WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.082
Date uploaded in London – — 11 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 9
ஒரு மனிதனுக்கும் அவன் செய்யும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை!
ச.நாகராஜன்
வசிஷ்டர் கர்ம ரகசியத்தை ஶ்ரீ ராமருக்கு உபதேசம் செய்கையில் மனம் பற்றிய அனைத்தையும் விளக்கி விடுகிறார்
இவை விஞ்ஞானத்தால் இதுவரை ஆராயப்படவில்லை. சோதனைச்சாலையில் பரிசோதிக்க முடியாத சத்தியங்கள் இவை.
வசிஷ்டர் யோக வாசிஷ்டத்தில் கூறிய கர்ம ரகசியத்தைத் தொடர்வோம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் மனமே அனைத்திற்கும் ஆதி காரணம் என்று கூறி கர்ம ரகசியத்தின் ஆதி மூல காரணத்தைக் கூறுகிறார் வசிஷ்டர்.
குசுமாஷயயோர்பேதோ ந யதாபின்னயோரிஹ |
ததைவ கர்மமனஸோர்பேதோ நாஸ்த்யவிபின்னயோ: ||
ஒரு மலருக்கும் அதன் வாசனைக்கும் அவை இரண்டாகப் பிரிக்க முடியாமல் இருப்பதனால் ஒரு வித வித்தியாசமும் இல்லாதது போல, ஒருவனின் செயலுக்கும் அவன் மனதிற்கும் பிரிக்க முடியாதபடி ஒரு வித்தியாசமும் இல்லை.
கல்பனாத்மிகயா கர்மஷக்த்யா விரஹிதம் மன: |
ந சம்பவதி லோகேஸ்மின்குணஹீனோ குணீ யதா ||
சில குணாதிசயங்களைக் கொண்ட விஷயம் ஒன்று அப்படிப்பட குணாதிசயங்கள் இல்லாதது போல கற்பனாசக்தியை மட்டும் கொண்டு செயலைச் செய்ய சக்தி இல்லாத மனம் இந்த உலகில் இருக்க முடியாது.
யதா வஹன்யௌஷ்யயோ: சத்தா ந சம்பவதி பின்னயோ|
ததைவ கர்மமனஸோஸ்ததாத்மமனஸோரபி ||
எப்படி தீயானது வெப்பமில்லாமல் இருக்க முடியாதோ அதே போல மனமும் செயலும், ஒரு மனிதனின் ஆத்மாவும் மனமுமாக வேறுபட்டு இருக்க முடியாது.
மனாகபி ந பேதோஸ்தி சம்வித்ஸ்பந்தமயாத்மனோ: |
கல்பனாம் சாத்ருதே ராம ஸ்ருஷ்டௌ புருஷகர்மணோ: ||
ராமா! படைப்பில் ஒரு மனிதனுக்கும் அவனது செயல்களுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. கற்பனை என்பதை மட்டும் விட்டு விட்டு, அது பிரக்ஞையும் இயக்கமுமாக இருக்கும் இயல்பே பொலத் தான்.
கர்மைவ புருஷோ ராம புருசஹ்ஸ்யைவ கர்மதா |
ஏதே ஹ்ராபின்னே வித்தி த்வம் யதா துஹிந்ஷீததே ||
ராமா! செயலே மனிதன். செயல்-இயற்கை ஒரு மனிதனுக்காகவே இருக்கிறது. ஐஸும் அதில் இருக்கும் குளிர்ச்சியும் போல இவை இரண்டும் வித்தியாசமற்றவை என்பது உனக்குத் தெரியும்.
சம்வித்ஸ்பந்தரஸஸ்யைவ தைவகர்மநராதய: |
பர்யாய சப்தோ ந புன: ப்ருதக்கர்மாதய: ||
விதி, செயல்கள், மனிதர்கள் ஆகிய அனைத்துமே ஒரே அர்த்தத்தைக் கொடுக்கும் விதவிதமான சொற்களே (Synonyms). பிரக்ஞையின் இயக்கத்தைக் கூறும் சாரம் இவை. என்ற போதிலும், செயலும் அதைப் போன்றவையும், தனியே இருப்பதில்லை.
பீஜாங்குர்விகல்பானாம் க்ரியாபுருஷகர்மணாம் |
ஊர்மிவீசிதரங்காணாம் நாஸ்தி பேதோ ந வஸ்துதி ||
விதைக்கும் அதிலிருந்து முளைக்கும் செடிக்கும் எப்படி வித்தியாசமில்லையோ அதே போல ஒருவனின் செயல், அந்த மனிதன், விதி ஆகியவற்றிற்கு இடையே எப்படி பேரலை, அலை, குமிழிகள் ஆகியவற்றிற்கிடையே வித்தியாசம் இல்லையோ அப்படி வித்தியாசம் இல்லை.
இப்படி கர்ம ரகசியம் தெளிவாகக் கூறப்படுகிறது.
மலருக்கும் அதன் வாசனைக்கும் இடையே பேதம் இல்லை.
நெருப்பிற்கும் அது தரும் வெப்பத்திற்கும் இடையே பேதம் இல்லை.
ஐஸ் கட்டிக்கும் அது தரும் குளிர்ச்சிக்கும் இடையே பேதம் இல்லை.
விதைக்கும் அதிலிருந்து எழும் செடிக்கும் இடையே பேதம் இல்லை.
பேராழி அலை, அலை, அதில் எழும் குமிழிகள் ஆகியவற்றிற்கு இடையே பேதம் இல்லை. அதே போல ஒரு மனிதன், அவன் செயல், விதி ஆகியவற்றிற்கு இடையே பேதம் இல்லை.
மனதைக் கவனி; கர்மத்தைப் புரி- விளைவு நல்லதாக இருக்கும் என்பதே இங்கு விளக்கப்படும் சாரம்.
இதுவே கர்ம ரகசியம்!
***