

Post No. 15,413
Date uploaded in Sydney, Australia – 11 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 17
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 17
***
திருத்தணி திருப்புகழ் பாடல்கள்
ஏது புத்திஐ யாஎனக்கு … எனக்கு புத்தி ஏது ஐயனே?
இனி யாரை நத்திடுவேன் … இனிமேல் நான் யாரைச் சென்று
விரும்பி நாடுவேன்?
அவத்தினிலே யிறத்தல்கொலோ … வீணாக இறப்பதுதான் என்
தலைவிதியோ?
எனக்குனி. தந்தைதாயென்றேயி ருக்கவு … எனக்கு நீயே தாயும்
தந்தையுமாக இருந்தும்
நானு மிப்படியே தவித்திடவோ … நான் இந்த விதமாகவே
தவித்திடலாமா?
சகத்தவரேசலிற்படவோ … உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்
ஆளாகலாமா?
நகைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா … என்னை
இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்
சேர்த்துக்கொள் ஐயனே*,
தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில் … என் நிலை
தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,
பார்நகைக்குமையா … உலகோர் நகைப்பார்கள் ஐயனே,
தகப்பன்முன் மைந்தனோடி … தந்தையின் முன் குழந்தை
ஓடிச்சென்று,
பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில் … பால் மணம் மாறாத வாயால்
குரலெழுப்பி அழுதால்,
யாரெ டுப்பதெனாவெ றுத்தழ … இந்தக் குழந்தையை யார்
எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக
பார்வி டுப்பர்களோ … இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?
எ னக்கிது சிந்தியாதோ … எனக்கு இந்த உண்மை சிந்தையிலே
தோன்றலாகாதோ?
அழுதால் அவனைப் பெறலாமே ; மாணிக்க வாசகரும் இப்படிக்கு கதறுகிறார்
இதோ மாணிக்கவாசகரின் கதறல்:–
யானே பொய் என் நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
யானால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்துறுமாறே
பொருள்:-
“தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை அடையலாமா?”
ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது?
ராமகிருஷ்ண பரமஹம்சர்:
“உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமா? மனைவி, மக்கள், பணம் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார், சமையல் முதலிய வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள், குழந்தையின் பசியைப் போக்குவதில்லை; எனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை ‘கோ’வென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், சாதம் பாதி வடித்துக் கொண்டிருந்தாலும் கூட அதை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்”.
இத்தகைய அன்பு, இறைவனிடத்திலும் இருக்கவேண்டும் என்பார் பரமஹம்சர். அப்படியிருந்தால், அழும் குழந்தையிடம் தாயார் ஓடிவருவதுபோல இறைவனும் ஓடிவருவார் என்கிறார்.
***
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
சம்பந்தரும் சொன்னார் !
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் திருவலிவலம்
தாயும் நீயே தந்தை நீயே
சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான்
ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள்
ஐவர் நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன்
வலிவலம் மேயவனே.
ஆதி சங்கரரும் மாத்ரு பஞ்ச்கத்தில் தாயைப் புகழ்கிறார்
***
விபூதியின் மஹிமை

மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர
அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே … சத்திய வேத
சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும்
விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே.
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி
சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே … கரு நிறம்
கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும்
எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள்,
அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய
பார்வதியின் மகனே,
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து
அருள் சற்குரு … திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில் நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே,
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே. …
நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
சமயச் சண்டை வேண்டாம் !
கவடுற்ற சித்தர் … வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும்,
சட் சமயப்ர மத்தர் … ஆறு* சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும் பேர்வழிகளும்,
நற் கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக் கருதி … சிறந்த
கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து,
பெயர்க்குறித்து … அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து,
உருவர்க்கம் இட்டு … உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம்
முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி,
இடர்க் கருவிற்புகப் பகுத்து உழல்வானேன் … துன்ப மயமான
கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்?
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும் … பொன் சரட்டில்
கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும்,
மிக்க சரப்பளிக்கு எனப் பொருள்தேடி … மேலான வைர
அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப்
பொருளைத் தேடிய மக்கள்,
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின் … அனைத்திலும்
ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது
சரணப்ரசித்தி சற்றுணராரோ … திருவடிகளின் பெருமையைச்
சற்றேனும் உணரமாட்டார்களோ?
ஆறு சமயங்கள்: காணாபத்யம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம்,கெளமாரம் என்பனவாம்.
***
திருத்தணி என்றால் என்ன பொருள் ?
பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி
இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட … அறிவுள்ள (கூன்)
பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,
சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்
புலவோனே … சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,
புகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய
திருஞான சம்பந்தரே,
தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்
புதல்வ … அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,
திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,
நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு …
சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும் பூவைத் தருகின்ற
செருத்தணியினில்** சரவணப் பெருமாளே. … திருத்தணிகையில்
(வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.
* ‘புகலி’ சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.
** செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில் தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர் திருத்தணியாக மாறியது.
***
மீண்டும் சம்பந்தர்
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர்
கொடுத்திடும் அரிவை குறத்தியொடு … (திருஞான சம்பந்தராக
வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில்
ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன்
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே. …
அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.
***
மன்மதனின் ஐந்து மலர் அம்புகள்
குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட
குறைப் பிறையாலே … (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல
மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்),
* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:
முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.
கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை. அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.
***
சுக்ரீவனும் கற்பக விநாயகரும் (கணபதியும்)
காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து
குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம
சற்குணன் மருகோனே … (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை
அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற
அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்
கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,
உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)
மருகனே,
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே … (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே,
***

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் !
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் …… தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் …… கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………

சினத்தவர் முடிக்கும் … முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
தலைக்கும்,
பகைத்தவர் குடிக்கும் … அவர்களைப் பகை செய்தவர்களது
குடும்பத்திற்கும்,
செகுத்தவர் உயிர்க்கும் … அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
சினமாகச் சிரிப்பவர் தமக்கும் … அவர்களைக் கண்டு கோபமாகச்
சிரிப்பவர்கட்கும்,
பழிப்பவர் தமக்கும் … அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
திருப்புகழ் நெருப்பென்று … திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
அழிக்குமென)
அறிவோம்யாம் … யாம் நன்கு அறிவோம்.
நினைத்தது மளிக்கும் … (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
மனத்தையு முருக்கும் … (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
உருக்குவதும்,
பிறவாமல் … மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
நிசிக்கரு வறுக்கும் … இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
அறுப்பதும்,
நெருப்பையு மெரிக்கும் … அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும்,
பொருப்பையு மிடிக்கும் … மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, நிறைப்புகழ் … எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை உரைக்குஞ் செயல்தாராய் … பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
தனத்தன தனத்தந்
திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன … (அதே ஒலியுடன்)
பேரி … பேரிகைகள் முழங்கவும்,
தடுட்டுடு டுடுட்டுண் டென … (அதே ஒலியுடன்)
துடி முழக்கும் … உடுக்கைகள் முழங்கவும்,
தளத்துட னடக்கும் … சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
கொடுசூரர் சினத்தையும் … கொடிய சூராதி அசுரர்களின்
கோபத்தையும்,
உடற்சங் கரித்தம லைமுற்றும் … அறுத்தெறிந்த பிணமலைகள்
யாவையும்,
சிரித்தெரி கொளுத்தும் … புன்னகை புரிந்தே அதிலெழுந்த
அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
கதிர்வேலா … ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
தினைக்கிரி குறப்பெண் … தினைப்பயிர் விளையும் மலைக்
குறவள்ளியை
தனத்தினில் சுகித்து … மார்புற அணைத்து இன்புற்று,
எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. … உயர்ந்தோர்
மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
—subham—
Tags- அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 17
சொல் அழகும், பொருள் வளமும், திருத்தணி, திருப்புகழ், பாடல்கள், நெருப்பு, அழிக்கும், சினத்தவர் முடிக்கும்