QUIZ மணி பத்து QUIZ (Post No.13,083)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,083

Date uploaded in London – –   11 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ மணி பத்து QUIZ (Post No.13,083)

Quiz Serial Number- 117

1.ஆராய்ச்சி மணி என்பது என்ன ?

xxxx

2.நாழிகைக் கணக்கர் என்போர் யார் ?

xxxx

3.ஆலய மணி ஓசை கேட்ட பின்னர் சாப்பிட்ட மன்னன் யார்

xxxx

4.காதில் மணி கட்டிக்கொண்ட புராண புருஷனின் பெயர் என்ன ?

xxxx

5.கண்டாகர்ணன்  ஏன் காதில் மணியைக் கட்டிக்கொண்டான் ?

Xxxx

6.நியூசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் மணி என்ன சொல்கிறது ?

xxxx

7.கோவில்களில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான போர்ச்சுகீசிய மணிகளை எங்கே காணலாம் ?

xxxx

8.அயோத்தி ராமர் கோவிலுக்கு மிகப்பெரிய மணி கொடுத்தவர் யார் ?

xxxx

9. பாண  பட்டர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய காதம்பரி காவியத்தில் மணி பற்றி என்ன சொல்கிறார்?

xxxx

10.வைணவப் பெரியார்களின் யாரை மணியின் அவதாரமாகக் கருதுகிறார்கள் ?

xxxx

ANSWERS

1.மன்னர்கள் அரண்மனை வாயிலில் தொங்கவிட்ட மணியை ஆராய்ச்சி மணி (calling Bell) என்பார்கள் ; இது தேவலோகத்தில் சிவபெருமான் வசிப்பிடத்திலும் இருந்ததாக அப்பர் தேவாரம் செப்புகிறது. ஆயினும் மனுநீதிச் சோழன் கதையில் வரும் இந்த மணி தமிழில் மிகவும் பிரபலமானது . மன்னன் மகன் ஒரு கன்றினை தேர் சக்கரத்தில் கொன்றவுடன் தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று மணியை அடித்து மன்னரை அழைத்தது ; மன்னன் அதற்கு நீதிவழங்கினான்.

மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கூர் இடும்பை

காவாய் எனக் கடைத் தூங்கு மணியைக் கையால் அமரர்

நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியதில்லை அப்பால்

தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே.– அப்பர் தேவாரம்

பொருள்–மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக்கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.

xxxx

2.இந்துமத புராணங்கள் , சங்கத் தமிழ் நூல்கள் ஆகியன 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா முழுதும் மணிகள் இருந்ததைக் காட்டுகின்றன ; ஒவ்வொரு மணி அல்லது நாழிகை  முடிந்தவுடன் நகரங்களில் மணி ஓசை ஒலித்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது; மணி அடித்து நாழிகையை அறிவிப்போரை நாழிகைக் கணக்கர் என்பார்கள். மதுரைக் காஞ்சி , முல்லைப்பாட்டு நற்றிணை நூல்களில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன  1 நாழிகை = 24 நிமிடங்கள்; இரண்டரை நாழிகை= ஒரு மணி ; ஒரு நாளில் 60 நாழிகைகள்  இருக்கிறது

xxxx

3.வீர பாண்டிய கட்டபொம்மன் ; இதற்காக அவன் திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை மணிக்கூண்டு கோபுரத்தை எழுப்பி இருந்தான். இந்த மணிக்கூண்டு கோபுரங்கள் சிலவற்றை இன்றும் காணலாம் கோவில் பூஜை முடிந்தவுடன் ஒவ்வொரு கோபுர மணியும் வரிசையாக ஒலிக்கத்துவங்குவதற்கு இந்த ஏற்பாடு.

திருச்செந்தூர் – பாஞ்சாலங்குறிச்சி இடையே 40 மைல்  தொலைவு.

xxxx

4.கண்டாகர்ணன்

xxxx

5.வெறி பிடித்த பக்தனாக இருக்கக்கூடாது என்பதற்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்டாகர்ணன் கதையைச் சொல்கிறார் . கண்டா என்றால் மணி; கர்ண என்றால் காது ; அவன் அபார சிவ பக்தன். சிவனைத் தவிர  வேறு எந்த தெய்வத்தின் பெயரும் காதில் விழக்கூடாது என்று காதில் மணியைக் கட்டிக்கொண்டு அலைந்தான். அரி யும் சிவனும் ஒன்று , அறியாதவன் வாயில் மண்ணு என்பதைக் கற்பிக்க சிவனே நேரடியாக வந்து உபதேசம் செய்தார். அவர் சங்கர நாராயணனாக அவதரித்தபோதும் சிவன் பக்கத்துக்கு மட்டும் ஆராதனை செய்தான். நாராயணன் இருந்த பக்கத்தைப் பார்க்க மறுத்தான். இறுதியில் ஒரு கிராமத்தில் குடிபுகுந்தான் ; அங் கு இவன் குணத்தை அறிந்த சிறுவர்கள் அவனைப்பார்த்து நாராயண நாராயண  என்று கோஷம் இட்டார்கள் அப்போது இரண்டு பக்க காதுகளிலும் மணியைக் கட்டிக்கொண்டான் .பின்னர் சிவன் அருளாலே அவனுக்கு ஞானம் கிட்டியது ; அவர் சொற்படி கண்ணனை வணங்கி வைகுண்டம் சேர்ந்தான்  என்று கதை முடிகிறது .

xxxx

6.இது 500 ஆண்டு பழமையான மணி. இப்போது நியூசிலாந்தில் ரே பாபா தேசிய அருங்காட்சியகத்தில் கா ட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .நியூசிலாந்தில் நோர்த்லாந்து பிராந்தியத்தில் வங்காரை அருகே மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.

உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலக் கப்பல் மணி ஆகும். வில்லியம் கொலென்சோ என்பவர்  1836 ஆம் ஆண்டில்  கண்டுபிடித்தார் .

இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செ.மீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகைய்யதீன் பக்சு உடைய கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்தது என்பதற்கு இது சான்றாக அமையலாம் என இந்தியவியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தெரிவிக்கிறார்

Xxxx

7.மகாராஷ்டிர  மாநிலத்தில் நான்கு  கோவில்களில்  போர்ச்சுகீசிய மணி இருக்கிறது

நரசபூர் என்னுமிடத்தில் உள்ள  பாணேச்வரர் சிவன் கோவில் அதில் ஒன்று.

புனே நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் நரசபூரில் அமைந்த சிவன் கோவில் இது. காடுகளுக்கிடையில் அமைந்த இந்தக் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லப்பட்ட போர்ச்சுகீசிய மணி கட்டப்பட்டு இருக்கிறது. போர்ச்சிகீசிய கடற்படையை  வென்ற மஹாராஷ்டிர தளபதி , 4 பெரிய மணிகளைக் கொண்டுவந்து 4 கோவில்களில் கட்டினார்  அவருடைய பெயர் சிமாஜி அப்பா . இது நடந்த ஆண்டு 1739.

xxxx

8. அயோத்தியில் ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்த ராமர் கோவிலுக்கு தழிழ் நாட்டிலுள்ள ஏரல் உள்பட பல இடங்களிலிருந்து ஆலய  மணிகள் சென்றன. ஆயினும் மிகப்பெரிய மணியை அனுப்பிய பெருமை உததரப் பிரதேசத்தையே சேரும்.2400 கிலோ எடையுள்ள மணியை 30 தொழிலாளர்கள் செய்துள்ளனர். இதன் நாதம் — மணி ஓசை– இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்துக்குக் கேட்கும். இதை அஷ்ட தாது என்று சொல்லப்படும் எட்டு உலோகங்களைக் கொண்டு செய்தனர். இதற்கு 25 லட்ச ரூபாய் செலவானது  அஷ்டதாது என்பதில் தங்கம், வெள்ளி, செம்பு, பாதரசம், துத்தநாகம். ஈயம், தகரம், இரும்பு ஆகியன  அடக்கம். உத்தர பிரதேசத்தில் எடா ஜில்லாவில் உள்ள ஜலேஸார் நகரம் இந்த மணியைச் செய்து அனுப்பியது.

Xxxxx

9.ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த பாண  பட்டர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய காதம்பரி காவியத்தில் மணி பற்றி ஒரு விநோதச் செய்தியைச் சொல்கிறார்.

வானத்தில் ஒரு தங்க  திரிசூலம் வரைவதை கதாநாயகன் சந்திர பீடன் காண்கிறான். அதி லிருந்து இரும்புச் சங்கிலியில் தொங்கிய ஒரு மணி கோரமான சப்தத்தை உண்டாக்குகிறது .

xxxx

10.வேதாந்த தேசிகனை திருமாலை பூஜிக்கும் மணியாக கருதுகிறார்கள் இதை அவரே ஒரு பாடலில் சொல்லியும் இருக்கிறார். திருப்பதியில் பெருமாளை  பூஜிக்க பிரம்மதேவன் பயன்படுத்திய மணியின் அவதாரம் தானே என்று அவர் பாடியிருக்கிறார். இதனால் அவருடைய பக்தர்கள் 701ஆவது அவதார தினத்தில் வெள்ளி மணி செய்து இந்தியாவில் 60 நகரங்களில் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

Xxxx

BONUS QUESTIONS

11.தமிழ் இலக்கியத்தில் மணி பற்றி என்ன காணப்படுகிறது ?

xxxx

சங்கத் தமிழ் நூல்களில் காதலர்கள் ஒட்டிய ரதங்களில், தேர்களில் மணிகள் தொங்கின. இயற்கைக் காட்சிகளைக் கண்டபோது , பிராணிகள் பறவைகளுக்கு தொல்லை வரக்கூடாதே என்று மணியின் நாக்கினைக் கட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தனர்.

xxxx

12. கோவிலில் மணி அடிப்பதன் நோக்கம் என்ன ?

xxx

பக்தர்களுக்கு தீவாராதனை நேரத்தை அறிவிக்க ;

பக்தர்களைக் கோவிலுக்கு அழைக்க;

தீய சக்திகளை விரட்ட;

நல்ல மங்கள உணர்வுகளை எழுப்ப;

அபசகுன ஒலிகள் காதுகளில் விழாமல் இருக்க

ஆலய மணி ஓசை பயன்படுகிறது

xxxx

13. மணி பற்றிய பூஜா ஸ்லோகம் என்ன சொல்கிறது ?

Xxxx

आगमार्थं तु देवानां गमनार्थं तु रक्षसाम् ।

घण्टारवं करोम्यादौ देवताह्वान लाञ्छनम् ॥

ஆகமார்த்தம்து தேவானாம் காமனார்த்தம்து ராக்ஷஸாம்

கண்டா ரவம் கரோம் யாதெள தேவதாஹவான் லாஞ்சனம்

கடவுளரை அழைக்க நான் இந்த மணியை ஒலிக்கிறேன்  நன்மை பயக்கும் சக்திகள் என் வீட்டில் நுழையட்டும். இங்கே இருக்கும் தீய சக்திகள் வெளியேறட்டும்

xxxx

Tamil Bell in New Zealand Museum

Tamil Film Song on Temple Bell

படம் – பாலும் பழமும்
இசை – விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் – பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்.

 –subham–

Tags – மணி பத்து QUIZ , ஆலய மணி, கட்டபொம்மன், திருச்செந்தூர், அயோத்தி, ராமர் கோவில் மணி,  நாழிகைக் கணக்கர்,தமிழ் மணி, போர்ச்சுகீசிய , அப்பர் தேவாரத்தில், மணி அடிப்பது ஏன்

Leave a comment

Leave a comment