பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2 (Post.13549)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.549

Date uploaded in London – 16 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2

ச. நாகராஜன்

31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு உதவி

1963 மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கு வந்தார்.  டெல்லி. லூதியானா, கான்பூர், பூனே, இந்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கி தனது கோதுமை விளைச்சல் உத்தியை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். 1975 வரை இந்தியாவில் இருந்து இந்திய கோதுமை விளைச்சலில் வெற்றியைக் கண்டார் அவர்.

அவருக்கு இந்திய அரசு 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை அளித்துச் சிறப்பித்தது. அவருக்கு 2013-ல் டெல்லியில் ஐ.சி.ஏ.ஆர். கட்டிட வளாகத்தில் ஒரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நோபல் பரிசு

1970-ல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வேயிலிருந்து அவர் நோபல் பரிசு பெற்ற செய்தியானது அவருக்கு மெக்ஸிகோவில் காலை நான்கு மணிக்கு அவரது மனைவியிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர்லாக்கோ அதற்கு முன்பேயே நாற்பது மைல் தள்ளி உள்ள டோலுகா பள்ளத்தாக்கு என்ற தனது சோதனை வயல்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மனைவி விரைந்து சென்று அவரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். போர்லாக் இதை நம்பவில்லை. அனைவருமாகச் சேர்ந்து ஒரு புரளியைக் கிளப்பி தன்னைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்றே நினைத்தார்.

டிசம்பர் 10-ஆம் தேதி பரிசைப் பெற்ற பின் தனது உரையில், “ பசியால் வாடும் உலகம் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் போது விவசாயமும் உணவு உற்பத்தியும் எவ்வளவு முக்கியமானது என்பதை அடையாளப்படுத்த ஒரு தனிமனிதனான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது” என்று எளிமையாகக் குறிப்பிட்டார்.

உலகின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அவர் போற்றிப் புகழப்பட்டார்.

எஸ்.ஏ.ஏ

சஸகாவா ஆப்ரிக்கா சங்கம் (எஸ்.ஏ.ஏ.) என்ற சங்கத்தை உருவாக்கி 1989 முதல் 2009 முடிய அதன் தலைவராக அவர் இருந்தார். 15 ஆப்பிரிக்க நாடுகளில் 80 லட்சம் விவசாயிகளுக்கு அவர் அமோக விளைச்சலுக்கான பல உத்திகளைக் கற்றுக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்தார். அதனால் விளைச்சல் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் ஆனது. அனைவரும் மகிழ்ந்தனர்.

குடும்பம்

கல்லூரியில் படிக்கும் போது டிங்கிடவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு காப்பி விற்கும் பெட்டிக் கடையில் மார்கரெட் ஜிப்ஸன் என்ற பெண்மணியைச் சந்தித்த போர்லாக் அவரை 1937-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள், ஐந்து பேரக் குழந்தைகள் ஆறு  கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. 69 வருட மண வாழ்க்கை நீடித்த பின்னர் 2007-ல் மார்கரெட் தனது 95-ம் வயதில் தடுக்கி விழுந்ததால் மரணமடைந்தார்.

விருதுகள்

வாழ்நாள் முழுவதும் அவர் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை. 2004-ல் 18 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு 49 கௌரவ பட்டங்களை அளித்துக் கௌரவித்தன.  அமெரிக்காவில் நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவரின் பதக்கப் பரிசு மற்றும் அமெரிக்க காங்கிரஸின் தங்கப் பதக்கம்  ஆகிய மூன்றையும் இதுவரை பெற்றவர் ஐவர் மட்டுமே. அதில் போர்லாக்கும் ஒருவர்.

புத்தகம்

போர்லாக்கைப் பற்றி ஏராளமான புத்தகங்களும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நார்மன் போர்லாக் இருபத்திநான்கரை கோடி பேரைக் காப்பாற்றியதை விவரிக்கும் புத்தகமான “நார்மன் போர்லாக் – ஓவர் 245 மில்லியன் லைவ்ஸ் சேவ்ட்” என்ற புத்தகம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

மறைவு

இறுதி வரை உழைப்பை மேற்கொண்ட போர்லாக் பழுத்த 95-ம் வயதில் 2009, செப்டம்பர் 12-ம் நாளன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மரணமடைந்தார்.

அவரது கல்லறையில் பொருத்தமான ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது இப்படி:

“உலகிற்கு உணவளித்த மனிதர் இவர்.”

சமூக நீதியின் முக்கிய அம்சம்!

ஏராளமான அவரது பொன்மொழிகளில் முக்கியமான கூற்று இது தான்:

“சமூக நீதியின் முக்கியமான முதல் அம்சம் மனித குலம் முழுவதற்கும் போதுமான உணவை வழங்குவது தான்!”

அமெரிக்காவில் பிறந்தாலும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்ற குறளின் அடிப்படையில் (குறள் எண் 322) வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய போர்லாக்கை உலகம் மறக்க முடியுமா என்ன?

***

Leave a comment

Leave a comment