
Post No. 14,287
Date uploaded in Sydney, Australia – 10 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Complied from National newspapers and edited for broadcast.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; மார்ச் மாதம் 9-ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு
ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 9-3-2025 (Post No.14,287)
இமய மலையில் இரண்டு தலங்களுக்கு ‘ரோப் கார்’ வசதி — மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
கேதார்நாத், ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாரா புனித தலங்களில், 6,800 கோடி ரூபாய் மதிப்பில் ‘ரோப் கார்’ வசதி அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கேதார்நாத்தில், ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
ஏப்ரல்,மே -மாதத்தில் அட்சய திரிதியை தினம் துவங்கி, அக்டோபர் – நவம்பரில் தீபாவளி வரை கோவில் திறந்திருக்கும். 11,968 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலை மீது இருக்கும் கேதார்நாத் கோவிலுக்கு, கவுரிகுண்டில் இருந்து 16 கி.மீ., துாரம் மலை மீது நடந்தும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்ய வேண்டும்.
கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதையடுத்து, 4,000 கோடி ரூபாய் செலவில், சோன் பிரயாக் – -கேதார்நாத் இடையே 12.9 கி.மீ., துாரத்துக்கு தனியார் பங்களிப்புடன் ரோப் கார் அமைக்கப்படுகிறது.
கேதார்நாத் ரோப் கார் திட்டம்; 9 மணி நேரம் பயணத்தை 36 நிமிடங்களாக குறைக்கும்!
அதிவேக காற்று மற்றும் கடுங்குளிரை தாங்கும் வகையில் அமைக்கப்படும் ரோப் காரில், ஒரு மணி நேரத்துக்கு 1,800 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 18,000 பேர் பயணிக்கலாம்.
இதே போல், உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்கும் 2,730 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் திட்டத்தை அமைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சீக்கிய குரு கோவிந்த் சிங் நினைவாக அமைந்துள்ள இந்த குருத்வாரா, 15,000 அடி உயரத்தில், ஏழு மலை முகடுகளுக்கு மத்தியில் பனி பிரதேசத்தில் உள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை திறந்திருக்கும்.
கோவிந்த் காட்டில் இருந்து 21 கி.மீ., துாரத்துக்கு கடுமையான மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இதை தவிர்க்கும் வகையில், 12.4 கி.மீ., துாரத்துக்கு, மணிக்கு 1,100 பேர் செல்லும் வகையில் ரோப் கார் அமைக்கப்படுகிறது.
****

அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிப்பு
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
கவர்னர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களிலிருந்தும் ஒரே நேரத்திலதொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*****
திருப்பதி பாலாஜி கோவிலில் ப்ரோக்கர் மோசடி ; தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் மொத்தம் 7,500 தங்கும் அறைகள் உள்ளன. இதில் உள்ள 3,500 அறைகள் சி.ஆர்.இ. அலுவலகத்தில் இருந்து நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் வழங்கப்படுகிறது.மேலும் 1,580 அறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்வதற்கும், 400 அறைகள் நன்கொடையாளர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் 450 அறைகள் வருகைப் பதிவுக்கு உட்பட்டவையாக வழங்கப்படுகின்றன. இதையடுத்து மீதமுள்ள அறைகள் நேரடியாக வரும் விஐபிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ஆதாரை பயன்படுத்தி புரோக்கர்கள் விஐபி அறைகளை அதிகளவில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். மேலும் இந்த அறைகளை 48 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பதால், ஒரு பக்தர் தரிசனத்தை முடித்துவிட்டு அறையை காலி செய்தவுடன் அதே அறையை அடுத்தடுத்து 2 அல்லது 3 பக்தர்களுக்கு கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சாமி தரிசனம் செய்யாமல் சுற்றுலா வந்து தங்கிவிட்டு செல்வதற்கும் இந்த அறைகளை பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது . இதைத் தடுக்க தேவஸ்தானம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
*****
கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோயில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும் சினிமா பாடல்களை பாடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின்போது வளாகத்திற்குள் இசைக் கச்சேரி நடத்தப்பட்டதாகவும்,
அதில், பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், ஆகையால் கோயிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான இந்து அறநிலையத்துறை தரப்பு கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்றும், அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிய அவகாசம் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும் என்றும், பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
*****
மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி வருமானம் : படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதை!

பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், படகு உரிமையாளர் ஒருவர், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல், மகா சிவராத்திரி வரை 45 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரமே விழாக் கோலம் கொண்டிருந்தது. உலகமெங்கும் இருந்து சுமார் 66 கோடி பக்தர்கள், மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இவ்வளவு மக்கள் ஒரு இடத்தில் கூடிய போதிலும், ஒரு குற்றச் சம்பவங்கள் கூட நடக்கவில்லை. துன்புறுத்தல், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இதுவே மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பெரிய சான்றாகும் என்று கூறப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. 45 நாட்களில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது.
ஹோட்டல் தொழிலில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையில் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்குக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. போக்குவரத்து துறை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கோயில் சார்ந்த பொருட்கள் மற்றும் ஆன்மிக பூஜை பொருள்கள் விற்பனையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நன்கொடையாக மட்டும் 660 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சுங்கச்சாவடிகள் மூலம் 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதர வருவாய் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
மகா கும்பமேளாவுக்கு செலவு செய்யப்பட்ட 7500 கோடி ரூபாய் கும்பமேளாவுக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பிரயாக்ராஜின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப் பட்டது.
மகா கும்பமேளாவுக்காக மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. 14 மேம்பாலங்கள், 9 சுரங்கப்பாதைகள் மற்றும் 12 வழித்தடங்கள் கட்டப்பட்டன. நவீன விமான நிலைய முனையம் அமைக்கப்பட்டது.
இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் நாட்டின் திட்டமிடப்பட்ட 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மகா கும்பமேளாவின் மிகப்பெரிய பொருளாதார வெற்றியைக் குறிப்பிட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் ஒரு குடும்பம் 130 படகுகளை வைத்து குடும்பத் தொழிலாக படகு தொழில் செய்து வருவதாகவும், ஒவ்வொரு படகு மூலமும் 50,000 ரூபாய் முதல் 52,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்தார்.

மகா கும்பமேளா நடந்த 45 நாட்களில் அந்த குடும்பம் 30 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. ஒவ்வொரு படகின் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது.
இதுபோல், படகோட்டிகளில் பலர் நாள்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியதாக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், மகா கும்பமேளா திருவிழா மிகப்பெரிய பொருளாதார வெற்றியாகவும் அமைந்து விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
****


பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
புகழ்பெற்ற ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா மார்ச் 05ம் தேதி புதன்கிழமை துவங்கி, மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடை பெறுகிறது . பொங்கல் வைக்கும் விழா மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கூடுவார்கள். இந்த பொங்கல் வைக்கும் திருவிழாவின் போது ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவலும் நடைபெறும்.
திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், பார்வதியின் மறு வடிவமான கண்ணகி பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.
****
கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்
கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது ,” என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோவில்களில் ஒரு கோவிலை தனியாக பிரிக்கக் கோரி கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.
அப்போது, ஜாதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர், கோவில் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் நிர்வகிக்கலாம். வழிபடலாம். ஜாதி என்பது மதத்தின் பிரிவு அல்ல. ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மத போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொதுக்கோவில்கள் குறிப்பிட்ட ஜாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்துகின்றனர். எந்த கோவிலுக்கும் எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது. கோவில் ஜாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
******
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க பயங்கரவாதி சதி அம்பலம்
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள மில்கிபூரைச் சேர்ந்த அப்துல் ரெஹ்மான் ஃபரிதாபாத்தில் நள்ளிரவு நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹரியானா அருகே இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் 19 வயது அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது ஹரியானாவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, அப்துல், ராமர் கோவிலை பலமுறை உளவு பார்த்ததாகவும், அனைத்து தகவல்களையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் ராமர் கோவிலை வெடிக்க சதி செய்தது அம்பலமானது.
தாக்குதலின் போது வீட்டிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
*****
ஹோலி பண்டிகை ; ஹிந்து அமைப்புகள் கோரிக்கை
புதுடெல்லி: மார்ச். 6- உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனில் பிரஜ் ஹோலி கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ம் தேதி ஹோலி பண்டிகை தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உள்ளூர் முஸ்லிம்களும் பங்கேற்பது வழக்கம். இதற்கு தடை விதிக்க உ.பி.பாஜக எம்எல்ஏ.வும், இந்து அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்
.இதுகுறித்து மதுரா பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி கூறும்போது, “இந்து பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சமூக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. எங்கள் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பதன் மூலம், அவர்கள் ‘காதல் ஜிஹாத்’ மற்றும் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், முஸ்லிம்கள் இந்து பண்டிகைகளை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.
அகில இந்திய சந்த் சமிதி இந்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம்கள் வேடிக்கையை விரும்புகின்றனர். எனவே, பிருந்தாவன் ஹோலி பண்டிகைகளில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை முழுமையாக யோகி அரசு தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
*****

திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்ய மார்ச் 24-ல் முடிவு – ஐகோர்ட்
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது தொடர்பாக வரும் 24ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
மதுரைவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இதன் தென்பகுதியில் உமையாண்டார் குகைக் கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இதன் அருகே உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில், கடந்த ஜனவரி மாதம் ஆடு, கோழி போன்றவை பலியிட்டு சமபந்தி உணவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இது கோயில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாளில் திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கான அனுமதி வழங்குமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தது.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
****
அடுத்த ஒளிபரப்பு , மார்ச் மாதம் 23-ஆம் தேதி
லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
****
அடுத்தவாரம் அதாவது மார்ச் பதினாறாம் தேதி ஒளிபரப்பு கிடையாது ஆகையால் மார்ச் மாதம் 23-ஆம் தேதி சந்திப்போம்.
வணக்கம்.
—SUBHAM—
tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல் , 9-3-2025 , world hindu news, in tamil,