எல்லாவற்றிற்கும் காரணம் தங்கம் தான்! (Post No.15,394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,394

Date uploaded in London – 4 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எல்லாவற்றிற்கும் காரணம் தங்கம் தான்! 

ச. நாகராஜன் 

அருமையான கருத்துக்களை விளக்கும் சில சுபாஷிதங்கள் இதோ:

தங்கமே எல்லாவற்றிற்கும் காரணம்!

யஸ்யாஸ்தி வித்தம் ச நர: குலீன: ச பண்டித: ச ஸ்ருத்தவான் குணக்ஞ: |

ஸ ஏவ வக்தா ஸ ச தர்ஷனீய: சர்வே குணா: காஞ்சனமாஸ்ரயந்தி ||

எவனிடம் செல்வம் இருக்கிறதோ,

எவன் ஒருவன் நல்ல குலத்தில் பிறந்திருக்கிறானோ,

எவன் ஒருவன் நன்கு கல்வி கற்றிருக்கிறானோ,

எவன் ஒருவன் அறிவார்ந்த பண்டிதனாக இருக்கிறானோ,

எவன் ஒருவன் குணங்களை அறிந்து கொள்கிறானோ,

எவன் ஒருவன் நன்கு மதிப்பீடு செய்ய வல்லவனாக இருக்கிறானோ,

எவன் ஒருவன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறானோ,

இந்த அனைத்து விஷயங்களுமே தங்கத்தைப் பொறுத்துத் தான்

இருக்கிறது.

(அதாவது அவனிடம் செல்வம் இருந்தால் மக்கள் அவனை எல்லா விதத்திலும் உயர்த்தி விடுவர் என்பது பொருள்.)

சொந்த கர்மத்தின் விளைவே சுகமும் துக்கமும்!

 சுகஸ்ய துக்கஸ்ய ந கோபி தாதா பரோ ததாதீதி குபுத்திரேஷா |

அஹம் கரோமீதி வ்ருதாபிமான: ஸ்வகராசூத்ரக்ரதிதோ ஹி லோக: ||

கருட புராணத்தில் வரும் ஸ்லோகம் இது.

எவனுமே சுகத்தையோ அல்லது துக்கத்தையோ கொடுக்கக்கூடியவர் அல்ல; யாரோ ஒருவர் அவற்றைக் கொடுக்கிறார் என்று நினைப்பது தவறான புரிதலாகும். “நான் செய்கிறேன்” என்பது அகங்காரத்தினால் சொல்லும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஏனெனில் அனைவருமே அவரவர்களின்  சொந்தச் செயல்களினால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கவிஞனே முதல் சிருஷ்டிகர்த்தா!

 நாமரூபாத்மகம் விஸ்வம் யதிதம் த்ருஷ்யதே த்விதா |

தத்ராஸ்த்யஸ்ய கவிர்வேதா த்வீதியஸ்ய சதுர்முக: ||

 இந்த பூமியில் நாமமும் ரூபமும் இரண்டாக இருப்பதாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முதலாவதைப் படைப்பதில் கவிஞன் திகழ்கிறான். அடுத்தது நான்முகனால் (பிரம்மா) படைக்கப்படுகிறது.

கவிஞனின் புகழ் பாடும் ஸ்லோகம் இது!

செயலில் செய்து காட்டு! 

மனஸா சிந்திதம் கார்ய வாசா நைவ ப்ரகாஷயேத் |

மந்த்ரக்ஷணகூடாத்மா கார்யஸித்திம் ப்ரகாஷயேத் ||

மனதில் சிந்திக்கப்படும் ஒன்றை வார்த்தைகளால் வெளிப்படுத்தக் கூடாது. மந்திரங்களை ரகசியமாக மனதில் இருத்தும் ஒருவன் சாதனைகளால் அடையும் போது அதை வெளிப்படுத்துவான். 

மூர்க்கனின் அடையாளங்கள் மூன்று விதம்! 

முகம் பத்மதலாகாரம் வாணீ சந்தனஷீலதா |

ஹ்ருதயம் கர்தரீதுல்யம் த்ரி விதம் தூர்த்த லக்ஷணம் ||

முகமோ தாமரை இதழ்கள் போல இருக்கும்; பேச்சோ சந்தனம் தரும் குளிர்ச்சியைத் தரும்; இதயமோ கத்தரிக்கோல் போல இருக்கும். ஆக ஒரு மூர்க்கனின் குணாதிசய அடையாளங்கள் இப்படி மூன்று விதமாக இருக்கும்.

**

Leave a comment

Leave a comment