காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! – 2 (Post.14,048)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,048

Date uploaded in Sydney, Australia – –4 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

26-12-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! – 2 

ச. நாகராஜன்

ஊனமுற்றோருக்கு நல் வாழ்வு

உலகின் உன்னதமான மனித குல சேவை ஒன்றைச் செயலில் காட்டியவர் காஸுமா ததேய்ஷி.

உலகில் உள்ள நாடுகளில் ஐரோப்பாவில் 14 சதவிகிதமும்

 12 சதவிகிதம் அமெரிக்காவிலும் ஜப்பானில் 4 சதவிகிதமும் உடலில் குறை உள்ளோர் வாழ்கின்றனர்.

க்யோடா நகர்புற எல்லையில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் ஒரு அரிய காட்சியைக் காண்பவர் வியந்துபோவார்கள்.

உடல் ஊனமுற்றவர்களையும் மனதளவில் மன வளர்ச்சி குன்றியவர்களையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைக்கவே முனையும். அவர்களைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய பொதுவாக தொழில் அதிபர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் ஓம்ரான் நிறுவனரான ததேய்ஷி படைப்பாற்றல் திறனுடன் அதி நவீன தொழில்நுட்பங்களை இந்த ஊனமுற்றவர்களுக்காகவும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காகவும் உரிய முறையில் மாற்றி அமைத்தார்.

ஸிஸ்டம்ஸ் தியரி என்ற தொழில்நுட்பக் கொள்கையானது வெவ்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து எப்படி ஒரு முழு பொருளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்கிறது.  சைபர்னெடிக் எஞ்ஜினியரிங் என்ற தொழில் நுட்பமும் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் தொழில் நுட்பமாகும்.

ஆக இந்த தொழில்நுட்பங்களை நன்கு அறிந்து கொண்ட ததேய்ஷி உடல் ஊனமுற்றவர்கள் கூட சிக்கலான அசெம்பிளி லைனில் திறம்பட வேலை பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவர்கள் திறனுக்கு ஏற்றபடியும் உடல் வலிமைக்கு ஏற்றபடியும் அவர் இயந்திரங்களைத் தயாரிக்கச் செய்தார். அவர்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதை நன்கு கணித்து மீதி திறனை இயந்திரங்களே செய்ய உரிய வழி வகைகளை அவர் உருவாக்கினார். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த வேலையை நிச்சயம் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

ஓம்ரான் சன் ஹவுஸ் தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி லைனில் உள்ள இயந்திரங்கள் உடல் ஊனமுற்றோர் அமர்ந்திருக்கும் வீல் சேர் அளவு கீழே இறங்கி வரும். ஒரு கையை இழந்த ஒருவர் இன்னொரு கையால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்காக கருவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

உடல் வலுவே இல்லாத ஒரு பெண்மணி எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பாக்கேஜிங் மெஷின் உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இலேசாக தன்னிடம் உள்ள சிறு பெட்டியை உள்ளே தள்ளி விட அந்த பாக்கேஜிங் அதை ஏற்றுக் கொண்டு மிக வேகத்துடன் தன் உள்ளே இழுத்துக் கொள்ளும்.

தொழிற்சாலையில் உள்ள அனைத்து விளக்குகளையும் லிப்டுகளையும் இவர்கள் தங்கள் வீல் சேரிலிருந்தே இயக்கலாம்.

அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து கண்ணியமாகவும் பிறர் மதிக்கும் படி மரியாதையுடன் வாழவும் அவர் வழி வகை செய்தார்.

உலகம் இதை ஆச்சரியத்துடன் பார்த்தது; அவரை அனைவரும் வாழ்த்தினர்.

முதலில் “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று நினைத்தவர்களே ஓம்ரான் நிறுவனத்தின் லாபத்தைக் காண்டு வியந்தனர்.

உடல் ரீதியாக குறைகள் உள்ளவர்கள், மன ரீதியாக குறைகள் உள்ளவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குறைகள் உள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஓம்ரான் நல்ல வாய்ப்புகளையும் பயிற்சியையும் தந்தது.

பெரிய வணிக வியாதி

ஒரு நிறுவனம் வளர்ந்து வரும் போது அங்கு பிக் பிஸினஸ் டிஸீஸ் எனப்படும் “பெரிய வணிக வியாதி” என்று ஒன்று உருவாகி நிறுவனத்தின் கட்டுக்கோப்பை சிதைக்கச் செய்வதைக் கண்ட ததேய்ஷி தனது பெரும் நிறுவனத்தைப் பல பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய ஒரு மேலாளரை நியமித்தார். அவர்கள் கம்பெனியின் தலைவர் போல இருக்க வேண்டும் என்று அவர் உணர்த்தினார். நிறுவனத்தை மிகச் சிறப்பாக நடத்த உள்ள வழிமுறைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

உற்பத்திப் பிரிவே தொழிற்சாலைக்கு இதயம் போன்றது என்பதால் அங்கு மதிய இடைவேளையின் போது முதலில் தொழிலாளர்களுக்கே உணவு முதலில் பரிமாறப்படும். கடைசியில் தான் மேலாளர்கள் சாப்பிடலாம். இது போன்ற பல சிறப்பு விதிகள் தொழிலகத்தை மிக அழகுற நடத்த வழி வகுத்தது.

“உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல விளைவானது நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது நிச்சயம் நடைபெறும் என்பதற்கான நல்ல சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று அடிக்கடி அவர் கூறுவார்.

ததேய்ஷி எழுதிய நூல்

ததேய்ஷி ‘தி எடர்னல் ஸ்பிரிட் ஆஃப் எண்டர்ப்ரெய்னர்ஷிப்’ என்ற நூலை 1985ல் எழுதினார். இது சீன, ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் விற்பனையைக் கண்ட நூலாக ஆனது.

மறைவு

1991ல் ததேய்ஷி தனது 91ம் வயதில் மறைந்தார்.

பொன்மொழிகள்

தன் வாழ்நாள் அனுபவத்தை அவர் பிறருக்கும் தெரிவித்து வந்தார்.

அவற்றில் சில இதோ:

முக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் வணிகமானது சமூகத்தில் ஒரு மதிப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் சமூகத்திற்கு லாப நோக்கில் அல்லாமல் பெரிய அளவில் நல்லனவற்றை வழங்கும் போது அது மிக்க சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

‘என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. அதற்குப் பதில் அதை நான் எப்படிச் செய்வது’ என்று பார். முயற்சி செய்து அதைச் செய்து முடிக்கும் வழியைப் பார்.

முதலில் முயற்சி செய் என்பதே மந்திரம்!

உலகம் வியக்கும் ததேய்ஷியின் வாழ்க்கைத் தத்துவமே மொத்தம் மூன்றே வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

“முதலில்  முயற்சி செய்!” என்பது தான் அந்த மூன்று வார்த்தை மந்திரமாகும்!

அன்றாடம் ஆரோக்கியம் சம்பந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டில் உபயோகிக்கும் போது நாம் மனதிற்குள் நன்றி சொல்ல வேண்டிய ஒரு பெயர் காஸுமா ததேய்ஷி!

***

Leave a comment

Leave a comment