Post No. 14,290
Date uploaded in Sydney, Australia – 11 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆசைக்கு வெட்கமில்லை! யாருக்கு எதில் நினைப்பு ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை மூன்று
யாருக்கு எதில் நினைப்பு?
9. இவர்க்கு இதில் நினைவு
ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு
நல்லறிவு ளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்தி லேநினைவு மன்னர்க்
கிராச்சியந் தன்னில்நினைவு
ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு
அஞ்சாத் திருடருக்கிங்
கனுதினம் களவிலே நினைவுதன வணிகருக்
காதாய மீதுநினைவு
தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
தனில் நினைவு கற்பவர்க்குத்
தருகல்வி மேல்நினைவு வேசியர்க் கினியபொருள்
தருவோர்கள் மீதுநினைவு
மானபர னுக்குமரி யாதைமேல் நினைவெற்கு
மாறாதுன் மீதுநினைவு
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
விளக்கம்
ஞானிகளுக்கு – மோட்சம்/ வீடுபேறு ;
அறிவாளிகளுக்கு – தர்மம் ;
மன்னர் களுக்கு- நாட்டின் நலம்;
காமவெறியார்க்கு – பெண்கள்;
திருடர்களுக்கு – மோசடி, ஏமாற்று, திருட்டு
வணிகர்களுக்கு – லாபம் அடித்தல்;
விவசாயிகளுக்கு – பயிரிடுதல்;
மாணவர்களுக்கு – படிப்பு/ கல்வி;
வேசியார்க்கு – பணமுள்ள ஆட்கள்;
மானமுள்ளவர்களுக்கு – மதிப்பு, மரியாதை ;
எனக்கு – முருகா, உன் மீது மாறாத பக்தி
. ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு.’ — அதாவது ஆசையை விட்டால் மோட்சம் கிடைக்கும். எந்த ஆசையை ? காமினி -காஞ்சன ஆசையை என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர்
காமினி- பெண்ணாசை; காஞ்சன- பொன் ஆசை/ பணத்தின் மீது ஆசை
எதை எப்படி டையலாம் ?
வேண்டுதல் வேண்டாமை இலான் உடைய திருவடிகளை, அதாவது பற்றற்றவன் பாதங்களை பிடித்தால் பற்று ஓடிப்போகும் என்பான் வள்ளுவன்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.—-குறள் 350
****
கயமை எனும் அதிகாரத்தில் திருடர்களைக் கண்டு பிடிப்பது கடினம் என்கிறார் வள்ளுவர்
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில—.குறள் 1071
பரிமேலழகர் உரை:
மக்களே போல்வர் கயவர் – வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் – அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.
*****
விலைமாதர்கள் பற்றி வள்ளுவர் சொன்னது
அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா
ரின்சொல்லிழுக்குத் தரும்.-911
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
****
ஆசை வெட்கம் அறியாது
10. இவர்க்கு இது இல்லை
வேசைக்கு நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
வேந்தர்க்கு நன்றியில்லை
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை
மிலேச்சற்கு நிறையதில்லை
ஆசைக்கு வெட்கம்இலை ஞானியா னவனுக்குள்
அகம்இல்லை மூர்க்கன்தனக்
கன்பில்லை காமிக்கு முறையில்லை குணம்இலோர்க்
கழகில்லை சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்க சுத்தியிலை யாவும்உணர்
புலவனுக் கயலோர்இலை
புல்லனுக் கென்றுமுசி தானுசிதம் இல்லைவரு
புலையற்கி ரக்கமில்லை
மாசைத் தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
வள்ளிக் கிசைந்த அழகா
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
யாரிடத்தில் எது இருக்காது என்று குருபாததாசர் ஒரு பட்டியலே தருகிறார்
திருடனுக்கு – சொந்தக்காரர் கிடையாது;
அரசர்க்கு- நன்றி கிடையாது;;
ஏழைகளுக்கு – விலைமாதர் தொடர்பு கிடையாது;;
மிலேச்சர்க்கு/ இழிந்தவர்களுக்கு – ஒழுக்கம் கிடையாது; ;
ஆசைக்கு வெட்கம் கிடையாது;
அதிக விருப்பமுடையவனுக்கு- நாணம் இல்லை
ஞானியானவனுக்கு- நான் என்னும் செருக்கும் இல்லை,
கொடியவனுக்கு– அன்பு இல்லை,
காமத்தாலே அறிவு மயங்கியவனுக்கு — எது நல்லது முறையானது இல்லை,
குணமில்லாதவர்க்கு – அ ழகினால் பயன் இல்லை.
நல்ல உள்ளம் படைத்தோர் பூஜைகளுக்கு- சுத்தம் பற்றிய விதிமுறைகள் இல்லை,
புலவனுக்கு – அயலோன் இல்லை ; யாதும் ஊரே யாவரும் கேளிர்
அற்பனுக்கு — தக்கதும் தகாததும் இல்லை,
புலையற்கு- இரக்கம் இல்லை
களங்கமில்லாத் திங்கள் போன்ற முகத்தையுடைய தெய்வயானையுடன்,வள்ளிக்கும் விருப்பமான அழகனே!,
மயிலேறி……..குமரேசனே!
என்று சொல்லி செய்யுளை முடிக்கிறார் குருபாததாசர்
****
ஆசையை விட்டால் கஷ்டம் இல்லை என்கிறார் வள்ளுவர்
யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.341
*****
அஹங்காரம், மமகாராம் இல்லாதவன் தேவலோகத்துக்கும் மேலான உலகத்தை அடைவான் என்பது வள்ளுவன் வாக்கு
‘யான்’, ‘எனது’, என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.346
****
இந்த சத்ய சாயிபாபா பஜனையையும் ஒப்பிடலாம்
ஹரி பஜன பினா சுக சாந்தி நஹி…
ஹரியின் பஜனை இல்லாமல் சுகமும் சாந்தியும் இல்லை…
ஹரி நாம பினா ஆனந்த நஹி…
ஹரியின் நாமம் இல்லாமல் ஆனந்தமும் இல்லை…
பிரேம பக்தி பினா உத்தார நஹி…
தூய அன்பு இல்லாமல் கடைதேறல் இல்லை…
குரு சேவ பினா நிர்வாண நஹி…
குருவின் தொண்டு இல்லாமல் முக்தி இல்லை…(ஹரி பஜன…)
ஜப த்யான பினா சம்யோக நஹி…
ஜபமும் தியானமும் இல்லாமல் ஆன்மிக பயிற்சி இல்லை…
பிரபு தரிச பினா பிரக்ஞான நஹி…
இறை காட்சி இல்லாமல் தன்னுணர்வு இல்லை…
தயா தர்ம பினா சத்கர்ம நஹி…
கருணை கொடை இல்லாமல் நற்காரியம் இல்லை…
பகவான் பினா கோயி அப்ன நஹி…
பகவான் இல்லாமல் நமக்கு எவரும் இல்லை…
ஹரி நாம் பினா பரமாத்மா நஹி…
ஹரி நாமம் இல்லாமல் இறைவன் இல்லை…(ஹரியின் நாமமே இறைவன்)
****
ஆசை பற்றிய பழமொழிகள்
592. ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.
His mind is fixed upon her, his body is on the mat.
593. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
Sixty days of excessive desire, thirty of enjoyment; when the ninety are over, the remaining time is as useless as a worn-out broom.
594. ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.
If evil desire spring not sorrow will not approach.
595. ஆசை உண்டானால் பூசை உண்டு.
If there be heartfelt love, there will be deferential regard.
Spoken of a devoted wife who has a cruel husband.
596. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
As long as desire continues, there will be anxiety also.
597. ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை.
Persons of inordinate desire have no shame.
598. ஆசைக்கு அளவில்லை.
Desire has no limits.
599. ஆசை சொல்லி மோசம் செய்கிறதா?
Is it to deceive after using enticing words ?
600. ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது?
What remedy is there for love-sickness ?
601. ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
As desire increases, anxiety increases.
602, ஆசை பெரிதோ , மலை பெரிதோ?
Which is greater, (human) desire or a mountain?
603. ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.
What was desired is now disgusting.
604. ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே.
She beat him with the winnowing fan to banish all his desires.
605. ஆசை வெட்கம் அறியாது.
Desire knows not shame.
606. ஆசை வைத்தால் நாசம்.
Cherished desire ends in ruin.
—subham—-
Tags– ஆசைக்கு வெட்கமில்லை, யாருக்கு எதில் நினைப்பு ?, குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை மூன்று, ஹரி பஜன பினா சுக சாந்தி நஹி, ஆசை வெட்கம் அறியாது, பழமொழிகள்