ராமாயணத்தில் வரங்கள் (34) மைநாகத்திற்கு இந்திரன் வரம் அருளியது (Post No.15,403)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,403

Date uploaded in London – 7 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (34)    

ராமாயணத்தில் வரங்கள் (34) மைநாகத்திற்கு இந்திரன் வரம் அருளியது!

ச. நாகராஜன்

 சுந்தர காண்டத்தில் நாம் ஐந்து வரங்கள் பற்றிய விஷயங்களைக் காண்கிறோம்.

முதலாவதாக முதல் அத்தியாயத்தில் இந்திரன் மைநாக மலைக்கு அருளிய வரத்தைக் காண்கிறோம். 

லங்கைக்குச் செல்வதற்காக ஆகாயத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்த ஹனுமானைப் பார்த்த சமுத்திர ராஜன் ஹனுமாருக்கு உதவி செய்வதற்காக தன்னுள்ளே மறைந்திருந்த சுவர்ணமயமான மைநாக மலையைப் பார்த்து மலையைச் சற்று மேலே எழும்புமாறு கூறினான். இதனால் ஹனுமார் மலையின் மீது அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கலாம் என்பது சமுத்திர பகவானின் எண்ணம்.

இதற்கிணங்க மைநாக மலை கடலிலிருந்து மேலே எழும்பியது. 

கடலிலிருந்து பொன்மயமாக மேலெழும்பிய மைநாக மலையைக் கண்ட ஹனுமார் அதை ஒரு இடையூறாகக் கருதினார். அதைத் தனது மார்பினால் தள்ளி வீழ்த்தினார்.

அவரது சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்த மைநாகம் ஒரு மானிட ரூபத்தை எடுத்து ஹனுமாரை நோக்கி, “யாராலும் செய்ய முடியாத காரியத்தை நீர் செய்தீர். என்னுடைய சிகரத்தில் சற்று தங்கி இளைப்பாறும். வானரர்களில் சிறந்தவராக உம்மை மதிக்கிறேன். நீர் என்னால் பூஜை செய்யத் தக்கவர். அத்தோடு இன்னொரு விஷயமும் உண்டு. முன்பு கிருத யுக காலத்தில் எல்லா மலைகளும் பறக்கக்கூடிய படி இறக்கைகளுடன் இருந்தன. அவைகள் அங்கும் இங்கும் பறப்பதால் ரிஷிகள் உள்ளிட்டவர்கள் பெரிதும் பயந்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் மலைகளின் இறகுகளை ஆயிரம் துண்டங்களாக வெட்டினான். அப்போது மஹாத்மாவான வாயுதேவரால் நான் விரைவாக தள்ளி விடப்பட்டேன், இந்த உப்பு நீர்க் கடலில் ஆழ்ந்து அமுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டேன். ஆகவே உமக்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. என்னிடம் களைப்பாறும்; எனது பூஜையை ஏற்றுக் கொள்ளும்” என்று கூறியது.

உடனே ஹனுமார், “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறென். ஆனால் நடுவில் தங்கி நிற்பதில்லை என்ற பிரதிக்ஞையை நான் செய்திருக்கிறேன்.” என்று கூறி விட்டு மலையை ஆரத் தழுவி விட்டுப் புறப்படலானார்.

இதைப் பார்த்த அனைத்து சித்தர்களும் தேவர்களும் சந்தோஷமடைந்தனர். ஹனுமாரைப் புகழ்ந்தனர். இந்திரனும் மகிழ்ந்து மைநாகத்தைப் பார்த்துக் கூறலானன்: 

ஹிரண்யநாபசைலேந்த்ர பரிஷ்டோஸ்மி தே ப்ருஷம் | 

அபயம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதாசுகம் |

சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 149,150 

ஹிரண்யநாப – பொன்முடிகளை உடைய

சைலேந்த்ர – மலையரசனே!

தே – உன்னிடத்து

ப்ருஷம் – மிகவும்

பரிதுஷ்ட: – சந்தோஷமுடையவன்

அஸ்மி – ஆகிறேன் 

சௌம்ய – சௌம்ய

தே அபயம் – உனக்கு அபயம்

ப்ரயச்சாமி – கொடுத்தேன்

யதா சுகம் திஷ்ட – சுகமாக வாழ்ந்திரு

என்று இப்படி இந்திரன் கூறவே மைநாகமும் சந்தோஷம் அடைந்தது.

ச வை தத்தவர: ஷைலோ பபூவாவஸ்திஸ்ததா!

சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்: 154

தத்தவர: – வரத்தைப் பெற்ற

ச: ஷைல: வை – அந்த மலையும்

ததா – அப்போது

அவஸ்தித: – மேலே நிலைத்து நிற்பதாக

வபூ: – ஆயிற்று 

ஹனுமாரும் மலையக் கடந்து சென்றார். 

இப்படியாக இந்திரன் மைநாகத்திற்குக் கொடுத்த வரத்தை சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.

** 

Leave a comment

Leave a comment