வியாதிகள் தீர்த்து, குடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ (Post.13,100)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.100

Date uploaded in London – — 17 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

வியாதிகள் தீர்த்துகுடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ

சக்தி பீடம்!

பாரதமெங்கும் உள்ள சக்தி பீடங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு சக்தி பீடம் விந்த்யாசலம் ஆகும். இங்கு தூய கங்கா நதி பாய்கிறது. ஶ்ரீ சக்ரம் அமைந்துள்ள கோவிலும் இங்கே உள்ளது.

அமைந்துள்ள இடம்

உத்தர பிரதேசத்தில் அலகாபாத்திற்கும் முகல்சராய்க்கும் இடையே கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம் விந்த்யாசலம். இதிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள நகரம் மிர்ஜாபூர். மிர்ஜாபூரில் ரயில் நிலையத்தில் இறங்கி விந்த்யாசலம் செல்ல வேண்டும்.

வாரணாசியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் பிரயாகையிலிருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் இது அமைந்துள்ளது.

வருடம் முழுவதும் யாத்ரீகர்கள் வரும் தலம் என்பதால் பஸ் வசதி எப்போதும் உண்டு. ஹோட்டல்களும், தங்க இடமும் உள்ளது.

. புராண வரலாறு

ஶ்ரீமத் பாகவதத்தில் பத்தாம் ஸ்கந்தத்தில் கூறப்படும் வரலாற்றில்,

ப்ரம்மா, ஸ்வயம்பாவமனுவையும் சதரூபரையும் தன் மனதால் உற்பவிக்கிறார் என்றும் திருமணத்திற்குப் பிறகு ஸ்வயம்பாவமனு தேவியின் விக்ரஹத்தைத் தன் கையால் உருவாக்கி தீவிர தவத்தை நூறு ஆண்டுகள் செய்ததாகவும் இதனால் மனம் மகிழ்ந்த தேவி நல்ல அந்தஸ்து, குடும்ப விருத்தி, உயர்ந்த நிலை ஆகியவற்றை அவருக்கு அருளியதாகவும் வருகிறது.

இதன் பின்னர் தேவி விந்த்யாசல மலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆகவே படைப்பின் ஆரம்பகாலம் தொட்டு உள்ள தலம் இது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு புராண வரலாற்றின் படி தேவியானவள் மஹிஷாசுரனை வதம் செய்த பிறகு இங்கு குடி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மஹாபாரதத்தில் தர்மர், “அன்னையே! நீ எப்போதும் விந்த்யாசல மலையில் இருக்கிறாய்!” என்று கூறி வணங்குகிறார்.

லலிதா சஹஸ்ர நாமம்

லலிதா சஹஸ்ர நாமத்தில் 336 நாமமாக வருவது விந்த்யாசல நிவாஸினீ என்னும் நாமம்.

விந்த்யாசலத்தில் இருக்கும் அம்பாளுடைய ரூபத்திற்கு விந்த்யாதி வாஸினீ என்று பெயர் என்பதாக பத்ம புராணத்தில் அம்பாளுடைய முக்கிய க்ஷேத்திரங்களைச் சொல்லுகையில் சொல்லப்படுகிறது.

‘த்ரிகூடே ச த தாஸீதா விந்த்யே விந்த்யாவாஸினீ’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்தாற்போல தேவி மாஹாத்மியத்தில் அம்பாள் விந்த்யாசலத்தில் தான் இருப்பதாகவும் அந்த ரூபத்தில் அசுரர்களை சம்ஹாரம் செய்யப் போவதாகவும் சொன்னதாக சொல்லப்படுகிறது.

“வைவஸ்வதேந்தரே ப்ராப்தே அஷ்டாவிசதிமே யகே |

சும்போ நிசும்பச்சிவான்யௌ உத்பத்ஸ்யேதே மஹாஸுரௌ ||

நந்தகோபக்ருஹே ஜாதா யசோதா கர்பஸ்ம்பவா |

ததஸ்தௌ நாசயிஷ்யாமி விந்த்யாசல நிவாஸினீ ||”

இதே போல பாஞ்சராத்ர லக்ஷ்மீ தந்த்ரத்திலும் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது:

“வைவஸ்வதேந்தரே தௌ ச புன: சும்பநிசும்பகௌ |

உத்பத்ஸ்யேதே வரான் மத்தௌ தேவோபத்ரவகாரிணௌ ||

நந்தகோபகுலே ஜாதா யசோதா கர்பஸம்பவா |

தாவஹம் நாசயிஷ்யாமி நந்தாக்யா விந்த்யவாஸினீ ||

ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அதே நாளில் யசோதையின் கர்பத்தில் தேவி அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. கம்ஸன் கல்லால் அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற போது அது அவன் கைப்பிடியிலிருந்து தப்பித்து தேவியின் உருவமாக மாறியது.

விந்த்யாசலவாஸினீ ஆலயம்

இப்பகுதியில் பல ஆலயங்கள் உள்ளன.

1.   மா விந்த்யாசலவாஸினி கோவில் : துர்க்கையம்மன் எழுந்தருளி இருக்கும் கோவில் இது.

2.   காளி கோ கோவில் : குகை கோவிலாக அமைந்துள்ள இந்தக் கோவிலில் காளி எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.

3.   அஷ்டாபுஜி தேவி ஆலயம் :  மஹா சரஸ்வதி எழுந்தருளியுள்ள ஆலயம் இது. குன்றில் அமைந்துள்ள ஆலயமான இது விந்த்யாசலவாஸினி கோவிலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

 அஷ்டாபுஜி தேவி ஆலயம் அருகே 30”x30”x4” என்ற அளவில் கூர்ம ப்ரிஷ்ட ஶ்ரீ சக்ரம் 30”x30”x8” என்ற அளவுள்ள சிவலிங்க பீடத்தின் அடியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஶ்ரீசக்ரம் கல்லிலே செதுக்கப்பட்டிருக்கிறது.

 த்ரிகோண பரிக்ரமா

இங்கு முக்கியமான யாத்திரை த்ரிகோண பரிக்ரமா எனப்படும் யாத்திரையாகும்.

முக்கோண வடிவில் அமைந்துள்ள கோவில்களுக்குச் செல்லும் யாத்திரை விந்த்யாவாஸினீ ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. தெற்கே மஹாகாளி ஆலயம் (காளி கோ கோவில்) , மேற்கே மஹாசரஸ்வதி ஆலயம் (அஷ்டாபுஜி தேவி ஆலயம்) சென்று தரிசிப்பதுடன் யாத்திரை முடிகிறது.

 உற்சவ காலங்கள்

நவராத்திரி உற்சவ காலத்தில் நகரம் முழுவதும் தீபாலங்காரத்தால் ஜொலிக்கும். ஏப்ரல்(சைத்ர மாதம்), அக்டோபர் (அஸ்வினி மாதம்) மாதங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தேவியானவள், கோவில் உச்சியில் இருக்கும் கொடியில் இருப்பதாக ஐதீகம். தங்கத்தால் அமைந்துள்ள இந்தக் கொடி  சூரிய சந்திர கொடி என்று அழைக்கப்படுகிறது. இந்த அடையாளம் விந்த்யாவாஸினீ கொடியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்

 நோய் தீர்க்கும் தீர்த்தம்

இங்குள்ள கங்கை நதியின் தூய நீர் மிகுந்த சக்தி வாய்ந்தது; புனிதமானது.

பண்டித ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் மத்திய கல்வி மந்திரியாகப் பொறுப்பு வகித்த அப்துல் கலாம் ஆஜாத் சிலகாலம் இங்குள்ள சுற்றுலா பங்களாவில் தங்கி கெருவா குண்டம் மற்றும் காளிகோ ஆகிய இடங்களிலிருந்து தீர்த்தத்தை அருந்தி வந்தாராம். காலையிலும் மாலையிலும் இந்தப் பகுதியில் நடைப்பயிற்சியையும் அவர் மேற்கொண்டாராம். வியாதியால் பீடிக்கப்பட்டோரை வியாதியிலிருந்து மீட்கும் சக்தி இந்த தீர்த்தத்திற்கும் இங்குள்ள பிரதேசத்திற்கும் உண்டு என்பது அனைவருடைய நம்பிக்கையும் ஆகும்.

 வியாதி தீர, குடும்பம் செழிக்க, உயர்ந்த அந்தஸ்தைப் பெற என அனைத்தும் அருளும் தேவியாக விந்த்யாசலவாஸிணீ இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஏராளம்.

சக்தியைத் தொழுவோம்; உயர்வோம்!

—-subham——

Leave a comment

Leave a comment