ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 1 (Post No.13,094)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.094

Date uploaded in London – — 15 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது. 

ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 1 

ச.நாகராஜன்

பன்முகப் பரிமாணம் கொண்ட பிர்லா!

சாதாரண சின்ன பெட்டிக் கடையில் பதினாறாம் வயதில் வணிகத்தைத் தொடங்கி பிரம்மாண்டமான அளவு அதை வளரச் செய்த ஒரு சாதனையை நிகழ்த்தியவர் யார் தெரியுமா? அவர் தான் கணஷ்யாம் தாஸ் பிர்லா.

ஜி.டி. பிர்லா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

பெரிய தொழிலதிபர், தேசபக்தர், ஆகப் பெரும் பணக்காரர்

அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர், தேசத்தை தொழில்மயமாக்க உதவியவர், காந்திஜிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், தடைகள் பலவற்றை வென்றவர், கல்வி அறிவு பரப்புவதில் ஆர்வம் கொண்டவர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி!

பிறப்பும் இளமையும்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன் ஜுனு என்ற மாவட்டத்தில் பிலானி என்னும் சிறு நகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பல்தேவ்தாஸ் பிர்லாவுக்கு மூன்றாவது மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள் கணஷ்யாம் தாஸ் பிர்லா பிறந்தார். அன்று ராம நவமி தினம்.

இளமையில் உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் தந்தையுடன் கல்கத்தா சென்று சணல் வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார். பின்னர் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

1914 முதல் ஆரம்பித்த முதலாம் உலகப் போர் பிரிட்டிஷாரைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. நிலைமையை நன்கு கவனித்த பிர்லா அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்கு உழைத்து முன்னேறலானார். உலகப் போர் முடிந்த 1919ஆம் ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை ஒன்றைத் தொடங்கினார்.

பிரிட்டிஷாரின் எதிர்ப்பு

பிர்லா தனியாகத் தொழில் தொடங்குவதைக் கண்ட பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தனர். ஏராளமான இடையூறுகளைத் தந்தனர். அவர்கள் உபயோகிக்கும் லிப்டில் ஏறக் கூடாது. ஒரு சந்திப்பில் காத்திருக்கும் போது அங்குள்ள பெஞ்சுகளில் பிரிட்டிஷாருக்குச் சமமாக உட்காரக் கூடாது. இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் படாதபாடு பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக சுயமாக சுதேசி ஜவுளியைத் தயாரித்து அவர்களுக்கு ஈடு கொடுத்தார் அவர்.

எப்படியும் தேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் விதையூன்றியது. எந்த பிரிட்டிஷ் அரசு அவரை அவமதித்ததோ அதே அரசால் லண்டனில் 10, டவுனிங் சாலையில் அவரது 40வது வயதில் அவர் வரவேற்கப்பட்டது குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சியானது.

மகாத்மாவின் எழுச்சி

இந்த நிலையில் தான் “இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா” மக்களை எழுச்சியுறச் செய்ய ஆரம்பித்தார். பிர்லாவையும் கவர்ந்தார்.

காந்திஜியுடனான நெருங்கிய பிணைப்பு அவர் மறையும் வரை பிர்லாவுடன் இருந்தது.

முதலில் ஐயாயிரம் ரூபாயை நன்கொடையாக அவர் காந்திஜிக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

“நீங்கள் நலமுற இருக்க வேண்டும். எனக்கு உங்களால் ஆக வேண்டிய காரியம் நிறைய  இருக்கிறது” என்று எழுதினார் காந்திஜி.

உண்மையும் அப்படித்தான் ஆனது. காந்திஜியின் திட்டங்களுக்கெல்லாம் அவர் உதவினார். திலகர் ஸ்வராஜ்ய நிதிக்கு அவர் பெரியதொரு தொகையைக் கொடுத்தார். ஹரிஜன் நல நிதிக்கு இரண்டு லட்சம் கொடுத்தார்

சுமார் 20 கோடி ரூபாயை அவர் காங்கிரஸுக்கு அளித்துள்ளதாக பின்னால் வந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனைக்கும் அவர் காந்திஜியின் அனைத்துக் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் அவர் காந்திஜியை அப்படியே பின்பற்றினார்.

காந்திஜியை அவர் எவ்வளவு மதித்தார் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் உண்டு. 1931இல்  இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் லார்ட் சாலிஸ்பரி, பிர்லாவிடம், “நல்ல குணாதிசயத்துடன் கூடிய அனுபவத்தைக் கொண்ட ஒருவரை மகானாக ஆக்கி விடும் பெரும் தவறை நீங்கள் உங்களது குழப்பத்தினால் செய்கிறீர்கள். இங்கிலாந்து ஆயிரம் ஆண்டுகளின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, உங்களுக்கோ ஒன்றும் இல்லை” என்று காந்தியடிகளை மகானாக ஆக்கும் இந்தியரை ஏளனம் செய்தார். உடனே பிர்லா, “எங்களது பாரம்பரியம் உங்களுடையதை விடப் பழமையானது. அது அனைவராலும்  மதிக்கப்படுவதும் கூட” என்று பளீரென்று பதிலைக் கூறிவிட்டு அவரிடமிருந்து அகன்றார்.

காந்திஜியுடன் கடிதங்கள்

நூற்றுக் கணக்கான கடிதங்கள் காந்திஜிக்கும் அவருக்கும் இடையே பரிமாறப்பட்டன.

ஒரு கடிதத்தில், பிர்லா என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்று அன்புடன் அறிவுரை கூறி இருந்தார் காந்திஜி. இன்னொரு கடிதத்தில் தன்னிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை என்றால் தான் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்ததாகவே எப்போதும் கொள்ள வேண்டும் என்றும் அன்புரை கூறி இருந்தார்.

இந்தக் கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் நூல் வடிவில் நான்கு தொகுதிகளாக ‘பாபு : எ யூனிக் அசோசியேஷன்’ (Bapu: A Unique Association’) பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஹாத்மாவுடனான தனது நினைவலைகளை ஒரு புத்தகமாக எழுதி 1953இல்அவர்  வெளியிட்டார்.

நான் ஒரு காந்தியவாதி

மஹாத்மா என்ன சொன்னாலும் அதைச் செய்ய என்னால் மறுக்க முடியாது என்று கூறினார் பிர்லா. “நான் காங்கிரஸ்காரன் இல்லை; ஆனால் காந்தியவாதி” என்று இங்கிலாந்தில் அவர் முழங்கினார்.

1916இல் முதன் முதலாக மஹாத்மாவை சந்தித்த அவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட முக்கிய போராட்டங்களில் பங்கேற்றார்.

டில்லியில் இருந்த 12 அறைகளுடன் கூடிய அவரது பெரிய வீடு இந்தியாவின் தலைநகர் வீடாக கருதப்பட்டது. தேசீயத் தலைவர்கள் அங்கே குழுமுவது வழக்கம்.

மஹாத்மா தனது கடைசி நான்கு மாதங்கள் இங்கு தான் தங்கி இருந்தார்.

லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினர்

பிரிட்டிஷ் இந்தியாவில் 1926ஆம் ஆண்டு அவர் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

to be continued………………………………

Leave a comment

Leave a comment