
Srimathi Chitra Nagarajan of Bengaluru singing Thiruppugaz
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,969
Date uploaded in London – – 30 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 1
ச.நாகராஜன்
25-1-2024 வியாழனன்று ஞானமயம் சார்பில் தைப்பூசத் திருநாள் திருவிழா இணையதளத்தில் ZOOM வாயிலாக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை www.facebook.com/gnanamayam என்ற இணையதள தளத்தில் காணலாம்..

Sri S Nagarajan of Bengaluru speaking
முதலில் திருமதி சித்ரா நாகராஜனின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. திருச்சி மலைக்கோட்டை சிவத்திரு பாலசுப்பிரமணிய ஓதுவார் சுவாமிமலை திருப்புகழ் பாடலை அருமையாக வழங்கினார்.
திரு கல்யாண்ஜி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் திருமதி ராஜி சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். SGSA அகாடமியில் திருப்புகழைப் பயின்ற மாணவியர் ஏராளமானோர் திருப்புகழ் பாடல்களை பாடினர்.
திரு ச.நாகராஜன் முருக வழிபாடு பற்றிய உரை நிகழ்த்தினார்.
கோவையைச் சேர்ந்த ஷோபிகா முருகேசனின் திருப்புகழ் இன்னிசையோடு விழா இனிதே முடிந்தது.
இங்கு ச.நாகராஜனின் உரையின் சுருக்கம் தரப்படுகிறது.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! ஶ்ரீ கல்யாண்ஜி அவர்களே! பெரியோர்களே
எனது அன்பு கனிந்த நமஸ்காரம். வணக்கம்.
இன்று தைப்பூச நன்னாள்.
காலம் காலமாக வழிவழியாக நாம் இந்த நன்னாளில் முருகனை வழிபட்டு வருகிறோம் – அனைத்து நலன்களையும் பெற!
அன்றாட வாழ்வில் நாம் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.
இவற்றைப் போக்க உபாயம் என்ன என்பதை அறிய ஆசை கொள்ளாதவரே இல்லை.
வியாதி வந்தால் டாக்டர்; படிப்புக்கு கல்லூரி, பணம் வேண்டுமென்றால் நல்ல உத்யோகம் என ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒன்றை நாட வேண்டி இருக்கிறது.
பிரச்சினையே இல்லாத வாழ்க்கை அல்லது பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற ஒரு வழி உண்டா? இப்படி கேட்டால் உண்டு என்ற பதிலை நம் பெரியோர்கள் தந்துள்ளனர்.
முருகனை நாடு; முருகனை வழிபடு என்பதே அவர்கள் கூறும் ரகசியம்.
இதற்கான காரணம் என்ன? மஹாபாரதத்தில் வேத வியாஸர் இதற்கான பதிலைக் கூறுகிறார்.
காரண, காரியம் என்பதை- Cause and Effect என்ற விதியை- நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு அடி அடித்தால் வலிக்கிறது. அடியின் விளைவாக வலி அமைகிறது.
போரில் இரு தரப்பு வீரர்களும் சண்டையிட்ட பின்னர் வீரத்தின் விளைவாக வெற்றி கிடைக்கிறது.
ஒரு கடும் உழைப்பின் காரணமாக அதன் பலன் கிடைக்கிறது.
இது உலக இயல்பு. காரண காரிய விதி.
ஆனால் மஹாபாரதத்தில் முருகன் அசுரர்களை அழிக்கச் செல்லும் போது வெற்றி தேவதை முன்னே போகிறாள் என்கிறார் வியாஸர்.
(சல்ய பர்வத்தில் ஹ்ரத ப்ரவேச உபபர்வத்தில் முருகனைப் பற்றி விவரிக்கையில் இதைக் காணலாம்,)
வெற்றியும் தொல்வியும் போர் முடிந்த பின்னால் அல்லவா தெரிய வரும். ஆனால் முருகன் செல்லும் போது வெற்றி தேவதை முன்னே செல்கிறாள்.
இது தான் முருக ரகசியம். விளவு முன்பேயே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது முருகனிடம். வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி, எப்போதும் வெற்றி. அதனால் தான் முருகனை வழிபட வேண்டும் என்கின்றனர் பெரியோர்.

Sri Kalyanji conducting the broadcast event
When Troubles comes to trouble you do not allow the troubles to trouble you, but allow the trubles to trouble the trouble. Let not troubles trouble you, let the troubles trouble the troubles.
தொந்தரவுகள் வரும் போது அவற்றை உங்களை அண்ட விடாதீர்கள். தொந்தரவுகளை தொந்தரவோடு மோத விடுங்கள் என்பதே இங்கு கூறப்படும் ரகசியம்.
இதையே (622ஆவது) குறளில் கூறுகிறார் வள்ளுவர்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பம் வரும் போது கலங்காதவர் துன்பத்திற்கு துன்பம் கொடுக்கின்றனர் என்பது பொருள்.
துன்பம் வராதிருக்கவும் ஒருவேளை வந்தால் அப்படி வரும் போது கலங்காதிருக்கவும் முருகனை நாடு என்பதே பெரியோர் நமக்குக் கூறும் ரகசியம்.
நமக்கு பயம் வந்தால் பயம் போகும்; பெரும் போர் போன்ற சமயங்களில் நமக்கு வேல் முன்னே தோன்றும்
ஒரு கால் நினைக்கின் முருகனின் இருகாலும் தோன்றும்.
திருமுருகாற்றுப்படை வெண்பா இதைக் கூறுகிறது இப்படி:
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
இதை விட வேறு என்ன வேண்டும்?
முருகனை எப்படித் துதிப்பது? எப்படி வழிபடுவது?
நாமத்தைச் சொன்னாலே போதும்.
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
என்பது கந்தர் அலங்கார வாக்கு.
நமக்காகவே அருணகிரிநாதர் பல்லாயிரம் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்; அவற்றில் ஏராளமான ரகசியங்களைக் கூறி அருளியுள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். 857 சந்தங்களைக் கொண்டு 178 தாள அமைப்புகளோடு இவை விளங்குகின்றன.
இவற்றை ஓதினால் வேறு எதுவும் வேண்டாம்.
வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்
திருப்புகழை எப்படி கேட்பது?
முருகன் அடியார்களுடனான சத்சங்கம் இதற்குத் தேவை. அது தான் ஞான மயம். இதில் ஏராளமான பெரியோர் முருகனின் அருள் பற்றிக் கூறுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து விட வேண்டும்.
ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிச்சலதத்வே ஜீவன் முக்தி
ஏணியில் முதல் படியான ஸத்சங்கத்துடன் இணைந்தால் ஜீவன் முக்தி என்ற கடைசிப் படிக்கு முருகன் உயர்த்தி விடுகிறான்..
இதையே தமிழில் ஒரு பாடல் கூறுகிறது:
அறக்குறைவை நிறைவாக்கும் சம்பத்தாக்கும் ஆபத்தை
சுபமாக்கும் அசுபந்தன்னை
சிறக்குமுயர்ந்தவர் கூட்டமெனும் கங்கை
சீத நீராடினார்க்கும் செந்தீ வேள்வி
யிறக்கரிய தவம் தானம் தீர்த்தம் வேண்டாம்;
இடர் வந்த மறுத்தெவர்க்கும் இனியோராய்ப்
பிறப்பென்னும் வேலைப் புணையா முணர்வு சான்ற
பெரியோரை எவ்வகையும் பேணல் வெண்டும்
ஆகவே சத்சங்கத்துடன் இணைய வேண்டும்.
முருகா என்று துதிக்கும் சத்சங்கத்துடன் இணைந்து விட்ட போது, “உன்னை நான் காப்பேன், உனக்கு நான் காரண்டி” என்கிறான் முருகன்.
துர்சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும்.
விஞ்ஞானி ஒருவர் தான் ஒரு புதிய காரைக் கண்டிபிடித்திருப்பதாகவும் அதற்கான டெமோ அன்று மாலை நடக்கும் என்றும் அறிவித்தான்.
அந்தக் காருக்கு பெட் ரோல் வேண்டாம்; டீஸல் வேண்டாம்; எலக்ட்ரிசிடி வேண்டாம். ஆனால் கார் ஓடும்.
அன்று காலை மழை பெய்தது. ஆகவே மைதானத்தில் நீர் தேங்கி சில இடங்களில் சகதியாக இருந்தது. ஆனாலும் மாலை டெமோ குறித்த நேரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டனர். விஞ்ஞானி கையில் ஒரு ஸ்விட்சைத் தட்ட கார் வேகமாக ஓடியது. அனைவரும் ஆரவாரித்தனர்; பிரமித்தனர்.
கார் மைதானத்தில் ஓடும் போது சகதி நிறைந்த இடத்தை அடைந்தவுடன் ஒரு குட்டிக்கரணம் போட்டது. பின்னர் ஓடியது. இன்னும் ஒரு இடத்தில் சகதி. அங்கும் ஒரு குட்டிக்கரணம் போட்டது. பின்னர் ஓடியது.
டெமோ முடிந்தவுடன் விலை மலிவு. உடனே காரை வாங்க விரும்புவோர் வரலாம் என்று விஞ்ஞானி அறிவிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “இந்தக் கார் அற்புதமான கார் தான். ஆனால் சில இடங்களில் ஏன் குட்டிக்கரணம் போடுகிறது. அதனால் ஆபத்து இல்லையா?”
உடனே விஞ்ஞானி சொன்னார்: “இந்தக் காரின் தகடு அதாவது பேனல் பன்றித் தோலினால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தான் சகதியைக் கண்டவுடன் குட்டிக்கரணம் போடுகிறது.”

பழைய ஞாபகமும், வாசனைகளும் போகவே போகாது. பன்றியின் தோலால் ஆன கார் சகதியைக் கண்டவுடன் குட்டிக்கரணம் போடுவது அதனுடைய இயல்பினால் தான்.
ஆகவே தான் துர்சகவாசத்தைத் தவிர்த்து நல்லோரின் தொடர்பை மட்டுமே நாட வேண்டும்.
*** தொடரும்