கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- Part 57 (Last Part) Post No.12,915

112 ft Siva Linga in Chenkal Siva Parvathi Temple, Thiruvananthapuram

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,915

Date uploaded in London – –   14 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 57

கோவில் எண்கள் –111, 112

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் என்ற இந்தக் கட்டுரைத் தொடர் 57-ஆவது பகுதியுடன் நிறைவடைகிறது ஆயிரக்  கணக்கில் பகவதி, ஐயப்பன் , சிவன், விஷ்ணு , கணபதி, முருகன், நாகர் கோவில்கள் உள்ள மலையாள தேசத்தில், பழைய சேர நாட்டில் 108 கோவில்களை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான பணியே. ஆயினும் மக்கள் ஏராளமாகச் செல்லும் கோவில்களைக் கருத்தில் கொண்டு 108-க்கும் அதிகமான கோவில்களை தேர்ந்தெடுத்தேன்.

xxxx

111. திருவனந்தபுரம் சிவன் கோவில்கள்

Chenkal Siva Parvathi Temple with tallest Linga

திருவனந்தபுரம் நகரிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் கழக் கூட்டம் மஹாதேவர் கோவில்   இடம்பெறுகிறது.  இது ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும்.  14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது இது.

இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் டிசம்பரில் வரும் திருவாதிரை உற்சவம் ஆகும். திருவாதிரை நாளன்று, பெண்கள் கேரள பாணியில் பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு திருவாதிரைக் களி ,கை கொட்டிக் களி என்ற நடனங்களை பாடிக்கொண்டு ஆடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்  இந்த பத்து நாள் திருவிழாவில் கேரள பாணி நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

xxxxx

ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவன் கோவில்

ஸ்ரீ கண்டேசுவரம் மகாதேவன் கோவில் (Sreekanteswaram Mahadeva Temple) சுமார் 1500 ஆண்டு வரலாறு உடையது. பழைய நூல்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருவனந்தபுரம் நகரிலிருந்து  3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இதே பெயரிலுள்ள பழைய கோவில் பழைய  கோவில் புத்தன்சந்தை என்ற பகுதியில் அமைந்துள்ளது. 

இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது .

சிவன் மூலவர் ஆவார். மகா கணபதி, முருகன், ஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணர், அய்யப்பன், நாகராசர் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.

அதிகாலையில் நடை திறந்ததும், முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும், பூக்களையும் எடுத்து, மாற்றிச் சுத்தப்படுத்தும் இருபது நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதைக் கண்டு தரிசிப்பதற்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவபெருமானின் பிறந்த நாளாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆராட்டு இருக்கும். சிவராத்திரி பண்டிகையும் பெரிய அளவில்  கொண்டாடப்படுகிறது. அப்போது சிவபெருமானின் சிலையை நாள் முழுவதும் தூய நெய்யால் அபிஷே கம் செய்கிறார்கள் .

xxxxxxx

58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில்

தற்காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோவில்களில் பக்தர்களைக்  கவர்வ து 58 அடி உயர ‘கங்காதேஸ்வரர்’ சிலை உள்ள ஆழிமலை சிவன் கோவில் ஆகும் .

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது.

இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை மடித்தும்  வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை ஏந்துகிறார் .

தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து பூவாறு – கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் 58 அடி உயரத்தில் கங்காதரேஸ்வர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாநிலத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவில்களில் மிகவும் உயரமான சிலை, இக்கோவிலில் மட்டுமே உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர்.

xxxxx

பாரசாலா மகாதேவர் கோவில்

கேரள – தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள பாரசாலா என்ற சிறிய கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது. திருவன ந்தபுரம்- கன்னியாகுமரி சாலையில் 30ஆவது கிமீ.யில் கோவில் அமைந்துள்ளது    இங்கு மூலவரான சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், இது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.  இது வேணாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த மல்லன் செண்பகராமன் தேலவா என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பார்வதி கிழக்கு நோக்கிய நிலையில், பின்புறத்தில் உள்ளார்.

400 ஆண்டுகள் பழமையானதாகும். அரிய கல் கட்டிடக்கலையைச் சேர்ந்தது. அரிய சடங்குகளுக்கு புகழ் பெற்றதாகும். சாதி, மதம் போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.

xxxx

112. பழவங்காடி கணபதி கோவில்

திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் பிள்ளையார் கோவில் இருக்கிறது மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில்  காட்சி தருகிறார் .. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்களை  அழகிய ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்தக் கோவிலை, மிலிட்டரி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். . திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

xxxxx

113. கரிக்ககம் சாமுண்டிதேவி

கரிக்ககம் சாமுண்டிதேவி கோவில் சக்தி வழிபாட்டுக்காரர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும்.  ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் சாமுண்டிதேவி கோவில், கரிக்ககம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பிற்கால சேர மன்னனான ராமவர்மா காலத்தில் உருவானது. தேவியானவள்  , உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டியாக  தரிசனம் தருகிறாள். திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அதுவே ‘கரிக்ககம்’ என்று மருவியது .  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் இந்த ஆலயம் இருக்கிறது.

xxxx

114. நாராயண குரு கட்டிய சிவன் கோவில் , அருவிப்புரம்

திருவனந்தபுரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற  அருவிப்புரம் சிவன் கோவில்  இருக்கிறது. அங்கு  நாராயண குரு தவம் செய்த குகையும் இருக்கிறது சிவராத்திரி ஏனைய சிவன் கோவில் உற்சவம் போலவே சிறப்புடன் நடைபெறுகிறது. அப்போது கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சமய மகாநாடுகளும் நடைபெறும்.  இந்த விழாவினைத் தவிர, நாராயண குரு பிறந்த தினத்தை ஜெயந்தியாகக் கொண்டாடிவருகின்றனர்

கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ‘குரு’வாக விளங்கியவர் நாராயண குரு என்னும் மகான் ஆவார் . இந்து சமயத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறாத மாபெரும் பணியைச் செய்தவர். தாமே பல இந்தக் கோவில்களைக் கட்டினார்.

1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது.

xxxxx

மொழி ஆராய்ச்சிக்கு உதவும் கேரள கோவில்கள்

கேரள / சேர/ மலையாள இந்துக்கள் பழைய தமிழ் மரபுகளையும் , தமிழ் மொழிச் சொற்களையும் பாதுகாத்துவருகின்றனர் . சிலப்பதிகாரத்தில் உள்ள பழைய வழிபாடுகளை இன்றும் காண முடிகிறது

27 நட்சத்திரங்களில் இரண்டே விண்மீன்களுக்கு மட்டும் திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உபந்யாஸத்தில் அழகாக விளக்கியுள்ளார். அந்த திரு ஒணத்தையும்  திரு ஆதிரையையும் இன்றும் பழைய சம்பிரதாயப்படி மலையாள இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அம்பலம், களி , தளி போன்ற பழந் தமிழ் சொற்களை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வருகின்றனர் .

எல்லா கோவில்களிலும் யானைகள் பவனி வருவது பழைய ராஜாக்களை நினைவுபடுத்தும்.

சோழர்கள் பெரிய கோவிலை தஞ்சையில் கட்டிய பின்னர், தெலுங்கு நாயக்கர்கள் மதுரை, திரு அண்ணா மலையில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பிய பின்னர், புதிய கட்டிடக்கலை உண்டானது. அதற்கு முன்னர் இருந்த கட்டிடக் கலையை கேரள கோவிலில் காண்கிறோம். இது அஸ்ஸாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மத்திய, தென் அமெரிக்க நாகரீகம் வரை இது சென்றுள்ளது .

தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்ப்பெயர்களும் கோவில் பெயர்களும் இருப்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம்

நிறைவுரை

கேரளத்தின் புவியியலைக் கொண்டு பரசுராமரின் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் .

கேரள கோவில்களில் நடக்கும் ஆயிரக்கணக்கான புதிய சடங்குகளை ஆராய்ச்சி ரீதியில் வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் .

சிலப்பதிகார வழக்கங்கள், தெய்வங்கள் ஆகியவற்றை கேரளத்துடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

ஏராளமான கோவில்களில் அற்புதமான மரச் சிற்பங்களும் சுவர் ஓவியங்களும், விளக்குகளும் உள்ளன. அவைகளை புகைப்படம், வீடியோ எடுத்தது ஆவணப்படுத்த வேண்டும் .

கோவில் கல்வெட்டுகளை, மன்னர் பங்கு பணிகளை கால வரிசைப்படி எழுத வேண்டும்.

திப்பு சுல்தான் முதல், வெள்ளைக்காரர்கள் வரை கோவில்களைத் தாக்கி அழித்ததை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்கவேண்டும்.

கேரள கட்டிடக்கலை அஸ்ஸாம் , தென்கிழங்கு ஆசிய நாடுகள் , மாயா நாகரீகம் வரை சென்ற காலத்தையும் பாதையினையும்  ஆராய வேண்டும்

திருவாதிரைக் களி , கும்மி பாடல்களையும் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் .

ஓட்டந்துள்ளல் , கதகளி , சாக்கியர் கூத்து அனைத்தையும் கோவில் வாரியாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்..

உலகிலேயே அதிக பொக்கிஷங்களை உடைய திருவனந்த புர பத்மநாப சுவாமி கோவில் புதையல்களை தக்க பாதுகாப்புடன் வெளி உலகிற்குக் காட்சிப்படுத்த வேண்டும் . இது ஏராளமான வரும்படியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை .

சபரி மலை திருவாபரண ங்களையும் , கோவில் நகைகளையும் போட்டோ, வீடியோ மூலம் பதிவு செய்து ஆராய வேண்டும் .

எல்லாவற்றுக்கும் மேலாக அரிய , பழைய பொக்கிஷங்களை இந்து விரோத அரசுகள் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.

இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது .

–Subham—

Tags- மொழி ஆராய்ச்சி, அருவிப்புரம் , கரிக்ககம் ,சாமுண்டிதேவி,

பழவங்காடி கணபதி, கோவில் , கேரள,  புகழ்பெற்ற,  108 கோவில்கள், PART 57,  கழக் கூட்டம் மஹாதேவர் கோவில்  பாரசாலா மகாதேவர் ஸ்ரீகண்டேஸ்வரம்

Leave a comment

Leave a comment