
Post No. 14,284
Date uploaded in Sydney, Australia – 9 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தந்தை யார்? குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1
குமரேச சதகம் என்றால் என்ன ?
முருகப்பெருமான் பெயரில் நூறு பாடல்கள் என்று பொருள். சதகம் என்றால் நூறு பாடல்கள். இவை முழுதும் முருகனைப் பற்றியவை அல்ல. பொது விஷயங்களும் வருகின்றன அதாவது சமயம் பற்றியில்லாத தகவல்களும் வருகின்றன.
இயற்றியவர் யார் ?
நூறு பாடல்களை இயற்றியவர் குருபாததாசர் ஆவார். அவர் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள புல்வயல் என்னும் ஊரைச் சேர்ந்த சைவ வேளாளர்; சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் . புல்வயலில் குடிகொண்டமுருகப்பெருமானைப் போற்றி , அவரை நினைத்துக்கொண்டு, பொது அறிவுரைகளை வழங்குகிறார் .
இதில் பல சுவையான செய்திகளும் வருகின்றன .
முதலில் முருகனைப் போற்றி வழிபட்டுவிட்டு பிராமணர், க்ஷத்ரியர் வைசியர் வேளாளர் பற்றி நான்கு பாடல்களை பாடிவிட்டு யார் தந்தை என்று சொல்கிறார் . இதை சம்ஸ்க்ருதத்திலும் காண்கிறோம்.
****
தந்தை நிலையில் / ஸ்தானத்தில் வைக்கப்படுவோர் யார் ?
பாடல் எண் ஆறு
6. பிதாக்கள்
தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
தனைவளர்த் தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
சார்ந்தசற் குருவொருபிதா,
அவம் அறுத்தாள்கின்ற அரசொருபிதா, நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,
அன்புள முனோன் ஒருபிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
கலிதவிர்த் தவன் ஒருபிதா,
காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்
கருதுவது நீதியாகும்
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இவரது பட்டியல் சம்ஸ்க்ருத சுபாஷிதப் பட்டியலிலிருந்து வேறுபடுகிறது ; சம்ஸ்க்ருத மொழியில் உள்ள பொன்மொழிப் பாடல்களில் பொதுவாக ஐந்து தந்தை, ஐந்து தாய் ஐந்து குரு என்றுதான் பாடியிருக்கிறார்கள்
இவரோ பெரிய பட்டியல் தருகிறார்.
இதோ சம்ஸ்க்ருத ஸ்லோகம்
தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:
பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.
ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி
அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி
****
குருபாததாசர் சொல்லும் தந்தையர்கள்/ பிதாக்கள்
சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ஐந்து தந்தையரை ஒப்புக்கொள்ளும் குருபாததாசர் மேலும் சிலரையும் தந்தை ஸ்தானத்தில்/ நிலையில் வைக்கிறார்
தன்னை வளர்த்தவன் ஒரு பிதா – தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, (GOD FATHER)
சார்ந்த சற்குரு ஒரு பிதா – உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக் கொடுத்தவன் ஒரு தந்தை,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா –
துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை,
நல்ல ஆபத்துவேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா – கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை,
அன்பு உள முனோன் ஒரு பிதா – அன்புடைய தமையன் ஒரு தந்தை,
கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா –
உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு தந்தை,
கலி தவிர்த்தவன் ஒரு பிதா – வறுமையைப் போக்கியவன் ஒரு
தந்தை (நமக்கு உணவு கொடுத்து உதவியவர்).
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும்
– உலகில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது அறம் ஆகும்.
—SUBHAM—-
TAGS– தந்தை யார் ? குருபாததாசர் ,குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை -1