
Post No. 15,306
Date uploaded in London – 25 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இது அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாடல்களில் மிக முக்கியமான பாடல் . காரணம் என்னவெனில் பல அரைவேக்காடுகள் இப்போது தொல்காப்பிய நூலைச் சிதைத்து வருகின்றனர். த்ருண தூமாக்கினி என்னும் பிராமணன்தான் தொல்காப்பியன் என்று உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதினார்; அதை மறைத்து தொல்காப்பியருக்கு மீசை வைத்து அவரது பூணுலை மறைக்கும் வகையில் ஒரு மேல் துண்டினையும் போட்டு, உலகத் தமிழ் மகாநாட்டு மலர்களில் படம் வரைந்துள்ளன.
.jpg)
அது மட்டும் அல்லாமல் அவரே பொருள் அதிகாரத்தில் பயன்படுத்திய சூத்திரம் என்ற சொல்லிய மறைத்து அவர் நூற்பா செய்ததாக எழுதியும் வருகின்றன ; இதை வீட வேடிக்கை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்பதை மாற்றி , தாமோதரம் பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்றோரை அவமானப்படுத்திடும் வகையில் அதிகாரத்துக்குப் பதில் இயல் என்ற புதிய சொல்லை நுழைத்துள்ளன.
இவர்களுக்கு செமை அடி கொடுக்கிறார் அருணகிரி நாதர்; அவரே 500 ஆண்டுகளுக்கு முன்னர் பொருள் அதிகாரம் பகுதி இருந்ததைப் பாடி அவர்களின் மூக்கை உடைத்துவிட்டார்.
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக …… மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள …… இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட …… முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது …… பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு …… ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர …… குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு …… மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார …
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற
பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,
வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் …
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திருமுகங்களையும்,
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் … சிறப்பு உற்று
ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,
நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் …
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி
ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,
ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட
மகள் … முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்
மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் … பக்தர்களின்
பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்
உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,
ஆராயும் நீதி வேலும் மயிலும் … நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்
உனது வேலையும் மயிலையும்,
மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் … ஞான ஸ்வரூபியான
கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் … மிகக்
கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன
அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,
வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய
சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …
நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்
அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்
பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,
ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …
ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக்காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே,
முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு
மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு
எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்
சூரியனை மறைத்து வைத்த
கோபாலராய நேயம் உள திரு மருகோனே … கோபாலர்களுக்கு
அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்
வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும்
காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …
கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்
வீற்றிருக்கும் பெருமாளே.
*****
* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது
திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று
எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி
வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் – திருவிளையாடல் புராணம்.
** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.
– திருவிளையாடல் புராணம்.
****

தவறுகளைத் திருத்துவோம் : எனது கருத்து
மேலே கூறிய இறையனார் அகப்பொருள் , திருப்புகழ் பாடல் வரியிலும் இல்லை; திருவிளையாடல் புராணப்பாடல்களிலும் இல்லை; அத்தோடு காலத்துக்குப் பொருந்தாத காலவழுவமைதியும் உள்ளது; கபிலர், பரணர், நக்கீரர் பாடிய காலத்தில்– அதாவது சங்க காலத்தில்- இறையனார் அகப்பொருள் உரை இல்லை. அப்படி ஒரு நூலினை சங்க காலத்தில் எவரும் அறியார் ; அக்காலத்தில் உரைநடையும் இல்லை.
****
இறையனார் அகப்பொருள் உரை
இந்த நூல் ஏழாம் நூற்றாண்டு CE வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை CE எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.
****
ஆகவே இதில் குறிப்பிடும் நக்கீரர் சங்க கால நக்கீரர் இல்லை சைவத் திருமுறைகளில் நக்கீரர், கபிலர் பரணர் என்ற மூவர் உள்ளார்கள் அவர்களில் ஒருவராக இருக்கலாம் .
இன்னொரு கேள்வி எழலாம் .
திருப்புகழ் பாடலில் தொல்காப்பியம் என்ற சொல் அல்லது நூலின் பெயர் இல்லையே என்று. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல்களில் எல்லாம் பொருள் அதிகாரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் மட்டுமே வந்துள்ளது எல்லாவற்றுக்கும்மேலாக திருவிளையாடல் புராணத்தில் சங்கப் புலவர்களிடையே எழுந்த வாதம் அவர்களுடைய பாடல்களைப் பற்றியதே ; இதைப் பரஞ்சோதி முனிவர் அழகாகப் பாடியுள்ளார் . அவர்கள் இறையனார் அகப்பொருள் உரை பற்றி சண்டையிட்டனர் என்ற செய்தி தி. வி.பு ராணத்தில் இல்லை. இதோ ஒரிஜினல் பாடல்கள்:
திருவிளையாடல் புராணம்
55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் (2597 -2610 )
2597. காமனைப் பொடியாக் கண்ட கண் நுதல் தென் நூல் கீர
நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம் கொன்றைத்
தாமனச் சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற
ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் சொல்வாம்.
2598. அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.
2599. தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த இப் பாடல் தம் முள்
விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டிப்
பழுதறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் கேட்டு
முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண் மூர்த்தி.
2600. இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும்
உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு எல்லாம்
கரு என முளைத்த மூல இலிங்கத் துணின்றும் காண்டற்கு
அரிய தோர் புலவனாகித் தோன்றி ஒன்று அருளிச் செய்வான்.
2601. இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று
அம் மா நிதிக் கிழவோன் மனை குண சாலினி அனையார்
தம் மாதவப் பொருட்டால் வெளிற்று அறிவாளரைத் தழுவும்
பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள்.
2602. ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
2603. வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன்
என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும்
நன்று ஆனவும் தீது ஆனவும் நயந்து ஆய்ந்து அதன் தன்மை
குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன்.
2604. மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசையக்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டான் முடி துளக்காக்
கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம்
எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம் சென்றான்.
2605. பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.
2606. மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர்
பொருளை
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர்
பொருளைப்
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும்
ஒருங்கே
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும்
தேர்ந்தே.
2607. இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.
2608. நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம்
சுவை உண்டே
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம்
பனித்தான்
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை
அளித்தான்
விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி
திளைத்தான்.
2609. பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்.
2610. உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.
*****
இது ஒரு புறமிருக்க அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் திருக்குறளிலும், சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் மட்டுமே உள்ளன; இவை மூன்றும் சங்க காலத்துக்குப் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்டவை ; நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்; தொல்காப்பியர் என்னும் த்ருண தூமாக்கினி முனிவர் , அகத்தியர்- ராமபிரான்- ராவணன் காலத்தில் வாழ்ந்திருக்கலாம்; அவர் சொன்ன இலக்கண விதிகளை யாரோ ஒருவர் அவர் பெயரில் தொகுத்து பிற்காலத்தில் நமக்குத் தந்துள்ளார் ; இது சிலப்பதிகாரத்துக்கும் பொருந்தும் ; சேரன் செங்குட்டுவன், சங்க கால மன்னன் என்பதில் ஐயமில்லை அவன் காலக் கதையைச் சொல்லும் நூல் சிலப்பதிகாரம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்தது .
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய எல்லா நூல்களிலும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் சங்க காலத்துக்குப் பின்னரே வைத்துள்ளனர் என்பதையும் நினைவிற்கொள்ளவேண்டும்.
—subham—Tags:திருப்புகழ் , தொல்காப்பியம், பொருள் அதிகாரம், அருணகிரி