்கு வரும். மயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் உள்பட கிராமீய நடனங்கள் அனைத்தும் நடக்கும்.
XXXXX
89.புதுக்குளங்கரா தேவி கோவில்
செங்கன்னூரிலிருந்து 7.கி.மீ. தொலைவில் ஓதரா என்னுமிடத்தில் பத்ரகாளி கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது . ஆண்டுதோறும் நடக்கும் 10 நாள் விழாவில் ஓவ்வொரு நாளும் வெவ்வேறு முக கவசங்கள், கிரீடங்கள், உடைகள் அணியும் படையணி விழா நடக்கும் 1001 பாக்குமர ஓலைகளில் வர்ணம் அடித்து உண்டாக்கப்படும் தலையணி பைரவி கோலம் எனப்படும். பத்தாவது நாளன்று இது பயன்படுகிறது . பூப்பாத துள்ளல், காக்கரிசி நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் இந்தக் கோவிலுக்கே உரித்தான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.
இந்த விழா மார்ச் மாதம் நடக்கும்.
xxxxx
90.அணிக்கட்டிலம்மா கோவில்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் , மல்லப்பள்ளியிலிருந்து 3.5 கி.மீ. தொலைவிலுள்ள அனிக்காடு என்ற கிராமத்தில் அணிக்கட்டிலம்மா கோவில் உள்ளது. ஒரே கர்ப்பக்கிரகத்தில் சிவனும் பார்வதியும் இருப்பது சிறப்பு அம்சம். மணிமாலா ஆற்றங்கரையில் எடப்பள்ளி வம்சத்தினர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. ஒவ்வொரு சிலையும் 4 அடி உயரம் கொண்டது .
தேவியின் பெயர் .அணிக்கட்டிலம்மா. ஒரு தாய் , தன்னுடைய குழந்தைகளைக் கவனிப்பது போல வேண்டிய வரம் தரும் தேவி அவள் .
கும்பம் மாதத்தில் இங்கு நடக்கும் பொங்கல் விழாவில் பல ஊர்களை சேர்ந்த தாய்மார்கள் பங்கேற்கிறார்கள் .நிறைய பெண்கள் , பொங்கல் வைக்க வருவதால் 2 கி.மீ தொலைவுக்கு பொங்கல் பானைகளைக் காணலாம்.
திருவல்லா, அருகிலுள்ள மற்றும் ஒரு தலம் ஆகும்.
Xxxx
91.நிரணம் திரிகபாலீஸ்வரர் கோவில்

நிரணம் என்னும் ஊர் திருவல்லாவிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்குள்ள திரிகபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது . கபாலீஸ்வரன் என்றவுடன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நம் நினைவுக்கு வருவார்.
நிரணம் வேறு ஒரு வகையிலும் புகழ் பெற்றது .நிரணம் கவிஞர்களான “கண்ணஸ்ஸர்கள்” மலையாள பக்தி இலக்கியத்தில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மலையாளத்தில் பாகவதம், இராமாயணம் மற்றும் பாரதத்தை எழுதியுள்ளனர். அவர்கள் 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் .

Picture of Sapta Matrikas in Niranam.
xxxxx
92.பந்தளம் ஐயப்பன் கோவில்
ஐயப்பன் வளர்ந்த இடம் பந்தளம் ; ஐயப்பன் வரலாறே இங்குதான் தொடங்குகிறது; இங்கு பந்தள மகாராஜாவின் குடும்பக் கோவில் இருக்கிறது
செங்கன்னூரிலிருந்து 10 கி.மீ. சபரிமலையிலிருந்து 88 கி.மீ தொலைவு.
சிறப்பு அம்சங்கள்
மணிகண்டன் என்ற பாலகனாக 12 ஆண்டுகள் வளர்ந்து, கானகத்துக்குள் சென்று புலி மீது சவாரி செய்து, ராணிக்குப் புலிப்பால் கொண்டுவந்தார் மணிகண்டன்/ அய்யப்பன் என்பது புராணம் . இன்றும் புலி வாகனன் ஆகவே கோவிலில் காட்சி தருகிறார் .
ஐயப்பன் குளித்த குளம் எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கிறது .அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஓலைச் சுவைகளும் உள்ளன
சபரி மலை சாஸ்தாவுக்கு/ ஐயப்பனுக்கு மகரவிளக்கு அன்று அணிவிக்கப்படும் அத்தனை ஆபரணங்களும் பாதுகாப்புடன் பந்தளத்திலிருந்து புறப்பட்டு, மகர விளக்கிற்குப் பின்னர் திரும்பிவரும்..
இரண்டு பெட்டிகளில் (திருவாபரணம்) அணிகலன்கள்/ நகைகள் செல்லும். ஒரு பெட்டியில் சாஸ்தா அணியும் ரத்தினக் கிரீடம் , கையில் அணியும் கங்கணம், ஆரம் என்னும் மாலை , நூபுரம் என்னும் சிலம்பு, அங்குலீயம் என்னும் மோதிரங்கள், மார்பில் அணியும் பதக்கங்கள் ஆகியன ஒரு பெட்டியில் இருக்கும்.
மாளிகைப்புரத்து அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இன்னும் ஒரு பெட்டியில் இருக்கும்.
—-subham—
Tags- மணிகண்டன், புலி மீது சவாரி, பந்தளம், நிரணம் திரிகபாலீஸ்வரர், அணிக்கட்டிலம்மா கோவில், அணிக்கட்டிலம்மா, ஹனுமத் ஜெயந்தி, கவியூர் ,மஹாதேவர், கோவில் , திருவாபரணம்