
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,904
Date uploaded in London – – 11 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜனவரி 12 விவேகானந்தர் ஜெயந்தி தினம்!
அதிசயம் அநேகம் கொண்ட சுவாமிஜியின் வாழ்வில் சில சம்பவங்கள்!
விவேகானந்த அதிசயம்! – 1
ச.நாகராஜன்
விவேகானந்த அதிசயம்!
ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முறை மிஸஸ் பாக்லே என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.
அந்த வீட்டில் வந்த விருந்தினர்களுள் ஒருவர் சுவாமிஜியை மிஸஸ் பாக்லேயின் கணவருடைய படிப்பறையில் வைத்துப் பூட்டி விட்டு, சாவியைத் தனது கையில் வைத்துக் கொண்டார். அது ஒரு பெரிய வீடு. அந்த வீட்டின் மறுபகுதியில் உள்ள விசாலமான அறை ஒன்றில் அனைவரும் கூடினர். சுவாமிஜி திடீரென்று அங்கே தோன்றினார்.
சாவியைத் தன் கையில் வைத்திருந்தவர் திகைத்து மலைத்தார்.
வேக வேகமாக ஓடிப் போய் தான் பூட்டிய அறையைத் திறந்தார்.
அங்கே முன்பு சுவாமிஜி எப்படி அமர்ந்திருந்தாரோ அதே போல அமர்ந்திருந்தார்.
அவரது இந்த அதீத ஆற்றலை அவர் எப்போதுமே காட்டியதில்லை.
ஓரிரு சமயங்களில் மட்டுமே காட்டி இருக்கிறார்.
கடவுளிடம் நகைச்சுவையாகப் பேசியவர்!
நியூயார்க்கிலிருந்து சுமார் 90 மைல் தூரத்தில் உள்ள ரிஜ்லிமேனர் என்ற வீட்டில் ஒரு முறை சுவாமிஜி தங்கி இருந்தார். அங்கே அவருடன் மிஸ் மெக்லவுட், அவரது சகோதரி பெற்றி, பெற்றியின் பதினாறு வயதான மகன் ஹாலிஸ்டர், பதினெட்டு வயதான அவனது தமக்கை ஆல்பெர்ட்டா ஆகியோர் தங்கி இருந்தனர்.
ஒரு நாள் சுவாமிஜி தன் அறைக்குள் இருந்த போது பெரிதாகச் சிரிப்புச் சத்தம் கேட்டது. இடையிடையே யாருடனோ பேசுவது போலவும் இருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின் கதவைத் திறந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த சுவாமிஜியிடம் ஹாலிஸ்டர், “சுவாமிஜி, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டான்.
ஏனெனில் அறையில் யாருமே இல்லை.
சுவாமிஜி பதிலாக, “யாருடனும் இல்லையே” என்றார்.
“இல்லையே, சிரிப்புச் சத்தம் கேட்டதே?” என்று சந்தேகத்துடன் மீண்டும் கேட்டான் ஹாலிஸ்டர்.
சின்ன இடைவெளிக்குப் பிறகு சுவாமிஜி கூறினார்:
“ஓ! அதுவா? இந்த கடவுள் இருக்கிறார் பார், அவர் மிகவும் வேடிக்கையானவர்!” என்றார்.
கடவுளுடன் நகைச்சுவையாக சுவாமிஜி பேசி சிரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் வாயாலேயே தெரிந்து கொண்ட ஹாலிஸ்டர் பிரமித்து நின்றான்.
இந்த விஷயம் அனைவருக்கும் பரவியது.
இது போல தனது ஆற்றலையும் தெய்வீக சக்தியையும் அவர் காட்டிய தருணங்கள் மிகச் சிலவே!
சுவாமிஜியின் நினைவாற்றல்
சுவாமிஜியின் நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. ஒரு முறை பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க நரேந்திரன் (சுவாமி விவேகானந்தரின் இளமைப் பருவத்துப் பெயர்) ‘தூங்கிக் கொண்டிருப்பதைக்’ கண்டு பொறுக்காத அவர் அவனைக் கடிந்து கொண்டார்.
அவர் தன்னைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த நரேன், ஆசிரியர் கூறிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் திருப்பிக் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் பிரமித்துப் போனார்.
இந்த அபாரமான தனது நினைவாற்றல் சக்தியை அவர் எப்போதாவது தான் வெளிப்படுத்துவார்.
ஒரு முறை ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் சில நாட்களைக் கழித்த சுவாமிஜி கீல் நகரம் சென்றார். அங்கு
கீல் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பால் ட்யூஸனை (பிறப்பு 7-1-1845 மறைவு 6-7-1919) அவர் சந்தித்தார். அவர் இந்தியவியலில் பெரும் அறிஞரும் கூட. பால் டியூஸன் இந்தியாவிற்குத் தான் வந்திருந்த போது தான் பெற்ற அனுபவங்களை சுவாமிஜியிடம் தெரிவித்து மகிழ்ந்தார். நல்ல நட்புறவு மலர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவினர்.
அவரது வீட்டில் சுவாமிஜி சென்று தங்கினார். அப்போது ஒரு நாள் சுவாமிஜி தனது அறையில் ஒரு கவிதை நூலை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற பால் டியூஸன் ஏதோ பேச முற்பட்டார். ஆனால் சுவாமிஜி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இந்தச் சம்பவம் அவர் மனதை உறுத்தியது. சில நாட்கள் சென்ற பிறகு தனது மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி உடனே புன்னகையுடன் தான் அன்று அந்தக் கவிதை நூலில் மிகவும் ஆழ்ந்திருந்ததாகவும் மற்ற எதையும் கவனிக்கவில்லை என்றும் கூறினார். இதை நம்ப மறுத்தாற் போல இருந்த பால் டியூஸனிடன அந்தக் கவிதை நூல் முழுவதையும் அப்படியே ஒப்புவித்தார் சுவாமிஜி. இதைக் கேட்டு பிரமித்துப் போன பால் டியூஸன், சுவாமிஜி எப்படிப்பட்ட பெரும் மகான் என்பதை உணர்ந்து கொண்டார்.
இறை அனுபவத்தை உடனே தர வல்லவர்
இறை அனுபவத்தை சிலருக்கு உடனே தந்தவர் சுவாமிஜி.
இதைப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவர் ஜெய்பூரில் படைத்தளபதியாக இருந்த சர்தார் ஹரிசிங்.
ஜெய்பூரில் சுவாமிஜி தங்கி இருந்த போது அவரால் கவரப்பட்டார் இந்தப் படைத் தளபதி. அவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார் சுவாமிஜி.
ஹரிசிங்கிற்கு வேதாந்தம் என்றால் பிடிக்கும். ஆனால் அவருக்கு உருவ வழிபாடு பிடிக்காது. உருவ வழிபாடு பற்றி சுவாமிஜி அவருக்கு விளக்கிக் கூறினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். ஒரு நாள் இருவரும் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு பஜனை ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பஜனை ஊர்வலத்தினர் கண்ணபிரானின் திருவுருவத்தைத் தாங்கியவாறே பஜனைப் பாடல்களைப் பாடி வந்து கொண்டிருந்தனர். சுவாமிஜி ஹரிசிங்கைத் தொட்டு, “அதோ பாருங்கள். உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் கண்ணனைப் பாருங்கள்” என்றார்.
அந்த ஸ்பரிசத்தால் உடனே அங்கு கண்ணன் உயிருடன் இருப்பதைக் கண்ட ஹரிசிங் திகைத்து நின்று விட்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சுய நினைவு வந்தவுடன் அவர், மணிக்கணக்காக நீங்கள் விளக்கிய பேருண்மையை விளங்கிக் கொள்ளாத என்னை ஒரு சின்னத் தொடுதல் மூலமாக விளங்கிக் கொள்ள வைத்து விட்டீர்கள் என்று கூறி அவரை அடி பணிந்து வணங்கினார்.
இப்படி அவரது ஸ்பரிசத்தால் மாறியவர்கள் பலர் உண்டு.
** தொடரும்