
Post No. 12,901
Date uploaded in London – – 10 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 2
ச.நாகராஜன்
ஒருவன் செய்த கர்மம் ஒருபோதும் அவனை விடாது.
நல்வினை, தீவினைகளின் பயன் பற்றி தர்மர் பீஷ்மரிடம் கேட்க அதைப் பற்றி விரிவாக பீஷ்மர் எடுத்துரைக்கிறார்.
இதை மஹாபாரதத்தில் அநுசாஸனபர்வம் பத்தாம் அத்தியாயத்தில் காண்கிறோம்.
பீஷ்மர் கூறுகிறார்: “கன்றானது அநேக ஆயிரம் பசுக்களில் தன் தாயைத் தெரிந்து அடைவது போல, முன் செய்த கர்மம் செய்தவனைத் தொடர்கிறது. பூக்களும், கனிகளும் யாராலும் கட்டளையிடப்படாமலே, தம் தம் காலம் கடவாமல் உண்டாவது போல முன் செய்த கர்மமும் காலத்தில் வெளிப்படுகின்றது.”
இதே பர்வத்தில் 35வது அத்தியாயத்தில் பத்து வகை கர்மங்களைப் பற்றிய விளக்கத்தை பீஷ்மர் தருகிறார்.
தேகத்தினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் மூன்று.
1) உயிரைப் போக்குவது
2) திருடுவது
3) பிறர் மனைவியைத் தொடுவது
ஆக இந்த மூன்று தீய கர்மங்களையும் விட வேண்டும்.
வாக்கினால் செய்யப்படும் பாவங்கள் நான்கு.
1) கெட்ட பேச்சு
2) கடுஞ்சொல்
3) கோள் சொல்வது
4) பொய் சொல்வது
இவை நான்கும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். வாக்கினாலும் இவை செய்யத் தகாதவை.
இந்த நான்கையும் விட வேண்டும்.
மனத்தினால் செய்யப்படும் நற் கர்மங்கள் மூன்று.
1) பிறர் பொருளை விரும்பாமை
2) எல்லா பிராணிகளிடத்தும் அன்பு
3) புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டென்ற நம்பிக்கை
இந்த மூன்றையும் மனதினால் கொள்ள வேண்டும்.
இவற்றைச் செய்பவன் நாராயணனிடம் பக்தி கொண்டு செய்யும் போது அவர் அனுக்ரஹத்தால் அவன் மேலான பதத்தை அடைவான் என்பது பீஷ்மரின் வாக்கு.
தர்மபுத்திரர் பீஷ்மருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு பிரஹஸ்பதி வருகிறார்.
தர்மபுத்திரரிடம் ப்ருஹஸ்பதி, ‘மனிதன் ஒருவனாகவே பிறக்கிறான்; ஒருவனாகவே இறக்கிறான். ஒருவனாகவே நரகங்களைத் தாண்டுகிறான். ஒருவனாகவே நரகத்திற்குப் போகிறான். தந்தை, தாய், சகோதரன், புத்திரன், ஆசாரியன், தாயாதிகள், சுற்றத்தார், சினேகிதர்கள் யாரும் துணையாவதில்லை. மனிதர்கள் தேகத்தைச் சில காலம் பயன்படுத்தி உயிர் போன பின் கட்டை ஓட்டாஞ்சில்லிகளைப் போல எறிந்து விட்டு வேறு முகமாகப் போகின்றனர். தர்மம் ஒன்றே பின் தொடர்கிறது” என்கிறார்.
தர்மர் அவரிடம் மனிதன் உயிரை விடுகின்ற போது அதில் சூட்சுமமான ஆத்மா மறைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போகின்றதே? தர்மம் அதைத் தொடர்வது எப்படி?’” என்று கேட்கிறார்.
உடனே பிரஹஸ்பதி கூறுகிறார்: “பூமி, வாயு, ஆகாயம், அக்னி, நீர் ஆகியவற்றின் தேவதைகள், புத்தி, ஆத்மா இவை அனைத்தும் சேர்ந்து எக்காலமும் தர்மத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்சொன்னவற்றுடன் தர்மம் பின் தொடர்கிறது. மேலே சொன்னவை தோல், எலும்பு, மாம்ஸ சுக்லசோணிதங்களையும் உயிர் விட்ட தேகத்தையும் விடுகின்றன. அதன் பிறகு ஜீவனானது தர்மத்துடன் சேர்ந்து இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் சுகமாக விளங்குகிறது.:
மனிதனுக்கு உள்ள மூன்று வகை தேகங்களைப் பற்றியும் பிரஹஸ்பதி விளக்குகிறார்.
மனிதனுக்கு மூன்று தேகங்கள் உண்டு.
1) போகவச்யம் (ஸ்வர்க்க சரீரம்)
2) கர்மவஸ்யம் (இது பூமியில் உள்ள சரீரம்)
3) யாதனாவச்யம் (இது நரகத்தில் உள்ள சரீரம்)
இந்த மூன்று வகை தேகங்களினால் மனிதன் தன் வினைப்பயனை அனுபவிக்கிறான்.
இதைத் தொடர்ந்து எந்தக் கர்மத்தை செய்தால் என்னென்ன பிறவிகளாகப் பிறப்பார்கள் என்ற உரை தொடர்கிறது.
தான் பிரமதேவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை தற்போது உரைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
நல்ல கர்மங்களின் பயன்களை, குறிப்பாக தானம் செய்தல்,அஹிம்சை, வாக்கினால் செய்யப்படும் தவம், மௌனம் உள்ளிட்ட அனைத்தின் நலனைப் பற்றியும் அநுசாஸன பர்வத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
கர்ம ரகசியத்தை முழுவதுமாக அறிவது முடியாதது என்றாலும் கூட, ஒருசிறிது அறிந்து கொள்ளலாம்.
*** தொடரும்